Published:Updated:

ஓரம் போ.. விஸ்வநாதன் வண்டி வருது!

காங்கிரஸ் எம்.பி-யின் சைக்கிள் விசிட்

ஓரம் போ.. விஸ்வநாதன் வண்டி வருது!

காங்கிரஸ் எம்.பி-யின் சைக்கிள் விசிட்

Published:Updated:
##~##
ஓரம் போ.. விஸ்வநாதன் வண்டி வருது!

தொகுதி முழுவதும் சைக்கிளில் சென்று மக்களை சந்திக்கும் பயணத்தைத் தொடங்கி உள்ளார் காஞ்சிபுரம் காங்கிரஸ் கட்சியின் எம்.பி., விஸ்வநாதன். 100 இளைஞர்களும் இவருடன் சைக்கிளில் கூடவே வருகின்றனர். காலை முதல் இரவு வரை கிராமம் கிராமமாகச் சென்று மக்களை சந்தித்து, மனுக்களை வாங்குகிறார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'எம்.பி. பராக்... எம்.பி. பராக்...’ என்று, ஜீப்பில் மைக் கட்டிக் கொண்டு அறிவித்துக் கொண்டே முன்னே செல்கிறது இளைஞர் படை. அதைத் தொடர்ந்து, கூலிங் கிளாஸ், பர்முடாஸ், டி-ஷர்ட் அணிந்த விஸ்வநாதன், சைக்கிளில் வருகிறார். சைக்கிள், டி-ஷர்ட், தொப்பிகளில், 'மக்களும் நானும்’ என்ற வாசகம் பளிச்சிடுகிறது. கடந்த ஜனவரி 29ம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானாத்தூர் கிராமத்தில் தொடங்கப்பட்ட பயணம் திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மகாபலிபுரம் என்று தொடர் கிறது. இடையில் டெல்லி செல்லும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் எல்லாம் சைக்கிள் பயணம் தொட ருமாம்.

ஓரம் போ.. விஸ்வநாதன் வண்டி வருது!

கடந்த 7-ம் தேதி, நென்மேலிக்குச் சென்றிருந்தோம். மதியம் 2.30-க்கு வியர்க்க விறுவிறுக்க பெடலை மிதித்துக் கொண்டு வந்தார் விஸ்வநாதன். கால்கடுக்க காத்திருந்த முதியவர்களிடம் மனுக்களை வாங்கிய கையோடு அங்கிருந்த பள்ளிக்குச் சென்றார். அங்கும் ஏராளமானோர் வரிசையில் நின்று மனு கொடுத்தனர்.

திடீரென விஸ்வநாதன், ''நான் யார் தெரியுமா?'' என்று மக்களிடம் கேட்க... பலர் அசடு வழிய நின்றனர்.  ஒரு சிலர் மட்டும் போஸ்டரைப் படித்து இருந்ததால், பெயரைச் சொன்னார்கள். ஆனால், அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், ''நான்தான் இந்தத் தொகுதியோட எம்.பி. விஸ்வநாதன்.

ஓரம் போ.. விஸ்வநாதன் வண்டி வருது!

உங்களைச் சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் வந்திருக்கிறேன். என்மீது நம்பிக்கை வைத்து மனு கொடுத்து உள்ளீர்கள். உங்கள் குறைகளை, நாடாளுமன்றத்தில் விரிவாகப் பேசுவேன். பிரதமர் மன்மோகன் சிங், சோனியா ஆகியோரிடம் நீங்கள் கொடுத்துள்ள மனு குறித்து பேசி, உங்கள் குறைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கச் சொல்வேன்'' என்றார்.

அடுத்து வகுப்பறைக்குள் சென்ற விஸ்வநாதன், 'இந்தியப் பிரதமர் யார்?’ என்று, மாணவர்களிடம் கேட்டு, ஆசிரிய அவதாரம் எடுத்தார்.

ஒரு மாணவன், ''ஜவஹர்லால் நேரு'' என்று பதில் சொல்ல, ''சரி அத வுடு... தமிழக முதல் அமைச்சர் யாரு'' என்றதும் ''ஜெ.ஜெயலலிதா'' என்று கோரஸ் பாடினார்கள். அங்கே இருந்து கிளம்பி மதியம் 3 மணிக்கு நென்மேலி ஆலமரத்தடிக்கு வந்தார். வீங்கி இருந்த கால்களுக்கு வலி நிவாரண ஸ்பிரே அடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மதிய உணவு சாப்பிட்டார். கால்களுக்கு ஐஸ் ஒத்தடம் போட்டுக் கொள்ள அனுபுரத்துக்குச் சென்றார். சைக்கிள் பராமரிப்புக்கு வேன் ஒன்றும் கூடவே வருகிறது. மாலையில் மீண்டும் பயணம் தொடங்கியது.

