Published:Updated:

”வி.ஐ.பி.க்களுக்கு மட்டும் செல்போன் அனுமதிப்பது நியாயமா?” - மதுரை கோயில் பக்தர்கள் புகார்

கோயில் நிர்வாகமும் மாநகராட்சியும், மாநகரக் காவல்துறையும் கோயிலின் பாதுகாப்புக்காக நிறையத் திட்டங்களை நடைமுறைப்படுத்திவருகின்றனர். ஆனாலும், அந்தத் திட்டங்களின் நோக்கம் முழுமையாய் நிறைவேறாமல் போவதற்குக் காரணம், இதுபோன்ற விதிமீறல்களும் வி.ஐ.பி சலுகைகளும்தான்!

”வி.ஐ.பி.க்களுக்கு மட்டும் செல்போன் அனுமதிப்பது நியாயமா?” - மதுரை கோயில் பக்தர்கள் புகார்
”வி.ஐ.பி.க்களுக்கு மட்டும் செல்போன் அனுமதிப்பது நியாயமா?” - மதுரை கோயில் பக்தர்கள் புகார்

க்தர்களின் வாகனங்களுக்குத் தடை. ஆனால், வி.ஐ.பி வாகனங்களுக்கு விதிவிலக்கு. கைப்பேசிக்கு அனுமதியில்லை. முக்கியஸ்தர்களைக் கைப்பேசிகளோடு கோயிலுக்குள் வரவேற்கின்றனர். இப்படி காவல்துறையும் கோயில் நிர்வாகமும் பாரபட்சம் காட்டுவதாக மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் வெளிப்பகுதியில் அமைந்துள்ள சித்திரை வீதிகளில், பல ஆண்டுகளுக்கு முன்பே வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. இந்தப் பகுதியில் பேவர் ப்ளாக் கற்கள் பதித்து, பூங்காக்கள் அமைத்து, ஊழியர்கள் அழகுற பராமரித்துவருகின்றனர். இங்கே, தினமும் நூற்றுக்கணக்கானோர் அதிகாலையில் வாக்கிங் செல்வது வழக்கம். மாலையில் இங்கு மக்கள் அமர்ந்து ஓய்வெடுப்பார்கள். 

”வி.ஐ.பி.க்களுக்கு மட்டும் செல்போன் அனுமதிப்பது நியாயமா?” - மதுரை கோயில் பக்தர்கள் புகார்

எந்த வாகனத்துக்கும் இந்த வீதிகளில் அனுமதியில்லை. ஆனாலும், காவல்துறை வாகனங்கள் மட்டும் ஒய்யாரமாக இங்கே வட்டமடிக்கின்றன. இதனால், நிழலில் ஓய்வெடுக்கும் பக்தர்களுக்குப் பெரும் சிரமம் ஏற்படுகிறது. தரிசனத்துக்காக வரும் நீதிபதிகள், உயர்பதவி அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் வாகனங்கள், கோயில் வாசல் பகுதியில் அணிவகுத்து நிறுத்தப்படுகின்றன. இதைக் கண்டு முகம்சுழிக்கும் பொதுமக்கள், ‘விதிகள் எல்லாம் எளிய மக்களுக்குத்தானா, வி.ஐ.பி-க்களுக்கு இல்லையா?’ எனக் குமுறுகின்றனர்.

கடந்த ஆண்டு மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்தைத் தொடர்ந்து, பக்தர்களின் மொபைல்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கோயிலுக்குள் வரும் பக்தர்களிடம் டோக்கன் தந்து மொபைல்களை வாசல்களிலேயே வாங்கி வைக்கும் கோயில் ஊழியர்கள், ஒவ்வொரு மொபைலுக்கும் 10 ரூபாய் வசூலிக்கின்றனர். மொபைல் மட்டுமன்றி பவர்பேங்க், சார்ஜர் உள்ளிட்ட எந்த வகையான மின்சாதனமும் உள்ளே கொண்டுபோக அனுமதியில்லை. 

ஆனால், கோயில் நிர்வாகிகளும் அர்ச்சகர்களும், காவல்துறையினரும் கோயிலுக்குள் கைப்பேசிகளோடு ‘ஹாயாக’ வலம்வருகின்றனர். பொதுமக்களுள் சிலர், ‘அவர்களின் மொபைல்களில் மட்டும் ‘தீவிபத்து ஏற்படுத்தாத கருவி’ எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா?’ எனக் கிண்டலாகக் கேட்கின்றனர். மேலும், மொபைலுக்கு 10 ரூபாய் வசூலிப்பது மிகவும் அதிகம். மொபைல் பாதுகாப்பு சேவையை இலவசமாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

”வி.ஐ.பி.க்களுக்கு மட்டும் செல்போன் அனுமதிப்பது நியாயமா?” - மதுரை கோயில் பக்தர்கள் புகார்

