Published:Updated:

மகளைக் கத்தியால் குத்திவிட்டுக் கொண்டாடிய தந்தை!

''இந்த சாக்லேட் ரொம்ப இனிக்குது!''

##~##
மகளைக் கத்தியால் குத்திவிட்டுக் கொண்டாடிய தந்தை!

பொறியியல் கல்லூரியில் படிக்கும் தனது மகளைத் தேடி வகுப்பறைக்கு வருகிறார் தந்தை. 'அவ வெளியே போயிருக்காளே...’ என்று சொல்லப்பட, வாசலுக்கு வருகிறார். அந்த நேரம் பார்த்து, ஜெராக்ஸ் கடையில் இருந்து மகள் வெளியே வருகிறார். உடனே ஆத்திரத்துடன் பாய்ந்தவர், மகளின் முடியை இழுத்துப் பிடித்து மறைத்துவைத்திருந்த கத்தியால் குத்துகிறார். ரத்தம் ஆறாக ஓடியபோதும் விடாமல் மாறி மாறிக் குத்துகிறார். ரத்தக் களறியில் மகள் கீழே விழுந்ததும், 'சனியன் ஒழிஞ்சது...’ என்று சொன்னபடியே சாவகாசமாக நடையைக் கட்டுகிறார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது ஏதோ சினிமாவில் வரும் திகில் காட்சி அல்ல. கடந்த 20-ம் தேதி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வாசலில் நடந்த நிஜம்!

குத்தப்பட்ட ஞானவள்ளி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.இ. சிவில் இறுதி ஆண்டு படிக்கிறார். அவரது தந்தை சுந்தரமூர்த்தி கடலூர் மாவட்டம், வளையாமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர். எலெக்ட்ரீஷியனாகப் பணிபுரிகிறார்.

மகளைக் கத்தியால் குத்திவிட்டுக் கொண்டாடிய தந்தை!

''ஞானவள்ளிக்கு ஆனைவாரிக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பையனுடன் பழக்கமாகி, காதலா மாறிடுச்சு. இது அரசல்புரசலாத் தெரிய வரவும், அவங்க அப்பா கூப்பிட்டு குடும்ப நிலைமையை எடுத்துச்சொல்லி இருக்கார். ஆனாலும் ஞானவள்ளி கேட்கலை. அதனால, சொந்தக்காரங்க எல்லாம் சேர்ந்து மாப்பிள்ளை பார்த்தாங்க. நிச்சயதார்த்தம் நடக்கப்போறதுக்கு முன்​னாடியே, ஞானவள்ளி நேரா விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய், 'எனக்குக் கட்டாயப்படுத்திக் கல்யாணம் செஞ்சுவைக்கப் பார்க்கிறாங்க’னு புகார் கொடுத்துட்டா. போலீஸ் ஸ்டேஷன்ல நடந்த பஞ்சாயத்துக்குப் பிறகு என்ன நினைச்சாளோ... நிச்சயதார்த்தம் நடத்தச் சம்மதிச்சுட்டா.    

ஆனா கொஞ்ச நாள்ல, அந்தப் பையன்கூட திரும்பவும் பழக ஆரம்​பிச்சுட்டா. திரும்பவும் வீட்ல

மகளைக் கத்தியால் குத்திவிட்டுக் கொண்டாடிய தந்தை!

பிரச்னை. 'இப்ப நடந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்துங்க. படிப்பை முடிச்சதுக்குப் பிறகு நீங்க எந்த மாப்பிள்ளையைச் சொன்னாலும் கல்யாணம் பண்ணிக்கிறேன்’னு ஞானவள்ளி பிடிவாதம் பிடிக்கவும், மாப்பிள்ளை வீட்டார் கையில கால்ல விழுந்து நிச்சயதார்த்ததை ரத்து செஞ்சாங்க. சிதம்பரத்துல இருக்கிற சொந்தக்காரங்க வீட்ல தங்கவைச்சு, தொடர்ந்து படிக்க அனுமதிச்சார் சுந்தரமூர்த்தி. அதுக்குப் பிறகும் ஞானவள்ளி தன்னை மாத்திக்கலை. அதனாலதான் சுந்தரமூர்த்தி ஆத்திரப்பட்டு இப்படி செஞ்சுட்டார்'' என்று வருத்தப்பட்டார்  ஞானவள்ளியின் நெருங்கிய உறவினர் ஒருவர்.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லுரி மருத்துவ​மனையில் அனுமதிக்கப்பட்ட ஞானவள்ளி இப்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டார். கழுத்து, காது, வாய், கை, நெற்றி என்று மொத்தம் ஐந்து இடங்களில் குத்துப்பட்டு இருக்கிறது. மகள் மருத்துவமனையில் குலைந்துபோய் கிடக்க... கணவன் சிறையில் வாட... கவலையில் செய்வதறியாது தவிக்கிறார் ஞானவள்ளியின் தாய் கமலவள்ளி.

''எவ்வளவோ சொல்லியும் கேக்காம இப்படி குடும்பத்தைக் கொண்டுவந்து நடுத்தெருவில் நிறுத்திட்டாளே... ஆஸ்பத்திரியில கெடக்குற இவளைக் கவனிப்பேனா...? இல்லை, ஜெயில்ல இருக்கிற என் புருஷனை வெளில எடுப்பேனா'' என்று புலம்பினார்.

ஞானவள்ளி விரும்பிய பையனையே திருமணம் செய்து கொடுத்திருக்கலாமே?

ஞானவள்ளி காதலித்த பையன் பொறியியல் படிப்பு முடித்து தற்போது நல்ல வேலையில் இருந்தாலும், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் பிரச்னைக்குக் காரணமாம். சம்பவத்துக்கு முந்தைய தினம் உறவினர்கள் ஐவரோடு வந்த சுந்தரமூர்த்தி, சிதம்பரம் கோயிலில் வைத்து சாதிப் பிரச்னையை எடுத்துச் சொல்லி ஞானவள்ளியிடம் பேசி இருக்கிறார். ஆனாலும் ஞானவள்ளி தன் முடிவை மாற்றிக்கொள்ளாமல் உறுதியாக இருந்திருக்கிறார். 'சமாதானம் பேசவந்த உறவினர்கள் மத்தியில் தனக்கு அவமானம் தேடித் தந்துவிட்டாளே’ என்று இரவு முழுவதும் வேதனைப்பட்ட சுந்தரமூர்த்தி, விடிந்ததும் கிளம்பி வந்து இந்தக் கொடூரத்தைச் செய்திருக்கிறார்.

அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் சுந்தரமூர்த்தியை வைத்திருந்தபோது, அங்குள்ள ஊழியர் ஒருவர் தன் பிறந்த நாளுக்காக சாக்லேட் கொடுத்திருக்கிறார். அதை வாங்கிச் சாப்பிட்ட சுந்தரமூர்த்தி, ''அவ பொறந்த நாளுக்கு தின்ன சாக்லெட்டைவிட, அவ செத்த நாளைக்கு சாப்பிடற சாக்லேட் ரொம்பவே இனிக்குது'' என்று சொன்னாராம். அவர் குத்தியதும் மயங்கி விழுந்த ஞானவள்ளியை, இறந்துவிட்டதாகவே நம்பி இருக்கிறார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நேரம்தான், ஞானவள்ளி உயிரோடு இருப்பதே அவருக்குத் தெரியவந்ததாம்.

''இப்பவும் சொல்றேன்... என்னை இப்படி செஞ்ச எங்கப்பா எனக்கு வேணாம். என்னோட ரெண்டு தங்கைகளுக்காகத்தான் அவரை மன்னிக்கிறேன். ஆனா, என் காதல்ல எந்த மாற்றமும் இல்லை. என்னையே இப்படி செஞ்சவர் அவரை (காதலனை) ஏதாவது செய்திடுவாரோன்னு பயமா இருக்கு'' என்று திக்கித் திணறி சொல்கிறார் ஞானவள்ளி.

இன்னும் எத்தனை காலம்தான் உயிர்களை வதைக்கப்போகிறதோ சாதி?

- கரு.முத்து