Published:Updated:

போதையில் உயிர்விட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவன்!

திருப்பத்தூர் அதிர்ச்சி

##~##
போதையில் உயிர்விட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவன்!

குழந்தைகளை அதிகம் கண்டித்தால் ஏற்படும் விளைவுகளைப் போல​வே, அதிகச் செல்லம் கொடுப்பதாலும் விபரீதம் ஏற்படும் என்பதன் உதாரணம்... ஒரு சிறுவனின் மரணம். கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து சரி​யாகக் கண்காணிக்காததால் வந்த விளைவு இது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள கதிரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்க​டேசன்தான் அந்தப் பரிதாப மாணவன். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வெங்கடேசன் போட்​டோவைப் பார்த்துக் கதறிக்​கொண்டு இருந்த அவனது அம்மா செல்விக்கு ஆறுதல் சொல்லிப் பேசவைத்தோம். ''எங்க வீட்டுக்காரர் சித்த வைத்தியம் பார்த்துட்டு இருக்கார். எங்களுக்கு இரண்டு பசங்க. பெரியவன் சதீஷ், பக்கத்துல இருக்கிற ஹை ஸ்கூல்ல 11-வது படிக்கிறான். ரெண்டாவது பையன் வெங்கடேசன், அதே ஸ்கூல்ல ஒன்பதாவது படிச்சான்.

போன இரண்டு மாசமா வெங்கடேசன் ஸ்கூலுக்குப் போகலை. என்னடான்னு அவன்கிட்ட விசாரிச்சதுக்கு, 'படிக்கவே முடியலைம்மா. அடுத்த வருஷம் போறேன்’னு அழுதான். எவ்வளவோ

போதையில் உயிர்விட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவன்!

சொல்லியும் கேக்கலை... அதனால நானும் சரின்னு விட்டுட்டேன். எப்போ பார்த்தாலும் எங்காவது விளையாடிட்டு இருப்பான். போன வெள்ளிக்கிழமை எங்கேயோ போயிட்டு, தள்ளாடிக்கிட்டே வந்தான். வாயெல்லாம் நுரை தள்ளிட்டு இருந்துச்சி. நாங்க பதறிப் போய் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டு ஓடினோம். பையனை டாக்டர் டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டு, 'ஏதோ போதைப் பொருள் சாப்பிட்டிருக்கான். எங்களால காப்பாத்த முடியலம்மா’னு சொல்​லிட்டார். எப்படி போதைப் பொருள் பழக்கம் எல்லாம் கத்துகிட்டான்னு சத்தியமா எங்களுக்குத் தெரியலைங்க..'' என்று நெஞ்சில் அறைந்துகொண்டு கதறினார்.

வெங்கடேசனின் அப்பா தண்டபாணி, ''நான் ஊரு ஊராப் போய் சித்த வைத்தியம் பண்ணிட்டு இருக்கேன். அதனால வாரத்துக்கு ஒரு தடவைதான் வீட்டுக்கு வருவேன். போன வாரம் வந்தபோது, வெங்கடேசன் ஒரு போன் வேணும்னு கேட்டான். நானும் வாங்கிட்டு வந்து கொடுத்தேன். தினமும் பசங்களோட விளையாடப் போயிடுவான். நாங்க கண்டுக்​காம விட்டுட்டோம். பள்ளிக்கூடம் போக மாட்டேன்னு சொன்ன​போதே நாங்க கண்டிச்​சிருக்கணும். அளவுக்கு அதிகமா அவனுக்கு செல்​லம் கொடுத்து நாங்களே கெடுத்துட்டோம். சேரக் கூடாத பசங்களோட சேர்ந்து இப்படி போதைப் பழக்​கத்துக்கு அடிமையாகி உசிரை விட்டிருக்கான்'' என்று பதறினார்.

போதையில் உயிர்விட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவன்!

வெங்கடேசனின் நண்பர்களிடம் விசாரித்தோம். ''எங்க ஊர்ல இருக்கிற பல பசங்களுக்கு ஒயிட்னரை இழுக்கும் பழக்கம் இருக்குதுங்க. வெங்கடேசன் கொஞ்ச காலமாகவே அந்த பசங்ககூடத்தான் சுத்திட்டு இருந்தான். ஒரு நாளுகூட ஒயிட்னர் இல்லாம அவனால் இருக்க முடியாது. ஒயிட்னரை வாங்கிட்டு ஏரிக்கரைப் பக்கமா போய் உட்கார்ந்துடுவான். அன்றைக்கு கொஞ்சம் அதிகமாவே இழுத்​துட்டான் போல இருக்குது'' என்று சாதார​ணமாகச் சொன்னார்கள்.

வெங்கடேசன் படித்த மடுவாளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வியிடம் பேசினோம். ''அவன் ஸ்கூலுக்கு வந்தே ஆறு மாசத்துக்கு மேல ஆகுதுங்க. ஏன் ஸ்கூலுக்கு வரலை என்று காரணம் தெரியலை.

போதையில் உயிர்விட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவன்!

அந்த மாணவனுக்கு ஸ்கூல்ல படிக்கும்போது அந்த மாதிரியான போதைப் பழக்கம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை'' என்று சொன்னார்.

வெங்கடேசன் மரணம் பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் திருப்பத்தூர் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம், ''ஒயிட்னர், சொல்யூஷன் போன்ற பொருட்களை சிறுவர்களுக்கு விற்பனை செய்யக் கூடாது என்று நாங்க தொடர்ந்து கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை பண்ணிட்​டுத்தான் இருக்கோம். அதையும் மீறி எப்படியாவது இந்த பசங்க வாங்கிடுறாங்க. அப்படி ஒயிட்னர் பயன்படுத்தும் பசங்களை நாங்க எங்கே பார்த்தாலும், அட்வைஸ் பண்ணி அனுப்பி​வைக்கிறோம்.

இந்த விஷயத்தில் போலீஸ் மட்டும் விழிப்​புடன் இருந்தால் போதாது. பெற்றோர்களும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தங்களோட பையன் ஸ்கூல் முடிஞ்சதும் எங்கே போகிறான்..? விளையாடப் போகும்போது எப்படிப்பட்ட பசங்களுடன் சேருகிறான்? அவனுடைய நண்பர்கள் யார் என்ற விபரங்களை எல்லாம் தெரிஞ்சு வெச்சு இருக்கணும். பையன் படிக்கும் ஸ்கூலுக்கு மாசத்துக்கு ஒரு தடவையாவது நேரில் போய் அவனுடைய வகுப்பு ஆசிரியரைப் பார்த்துப் பேசிட்டு வரணும். அப்போதான் இது போன்ற குற்றங்களை தடுக்க முடியும்'' என்று அக்கறையுடன் சொன்னார்.

வெங்கடேசனின் மரணம் அனைத்துப் பெற்றோர்களுக்கும் இன்னும் ஓர் எச்சரிக்கைப் பாடம்.

- கே.ஏ.சசிகுமார்

படங்கள் : ச.வெங்கடேசன்