இப்படி அடுக்கடுக்காய்ப் புகார்கள் வருவதுகுறித்து கோயில் நிர்வாகிகள் தரப்பில் கேட்டோம். “வி.ஐ.பி வாகனங்கள், விட்டவாசல் அருகே நிறுத்தப்படும். ஆட்களை இறக்கிவிட்டதும் ஏதேனும் தனியார் பார்க்கிங்குக்குப் போய்விடும். மீண்டும் அதே பகுதியில் வந்து வாகனங்களில் ஆட்களை ஏற்றிக்கொள்வர். இதுதான் வழக்கம். ஆனால், எல்லா முக்கியஸ்தர்களும் நடந்து வர சம்மதிப்பதில்லை. பெரும்பாலும் பாதுகாப்பு, வயது முதிர்வு காரணங்களால்தான் கோயில் வாசலில் வந்து இறங்குகின்றனர்” என்றனர்.

செல்போன் புகார்குறித்து கேட்டதற்கு, “நிர்வாகம் சம்பந்தமான எங்களுடைய அவசரத் தொடர்பு தேவைகளுக்காகத்தான் நாங்கள் மொபைலை உள்ளே கொண்டு செல்கிறோம். ஆனால், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரின் பரிந்துரைக் கடிதத்தோடு மொபைல் கொண்டுவருகிறவர்கள், அனுமதியின்றி புகைப்படங்கள் எடுத்துவிடுகின்றனர். இப்படிப் பல பிரச்னைகள் சமீப காலமாக நடந்துவருகிறது” என அவர்களும் புலம்பினர்.

சித்திரை வீதிகளில் காவல்துறை, வி.ஐ.பி வாகனங்கள் வருவதுகுறித்து மதுரை நகர் போக்குவரத்துத் துணை ஆணையர் அருண் பாலகோபாலனிடம் பேசியபோது, “பாதுகாப்பு வளையத்தில் இருக்கிற முக்கியமானவர்கள் கோயிலுக்கு வருகைதருகிறபோது அவர்களோடு வாகனங்களை சித்திரை வீதிகளில் அனுமதிப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால், காவல்துறை ரோந்து வாகனங்கள் தினசரி

”வி.ஐ.பி.க்களுக்கு மட்டும் செல்போன் அனுமதிப்பது நியாயமா?” - மதுரை கோயில் பக்தர்கள் புகார்

நாள்களில் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுத்தாத வகையில மாற்று ஏற்பாடு செய்வோம். அதற்கு, கூடிய விரைவில் திட்டமிடுகிறோம்” என்றார்.

மீனாட்சி கோயில் இணை ஆணையர் நடராஜனைத் தொடர்புகொண்டு பேசினோம். “சித்திரை வீதிகளில் வாகனங்களுக்குத் தடை இருக்கு. ஆனா, எந்த வாகனமா இருந்தாலும் காவல்துறை ப்ரோட்டோகால் இருந்தா உள்ளே வரத்தானே செய்யும்” என்றார்.

அவரிடம் மொபைல் குறித்து கேட்டோம். “அடையாள அட்டை இருந்தா மொபைலோட காவல்துறை உள்ள வருவார்கள். மற்றபடி அவருடைய குடும்பத்துக்கோ அவர் சம்பந்தப்பட்டவர்களுக்கோ மொபைல் அனுமதி கிடையாது. ஊழியர்கள் மொபைல் கொண்டுபோகலாமென்று நீதிமன்றமே அனுமதித்திருக்கிறது. பக்தர்களிடம் இலவசமா மொபைலை வாங்கிவைத்தால், எண்ணிக்கை அதிகமாக ஆரம்பிச்சிடும். அதனால, எண்ணிக்கையைக் குறைக்கும் யுக்தியாகத்தான் இந்த விலையை வைத்திருக்கோம். அதோடு, காப்பீடு வசதியும் பண்ணியிருக்கிறோம். மொபைலுக்காகவே 36 பேர் இங்க பணி செய்றாங்க. இலவசம்னா, இந்தச் செலவுகளையெல்லாம் ஈடுகட்ட முடியாது” என்றவரிடம், கோயிலுக்குள் மொபைலில் அனுமதியின்றி போட்டோ எடுத்தது பற்றிக் கேட்டபோது, “அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனா, கண்காணிப்புகளை மீறி இது எப்படி நடந்துச்சுனு தெரியலை” என்றார்.

கோயில் நிர்வாகமும் மாநகராட்சியும், மாநகரக் காவல்துறையும் கோயிலின் பாதுகாப்புக்காக நிறையத் திட்டங்களை நடைமுறைப்படுத்திவருகின்றன. ஆனாலும், அந்தத் திட்டங்களின் நோக்கம் முழுமையாய் நிறைவேறாமல் போவதற்குக் காரணம், இதுபோன்ற விதிமீறல்களும் வி.ஐ.பி சலுகைகளும்தான்!

Vikatan