ஓரம் போ.. விஸ்வநாதன் வண்டி வருது!

இரவு 9 மணிக்கு திருமணி கிராமத்தை நோக்கிச் சென்ற போது, எதிரே வந்த ஒருவரிடம், ''பி.வி.களத்தூருக்கு இன்னும் எவ்வளவு தூரம்?'' என விஸ்வநாதன் கேட்க, ''நாலு கிலோ மீட்டர்'' என்று பதில் வந்தது. சட்டென்று முகம் கறுத் தவர்... ''என்னய்யா ரெண்டு கிலோ மீட்டர்னு சொன்னீங்க...'' என்றபடி எரிச்சலைக் காட்டி னார்.

இரவு 10 மணிக்கு பி.வி. களத்துரை அடைந்ததும் சைக்கிளை நிறுத்திவிட்டு ஒரு வீட்டுக்குள் நுழைந்தார். உள்ளே இருந்த பெண், ''யாருங்க நீங்க'' என்று பதறி னார். ''பயப்படாதீங்கம்மா... உங்களுக்கு ஏதாவது குறை இருந்தா சொல்லுங்க, நான் தீர்த்து வைக்கிறேன்'' என்ற பிறகுதான் பயம் தெளிந்தார் அந்தப் பெண்.  

அவர், ''எல்லாமே குறைதான். வந்த வழியப் பாத்தீங்களா... நீங்க ஒரு நாள் வர்றதுக்கே இவ்வளவு கஷ்டப்படுறீங்க. தெனமும் நாங்க எவ்வளவு கஷ்டப்படுவோம்? நீங்க கலெக்டரா இல்ல... எம்.எல்.ஏ-வா'' என கேட்டதும், ஜெர்க்கான விஸ்வநாதன், பொறுமையாக அவருக்குப் பதில் சொன்னார்.

வீட்டுக்கு வெளியே வந்தவர் ஒரு பாயில் அமர்ந்தார். உடனே முதியோர் பென்ஷன், பட்டா என்று ஏராளமான குறைகளைக் குவித் தனர் மக்கள். 'அங்கேயே ஒரு வீட்டில் இரவு தங்கினார்.

அந்த நேரத்தில் விஸ்வநாதனிடம் பேசினோம். ''இதுவரை ஏழு நாட்கள் சைக்கிள் பயணம் செய்து இருக்கிறேன். தினமும் 50 கி.மீ. சென்று மக்களைச் சந்திக்கிறேன். வழியிலேயே மறித்து மனுக்களைக் கொடுக்கிறார்கள். திருப்போரூர், மகாபலிபுரம் போன்ற பகுதிகளில் தொல்பொருள் துறையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். கடலோரக் கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்கவும், கடல்நீரைக் குடிநீராக்கவும் கோரிக்கை விடுத்து உள்ளனர். 52 ஊராட்சிகளில் மக்களைச் சந்தித்துவிட்டேன். பட்டா, முதியோர் உதவித்தொகை கேட்டுத்தான் நிறைய மனுக்கள் வந்து உள்ளன. ரேஷன் பொருட்கள் சரியாக கிடைக் காமலும், மின்தடையாலும் மக்கள் அவதிப்படுகின்றனர். வெண்பேடு என்ற கிராமத்தில், 'ரேஷன் கடை வேண்டும் அதற்கு இப்போதே அடிக்கல் நாட்ட வேண்டும்’ என்றார்கள். உடனே அடிக்கல் நாட்டிவிட்டு வந்தேன். இந்தப் பயணம் சுய விளம்பரத்துக்காக அல்ல. மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்காகத் தொகுதி முழுவதும் ஏழு இடங்களில் அலுவலகங்களைத் திறந்துள்ளேன். ஆனால், மக்கள் அதை சரியாகப் பயன்படுத்தவில்லை. அதனால்தான் இந்தப் பயணம். மக்கள் குறைகளை பிரதமரிடமும், சோனியாவிடமும் சொல்லி அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்'' என்றார் உறுதியாக.

ரேஷன் கார்டு, பட்டா, முதியோர் உதவித் தொகை பிரச்னையை எல்லாம் எப்படித்தான் சோனியா சமாளிக்கப் போகிறாரோ?

- பா.ஜெயவேல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism