Published:Updated:

''உளவுத் துறை கண்காணிக்கிறது..''

நாகை அ.தி.மு.க. கூட்டத்தில் அலர்ட்

''உளவுத் துறை கண்காணிக்கிறது..''

நாகை அ.தி.மு.க. கூட்டத்தில் அலர்ட்

Published:Updated:
##~##
''உளவுத் துறை கண்காணிக்கிறது..''

.தி.மு.க-வில் இருந்து சசி அண்ட் கோ வெளியேற்றப்பட்டதை அடுத்து, திவா​கரனின் ஆளுகைக்குக் கீழ் இருந்த நாகை மாவட்டத்தில், மாவட்டச் செயலாளராக இருந்த ஓ.எஸ்.மணியன் மாற்றப்பட்டு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்​பட்டார். அவரைத் தொடர்ந்து பல்வேறு நிர்வாகிகளும் அதிரடியாக மாற்றப்பட்ட பிறகு நடக்கும் செயல்வீரர்கள் கூட்டம் என்பதால், கடந்த 5-ம் தேதி ஏராளமான தொண்டர்களும் ஆர்வத்தோடு கூடி இருந்தார்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிப்ரவரி 24-ம் தேதி, கட்சித் தலைவி ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை சிறப்​பாகக் கொண்டாடுவது குறித்து சுமுகமாகப் பேசிக்​கொண்டிருந்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ. விஜயபாலன் பரபரப்பை பற்றவைத்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பூம்புகார் தொகுதிக்கு ஸீட் கேட்டிருந்தார் விஜயபாலன்.  ஆனால், பவுன்ராஜுக்கு ஸீட் வழங்கப்பட்டு, அவரும் வென்றார்.

''உளவுத் துறை கண்காணிக்கிறது..''

அதேபோல் மாவட்டச் செயலாளர் மாற்றத்தின்போதும் எம்.ஜி.ஆர். காலத்து ஆளான தனக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று நம்பினார். ஆனால், அமைச்சர் ஜெயபாலுக்கு அந்தப் பதவி போனது. அந்த ஏமாற்றங்களை எல்லாம் மேடையில் கொட்​டினார்.

''அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் பேசும்போது தகுதி அற்றவர்களுக்குப் பதவி கிடைத்தால் எப்படி நடப்பார்கள் என்று விஜயகாந்த்தை குறிப்பிட்டுச் சொன்னார். அதேபோல, நமது மாவட்​டத்திலும் பல உதாரணங்கள் இருக்கிறது. இந்த பவுன்ராஜால் (பூம்புகார் எம்.எல்.ஏ) நாம் படுகிற அவமானத்தை, அசிங்கத்தை இந்த மேடையில் சொல்லியே ஆக வேண்டும். தி.மு.க-வில் இருந்த அவரை, அ.தி.மு.க-வுக்கு அழைத்து வந்தவன் நான். ஆனால், எம்.எல்.ஏ. ஆன பிறகு அவர் என்னை மதிப்பதே இல்லை. பொது இடத்தில் பார்த்து வணக்கம் சொன்னால்கூட, பதில் வணக்கம் சொல்வது இல்லை. ஏதோ எதிரியைப் போல பார்க்கிறார்.

இதாவது பரவாயில்லை. தேர்தலில் நான் அவருக்கு வேலை செய்யவில்லை என்றும், அதனால் என்னைக் கட்சியைவிட்டு நீக்க வேண்டும் என்றும் அம்மாவிடம் மனு கொடுத்து இருக்கிறார். இதெல்லாம் மனசாட்சி உள்ளவர்கள் செய்கிற வேலையா? நான் தேர்தலில் எப்படி எல்லாம் வேலை பார்த்தேன் என்பது அம்மாவுக்குத் தெரியும், கட்சிக்காரர்களுக்கும் தெரியும். இப்படி கட்சிக்கு உழைத்தவர்களை வேலையே செய்யவில்லை என்று சொல்லும் துரோகிகளுக்கு என்ன தண்​டனை கொடுப்பது? தொகுதிக்குள் ஒன்றியக்குழு தலைவரைக்கூட சுதந்திரமாகச் செயல்பட விடுவதி ல்லை. புயலால் பாதிக்கப்பட்ட மக்களை தனியே சென்று சந்தித்த கட்சி நிர்வாகிகளை மிரட்டுகிறார். எல்லாவற்றையும் உளவுத்துறை குறிப்பு எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது'' என்று ஆதங்கத்தோடு பேசினார்.

''உளவுத் துறை கண்காணிக்கிறது..''

இதற்கு பவுன்ராஜ் என்ன பதில் சொல்லப்​போகிறார் என்று, கூட்டத்துக்கு வந்தவர்கள் எல்லாம் ஆர்வத்தோடு காத்திருக்க... அவரும் சரவெடியாக வெடிக்கத் தவறவில்லை. ''எல்லோருமே தி.மு.க-வில் இருந்து வந்தவர்கள்தான். நீங்க முன்னாடி வந்துட்டீங்க. நான் கொஞ்சம் பின்னாடி வந்தேன். அவ்வளவுதான். நான் உங்க மேல எவ்வளவு மரியாதையும் பாசமும் வைச்சி​ருக்கிறேன். என்னைப் போய் இப்படி மனசாட்சி இல்லாம சொல்றீங்களேண்ணே? நான் உங்க மேல வைச்சிருக்கிற மரியாதையை உங்க வீட்டு காம்பவுண்ட் சுவர் சொல்லும். ஸீட் கொடுத்தவுடனே உங்க வீட்டுக்கு வந்து கால்ல விழுந்து, 'அம்மா எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்காங்க. நீங்களும் மனசு வைச்சா நான் எம்.எல்.ஏ’-ன்னு சொன்னேன். அதுக்கு மரியாதை கொடுத்து நீங்க வேலை செஞ்சீங்களா? நான் செய்றதை எல்லாம் உளவுத்துறை கண்காணிக்குதுன்னு சொன்னீங்க. நல்லா கண்காணிக்கட்டும். நான் செய்கிற பணிகள் அம்மாவின் கவனத்துக்குப் போனால் நல்லதுதானே? நான் இல்லைன்னா நீங்க ஒன்றியச் செயலாளராகூட வந்திருக்க முடியாது. அதை எல்லாம் மறந்துட்டு இப்படிப் பேசுறீங்களே? 96-ல் யாரு உங்களை கட்சியை விட்டுப் போகச்சொன்னா? அப்படிப் போகாமல் இருந்திருந்தா... இப்ப நீங்கதான் எம்.எல்.ஏ. அப்படி நீங்க போயிட்டு வந்ததுக்கு நானா பொறுப்பு? இப்பவும் நான் உங்களை மதிக்கிறேன். ஆனா நீங்கதான் என்னை மதிக்கல'' என்று ஆவேசமாகப் பதிலளித்தார்.

இவர்களை சமாதானம் செய்வது போல் ஓ.எஸ்.மணியன் பேசும்போது, ''ஒரு குடும்பம்னா சண்டை, சச்சரவு இருக்கத்தான் செய்யும். அப்படி இந்த இயக்கத்துலேயும் இருக்குது. விஜயபாலன்... உங்களுக்கு குறைகள் இருந்தா மாவட்டச் செயலாளர்​கிட்ட சொல்லி பேசி தீர்த்துக்கலாம். அதை எல்லாம் இங்கே பேசவேண்டியது இல்லை. என்னையே எடுத்துக்கோங்க... என்னை நீக்கி விட்டு அமைச்சரை மாவட்டச் செயலாளராக அறிவிச்ச உடனே, அவரை வாழ்த்திய முதல் ஆள் நான்தான். இப்பவும் மனதாரச் சொல்கிறேன். ஐந்து ஆண்டுகளுக்கு அவரே தொடர்ந்து அமைச்சராக இருக்க வேண்டும். தொடர்ந்து மாவட்டச் செயலாளராகவும் இருக்க வேண்டும். அவரை நான் நிறைஞ்ச மனசோட வாழ்த்துகிறேன்'' என்றார்.

கடைசியில் பேசிய அமைச்சர் ஜெயபால், ''நமக்குள் இருக்கும் பிரச்னைகளை எல்லாம் வெளியில் சொல்ல வேண்டியது இல்லை. நாமே பேசி தீர்த்துக் கொள்ளலாம். அம்மாவின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்'' என்று சிம்பிளாக பேசினார்.

நிர்வாகிகள்தான் பாவம். 'ம்... இரண்டு சால்வை வாங்க வேண்டி இருக்குதே’ என்று அலுத்துக்​கொண்டார்கள்.

- கரு.முத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism