Published:Updated:

நீதிமன்ற உத்தரவை மீறுகிறதா, கூட்டுறவுத் துறை? - ரேஷன் கடைகளில் நடப்பது என்ன?

நீதிமன்ற உத்தரவை மீறுகிறதா, கூட்டுறவுத் துறை? - ரேஷன் கடைகளில் நடப்பது என்ன?
நீதிமன்ற உத்தரவை மீறுகிறதா, கூட்டுறவுத் துறை? - ரேஷன் கடைகளில் நடப்பது என்ன?

``தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நடத்தப்படும் 35 ஆயிரத்து 232 நியாய விலைக் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த 97 கோடி ரூபாய் செலவாகும்.''

``முறைகேடுகளைத் தடுக்க ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும்" என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆறு மாதங்களாகியும், இந்தத் திட்டத்தை நிறைவேற்றாததால், கண்காணிப்பு கேமரா பொருத்துவதை, கூட்டுறவுத் துறை கைவிடவுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 

ரேஷன் அட்டைகள் `ஸ்மார்ட் கார்டு'களாக மாறினாலும், கள்ளத்தனமாக ரேஷன் பொருள்கள் இப்போதும் விற்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ரேஷன் கடைகளில் வாங்கும் பொருள்கள் குறித்த விவரம் உடனடியாக நமது மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ் வாயிலாக வருகிறது. அங்கு நடைபெறும் ஊழல்களைத் தடுக்கத்தான் இப்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், ரேஷன் கடைகளில் நாம் ஒரு பொருள் வாங்கினால், வேறு ஒரு பொருள் வாங்கியதாக மொபைலுக்குத் தகவல் வருகிறது. இதை ரேஷன் கடைகளில் தெரியப்படுத்தி புகார் கொடுத்தால், அதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இது மீண்டும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கத்தான் ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், உணவுத் துறை அறிவுறுத்தலை ஏற்று, கண்காணிப்பு கேமரா பொருத்தும் முடிவை, கூட்டுறவுத் துறை கைவிட உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறுகிறதா, கூட்டுறவுத் துறை? - ரேஷன் கடைகளில் நடப்பது என்ன?

சென்னை அபிராமபுரத்தில் உள்ள நியாய விலைக் கடையில், கடந்த 2016-ல் கூட்டுறவுத் துறையின் கூடுதல் பதிவாளர் தலைமையில் சோதனை நடந்தது. அப்போது, ரேஷன் பொருள்கள் கள்ளத்தனமாக விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதால், அங்கு பணிபுரிந்த கீதா பணிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, ``அனைத்து ரேஷன் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்" என்று நீதிமன்றம் கூறியது. கூட்டுறவுத் துறையின் கூடுதல் பதிவாளர் இதற்குப் பதிலளித்தபோது, ``தமிழகத்தில் 32,909 ரேஷன் கடைகள் உள்ளன. அனைத்து ரேஷன் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த பெருமளவு நிதி தேவைப்படும். மேலும், அரசிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்த வேண்டும்'' என்று பதிலளித்தார். 

நீதிமன்ற உத்தரவை மீறுகிறதா, கூட்டுறவுத் துறை? - ரேஷன் கடைகளில் நடப்பது என்ன?

அதோடு, ``ரேஷன் பொருள்கள் வாகனங்களில் கொண்டுசெல்லும் வழிகளிலும் கள்ளத்தனமாக விற்பனை செய்ய வாய்ப்புள்ளதால், அதைத் தடுக்க வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தும் திட்டம் உள்ளதா" என அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பிருந்தது. இதுவும் செயல்பாட்டுக்கு முழுமையாக வரவில்லை. இதனால் கள்ளச்சந்தைக்கு ரேஷன் பொருள்கள் அதிகளவில் விற்கப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு வந்துள்ளது. தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நடத்தப்படும் 35,232 நியாய விலைக் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த 97 கோடி ரூபாய் செலவாகும் என்று அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது கூட்டுறவுத் துறை. இதுதொடர்பாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஆறு மாதங்களாகியும், ரேஷனில் இதுவரை கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. இதற்கான காரணத்தை உணவு வழங்கல் துறையும் கூட்டுறவுத் துறையும் இதுவரை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், உணவுத் துறை அறிவுறுத்தலை ஏற்று, ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் முடிவை, கூட்டுறவுத் துறை கைவிட உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர் கூறுகையில், ``இந்தத் திட்டம் நடைமுறையில்தான் உள்ளது. அதை யாரும் நிறுத்தவில்லை. விரைவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்படும்'' என்றார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு