Published:Updated:

நடத்தப்படாத உள்ளாட்சித் தேர்தல்... நொறுக்கப்படும் ஜனநாயகம்!

நடத்தப்படாத உள்ளாட்சித் தேர்தல்... நொறுக்கப்படும் ஜனநாயகம்!
நடத்தப்படாத உள்ளாட்சித் தேர்தல்... நொறுக்கப்படும் ஜனநாயகம்!

‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்ற பழமொழியை மாற்றி எழுதியுள்ளது தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம். ஆம்... இரண்டரை வருடங்கள் கடந்துவிட்டபோதிலும் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மட்டும் இன்னும் நடந்தபாடில்லை. அதேவேளையில் தேர்தல் குறித்தான வழக்குகள் மட்டும் உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. புதிது, புதிதாக வழக்குகள் தொடுக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளும், அதற்கு அரசும் அதிகாரிகளும் அளிக்கும் பதில்களில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை. 

1993-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 73, 74 ஆகிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி இந்தியா குடியரசாகி 43 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் தன்னுடைய ஜனநாயகத்தை, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான திருத்தங்களின் மூலம் உறுதி செய்து கொண்ட நிகழ்வாக அது அமைந்தது. ஆனால், கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தமிழகம் முழுவதும் உள்ள 12,000-க்கும் அதிகமான உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அதிகாரிகளின் கைகளில்தான் ஜனநாயகம் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது.

நடத்தப்படாத உள்ளாட்சித் தேர்தல்... நொறுக்கப்படும் ஜனநாயகம்!

வழக்கறிஞர் ஜெயசுகின், தமிழகத்தில் நீண்டகாலமாக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெறாமல் உள்ள நிலையில், உடனடியாக அந்தத் தேர்தலை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் மாநில அரசு காலதாமதம் காட்டுவது ஏன்?" எனக் கேள்வி எழுப்பினார். தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தொகுதிகள் மறுவரையறை பணிகள் நடைபெற்றதால்தான் தேர்தல் நடத்துவதற்குக் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதால் தேர்தலை உடனடியாக நடத்த முடியவில்லை” என்று கூறினார். இதைத்தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது பற்றியும், தேர்தல் நடைபெறும் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்தும் இரண்டு வாரத்துக்குள் தமிழக அரசும் மாநிலத் தேர்தல் ஆணையமும் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

தேர்தல் ஆணையம் இப்போது மட்டுமல்ல; கடந்த பல முறை நீதிமன்றத்தில் இதே பதிலைத்தான் தெரிவித்து வருகிறது. 2016 அக்டோபர் மாத இறுதியோடு, தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவடைந்துவிட்டது. அந்த ஆண்டு அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெறும் என அப்போது அறிவிக்கப்பட்டது. ஆனால், வெளியிடப்பட்ட அறிவிப்பில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு முறையாக ஒதுக்கப்படவில்லை என்பதைத் தெரிவித்து, அந்தத் தேர்தலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தற்காலிகமாகத் தேர்தலை நிறுத்தியும், இடஒதுக்கீட்டு முறைமையை பின்பற்றச் சொல்லியும் உத்தரவிட்டனர். 

நடத்தப்படாத உள்ளாட்சித் தேர்தல்... நொறுக்கப்படும் ஜனநாயகம்!

அதேபோல் உள்ளாட்சி தேர்தலில் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் தேர்தல் நடத்தப்படாமல், 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு பின்பற்றப்பட்டிருந்தது. அந்த உத்தரவை எதிர்த்தும் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், நீதிமன்றம் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை பயன்படுத்தும்படி வலியுறுத்த, புதிதாகத் தொகுதிகள் வரையறை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டன. இதுதான் இப்போதுவரை தேர்தல் தாமதமாவதற்கான அடிப்படைக் காரணமாக அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது.

கடந்த இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம், தன்னுடைய தொகுதி மறுவரையறைப் பணிகள் ஏறத்தாழ முடிவடைந்ததாகக் கூறியுள்ளது. ஆனால், 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பானது 2013-ம் ஆண்டே அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒருவேளை மாநிலத் தேர்தல் ஆணையம் தன்னுடைய பணிகளை 2013-ம் ஆண்டே தொடங்கியிருந்தால் குறிப்பிட்ட காலத்தில் தேர்தல்களை நடத்தியிருக்க முடியும். ஆனால், தேர்தல் ஆணையம் தன்னுடைய பணியை ஐந்து ஆண்டுக்கு ஒருமுறையாகச் சுருக்கிக் கொண்டதுதான் இந்தப் பிரச்னைகளுக்கான அடிப்படைக் காரணமாகும்.

தன் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியைப் பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் டெல்லியில் தஞ்சமடைந்த தர்மயுத்தவாதிகளும், மக்களின் வாக்குகளால் வெற்றிபெற்று தற்போது அதிகாரத்தின் உச்சியில் உள்ளவர்களும் உள்ளாட்சித் தேர்தல் நடக்காதது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை, ஏனெனில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடக்காததால் பாதிக்கப்படப்போவது கழகங்களின் உயர்மட்டத் தலைவர்கள் அல்ல. தேர்தல் காலங்களில் தெருக்களில் எங்கும் கழகக் கொடிகளை ஏற்றி, கட்சியை வளர்க்கும் சாதாரணத் தொண்டர்கள்தாம். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பிரசார ஏற்பாடுகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் சென்றதற்கும், தேர்தல் செலவில் பெரும் தொகை பூத் ஏஜென்டுகளுக்குச் செலவானதற்கும், உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறாமல் போனதற்கும் தொடர்பு இருக்கிறது. அரசாங்கம், கட்சி என எவற்றிலும் தங்களுக்கான அதிகார பரவலாக்களில் இடமில்லாமல் போகும்போது, மக்களும் இந்தத் தேர்தல் நடைமுறைகளைப் புறக்கணிக்கத்தானே செய்வார்கள். 

நடத்தப்படாத உள்ளாட்சித் தேர்தல்... நொறுக்கப்படும் ஜனநாயகம்!

தமிழகத்தின் சமூக நலத்திட்டங்கள் அனைவரையும் சென்றடைவதற்கான அடிப்படைக் காரணங்கள் தமிழகத்தில் நிலவிய வலிமையான உள்ளாட்சிக் கட்டமைப்புகள்தான். அது 'கலைஞர்' டி.வியாக இருந்தாலும் சரி 'அம்மா' மிக்ஸியாக இருந்தாலும் சரி அவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்தவை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்தாம். ஆனால், கடந்த இரண்டரை ஆண்டுக்கால இடைவெளியால், கணிசமான அளவு சமூகநலத் திட்டங்கள் மக்களிடம் சென்றடைவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய உயரதிகாரிகளிடம் பேசுகையில், “நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள்தான், மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போவதற்கான காரணம். நாங்களும் விரைவில் தேர்தல் நடத்துவதற்கான முயற்சிகளில்தான் ஈடுபட்டு வருகிறோம்” என்றனர்.

சாதாரண, சாமான்ய மக்களுக்கு அரசியல் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படாதபட்சத்தில் கழகக் கொடிகளை நடுவதற்கு கார்ப்பரேட் நிறுவனங்களையும், தங்களின் தேர்தல் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர்களையும் நாடிச் செல்லும் காலம் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படும்... இதை உணர்ந்து நடந்துகொண்டால் சரி.