Published:Updated:

நூற்றாண்டு கண்ட குப்பை மார்க்கெட்!

தீராத வேலூர் சோகம்

நூற்றாண்டு கண்ட குப்பை மார்க்கெட்!

தீராத வேலூர் சோகம்

Published:Updated:
##~##
நூற்றாண்டு கண்ட குப்பை மார்க்கெட்!

வேலூர் மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற பெருமையுடன் பதவி ஏற்ற கார்த்தியாயினி, பதவியில் இத்தனை சிக்கல் இருக்கும் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதனால்தான் பதவிக்கு வந்ததும், ''கடந்த தி.மு.க. ஆட்சியில் நடந்தவை பற்றி எனக்குக் கவலை இல்லை. இனி, மாநகராட்சியைச் சேர்ந்த பகுதிகளை சுகாதாரமாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பதே எனது முக்கிய நோக்கம்!'' என்று உறுதி கொடுத்தார்.  சுகாதாரத்துறை அமைச்சரும் வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் விஜய், 'வேலூர் தொகுதியில் வாரந்தோறும் சனிக்கிழமை மக்களிடம் இருந்து புகார் மனுவை பெற்றுக் கொள்வேன்’ என்று கூற, உடனே கார்த்தி யாயினியும், 'நான் புதன்கிழமைகளில் மக்களிடம் இருந்து புகார் மனுக்களைப் பெறுவேன்’ என்று அறிவித்தார்.

நூற்றாண்டு கண்ட குப்பை மார்க்கெட்!

'புகார் வாங்கி என்ன செய்றது... இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்று புலம்புகிறார்கள் வேலூர் வணிகர் சங்கப் பேரவையைச் சேர்ந்த உறுப்பினர்கள். அனைத்து வணிகர் சங்கப் பேரமைப்புத் தலைவரான இரா.ப.ஞானவேலுவைச் சந்தித்தோம்.

''நகரின் இதயம் போன்ற பகுதியில் இருக்கிறது, 100 ஆண்டுகளைக் கடந்த வேலூர் மார்க்கெட். வேலூரைச் சுற்றிய திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உட்பட அனைத்துப் பகுதிகளுக்கும் காய்கறி முதல் பூக்கள் வரை இந்த மார்க்கெட்டில் இருந்துதான் செல்கிறது. ஒரு குடும்பத்தின் திருமணம் அல்லது புதுமனை புகுவிழா என்று எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும், இந்த மார்க்கெட்டிலேயே ஒட்டுமொத்த சாமான்களையும் வாங்கி விட முடியும்.

மார்கெட்டுக்கு தினமும் வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை இருக்கும். முகூர்த்த நாள், தீபாவளி, பொங்கல், மற்றும் உள்ளூர் பண்டிகை காலங்களில் கூட்டம் இன்னும் பலமடங்கு அதிகம். ஆனால், இங்கு தண்ணீர் வசதி  கிடையாது. அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் சுகாதாரமான கழிப்பறை வசதியும் கிடையாது.

தினமும் இரண்டு லாரி அளவுக்குக் குப்பைகள் சேருகின்றன. நேதாஜி மார்க் கெட், அரிசிமண்டி வீதி, பூ மார்க்கெட் போன்ற பகுதிகள் எப்போதும் குப்பைமயமாகத் தான் காட்சி அளிக்கின்றன. அதனால், எங்கள் மார்க்கெட் பகுதிகளில் அவ்வப்போது அகற்றும் வண்ணம் குப்பைத் தொட்டிகள் அமைக்க வேண்டும்.

இங்கே திரியும் மாடுகள் எண்ணிக்கையும் மிக அதிகம். அவை மக்களுக்கு இடைஞ்சலாகவும், வியாபாரிகளுக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கின்றன. நல்ல நாட்களிலேயே பூ மார்க் கெட்டில் இருந்து மீன் மார்க்கெட் வரை ரோடு குண்டும் குழியுமாக இருக்கும். மழைக் காலத்தில் கேட்கவே வேண்டாம். மிதந்துதான் மார்கெட் உள்ளே செல்ல முடியும்.

இந்த மார்க்கெட்டை சீர்படுத்தித் தரவேண்டும், வியாபாரிகளின் அடிப் படைத் தேவைகளை நிறை வேற்ற வேண்டும், மக்களுக்குத் தேவையான தண்ணீர் வசதி, கழிவறை வசதி, போக்கு வரத்து வசதி

நூற்றாண்டு கண்ட குப்பை மார்க்கெட்!

எல்லாம் வேண்டும் என்று கடந்த தி.மு.க. ஆட்சியில் மேயராக இருந்த கார்த்திகேயனிடம் சொன்னோம். ஆனால், எ ந் த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்று நம்பி ஏமாந்து போய்விட்டோம். கார்த்தியாயினி பதவியேற்ற நாள் முதல், நாங்கள் மாநகராட்சிக்கு பல முறை சென்று மனு கொடுத்து விட்டோம். ஆனால், இதுவரை நடவடிக்கை எதுவுமே எடுக்கவில்லை.

கடந்த மூன்று மாதத்துக்கு முன், மார்க்கெட்டைச் சுற்றிப் பார்த்த மேயர், 'இன்னும் சில நாட்களில் உங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்படும்’ என்று உறுதி கொடுத்தார். ஆனால், இதற்காக எந்த முயற்சியும் எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. கோடிக்கணக்கில் வணிகம் செய்யும் வேலூர் மார்க்கெட் சீர்கெட்டுப் போவதைப் பற்றி யாருமே கவலைப்படவில்லை. போராடினால்தான் நாங்கள் விரும்பும் மாற்றங்கள் வருமோ என்னவோ...'' என்று வருத்தம் காட்டினார்.

  மார்க்கெட் நிலை குறித்து வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினியிடம் பேசினோம். ''அவர்கள் சொன்ன குறைகளை சரிசெய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. சம்பந்த பட்ட இடங்களுக்கு நானே சென்று பார்த்தேன். இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் கூறி இருக்கிறேன். வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் கூடிய விரைவில் நல்ல தீர்வு ஏற்படும். ஆகவே அவர்கள் வருந்தப்படத் தேவை இல்லை'' என்று நம்பிக்கையோடு சொன்னார்.

இனியாவது மார்க்கெட் பிரச்னைக்குத் தீர்வு வரும் என்று நம்புவோம்!

- கே.ஏ.சசிகுமார்

படங்கள்: ச.வெங்கடேசன்.      

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism