Published:Updated:

விருந்து கொடுத்து அசிங்கப்படுத்தினாரா விஜயபாஸ்கர்?

புதுக்கோட்டை பரபர...

##~##
விருந்து கொடுத்து அசிங்கப்படுத்தினாரா விஜயபாஸ்கர்?

விஜயபாஸ்கருக்குப் புதுப் பதவியுடன் புதிய சிக்கலும் வந்துவிட்டது! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

புதுக்கோட்டை அ.தி.மு.க-வின் புதிய மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்றார் விஜய​பாஸ்கர். இதையடுத்து கட்சியினர் மத்தியில் தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ள, செயல் வீரர்கள் கூட்டம் என்ற பெயரில் தடபுடல் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அந்தக் கூட்டத்தில் உட்கட்சி பிரச்னைகள் காரசாரமாக வெடிக்கவே, நொந்துபோய் கிடக்கிறார் விஜயபாஸ்கர்.

கடந்த 20-ம் தேதி, புதுக்கோட்டை அய்யா திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார் விஜயபாஸ்கர். கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வத்தையும் செங்கோட்டையனையும் அழைத்திருந்தார். முதலில் சம்மதம் சொன்ன இருவருமே, காரணம் சொல்லாமல் வராமல் போக... அப்போதே அவருக்கு சுதி இறங்கிபோனது.

விருந்து கொடுத்து அசிங்கப்படுத்தினாரா விஜயபாஸ்கர்?

ஆனாலும் சளைக்காமல் செயல் வீரர்கள் கூட்டத்துக்குக் கட்சியினரை வளைத்து வளைத்து அழைத்து, கிட்டத்தட்ட 6,000 பேரைக் கூட்டிவிட்டார். கூட்டத்துக்கு வந்த அனைவரையும் வரவேற்று சந்தனப்

விருந்து கொடுத்து அசிங்கப்படுத்தினாரா விஜயபாஸ்கர்?

பொட்டு வைத்து, உள்ளே அனுப்பினார்கள். கூட்டத்தின் இடையே பாப்கார்ன், தயிர் வடை, சாம்பார் வடை, குடிக்க கூல் ட்ரிங்ஸ், இஞ்சி டீ, காபி என்று விதவிதமாக அசத்தி இருந்தார்கள். மதிய உணவாக ஏற்பாடாகி இருந்த சைவ, அசைவ வகைகளும் அமர்க்களம்தான். இந்தத் தடபுடல் விருந்தைக் குறிப்பிட்டு மேடையில் பேசிய வழக்கறிஞர்கள் பிரிவைச் சேர்ந்த ரவிச்சந்திரன், ''விஜயபாஸ்கருக்கு தற்போது இரண்டாவது திருமணம் நடந்தது போல் உள்ளது'' என்று ஜாலியாக கமென்ட் அடிக்க.... ஏக கலகல!

இப்படி சந்தோஷமாகப் போய்க்கொண்டு இருந்த கூட்டத்தின் போக்கைத் திசை திருப்பினார் மாவட்ட அவைத் தலைவரான ரத்னசபாபதி. 'மாவட்டத்தில் இந்தக் கட்சி நோய்வாய்ப்பட்டு இருக்கிறது. அதைச் சரிசெய்யத்தான் அம்மா அவர்கள் மருத்துவரான விஜயபாஸ்கரை மாவட்டச் செயலாளராக நியமித்து இருக்கிறார். இதற்கு முன்பு பதவியில் இருந்தவர்கள், டாஸ்மாக் பார் வாங்கிக் கொடுக்க லட்சக்கணக்கில் பணம் வாங்கினார்கள். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஸீட் கேட்டவர்களிடம் பணம் வாங்கிக்​கொண்டு ஸீட் கொடுத்தார்கள்' என்று ஆரம்பித்து சரமாரியாகக் குற்றம் சுமத்திக்கொண்டே போக.... கூட்டத்துக்கு வந்திருந்த பலரும் கைதட்டி ஆமோதித்தார்கள்.

இதற்குள் முன்னாள் மாவட்டச் செயலாளரான வி.சி.ராமையாவின் ஆதரவாளர்கள் மேடைக்குச் சென்று ரத்னசபாபதியை அடிக்கப்போக, கூட்டத்தில் ஏகத்துக்கும் கூச்சல் குழப்பம்.

படாதபாடுபட்டு ஒருவழியாகக் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியவர்களை அமைதிப்படுத்தினார்கள். ரத்னசபாபதியின் பேச்சுக்குப் பதில் சொல்வதற்காக வி.சி.ராமையா எழுந்தார். அவரை இருக்கையில் அமரவைத்த விஜயபாஸ்கர், ''அ.தி.மு.க. என்பது மிகப் பெரிய கட்சி. இதில் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். நாம் அனைவருமே அம்மாவின் கட்டளைக்குக் கட்டுப்பட்டவர்கள். இனிமேல் இதுபோல் குற்றச்சாட்டுகள் எழாதவாறு நான் பார்த்துக்கொள்கிறேன். உங்கள் வேகத்தை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காட்டுங்கள்'' என்று விவகாரத்துக்கு முற்றுப்புள்ளிவைத்து  சமாளித்திருக்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சில அ.தி.மு.க-வினர், ''கடந்த உள்ளாட்சித் தேர்தலில் ரத்னசபாபதி மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட விண்ணப்பித்து இருந்தார். இவர் போட்டியிட்டு வென்றால், மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்குத் தனக்குப் போட்டியாக வந்துவிடுவார் என எண்ணிய வி.சி.ராமையா, ஸீட் கொடுக்க​விடாமல் தடுத்தார். அந்தக் கோபத்தில் இருந்த ரத்னசபாபதி, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, மேடையில் இப்படிப் பேசி அசிங்கப்படுத்திவிட்டார்.

'தானே’ புயல் நிவாரண நிதி வேண்டும் எனப் பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்தது போல், கட்சி நிர்வாகிகளுக்கும் அம்மா வேண்டுகோள் வைத்திருந்தார். மொத்தம் உள்ள 52 மாவட்டச் செயலாளர்களும் நிதி கொடுப்பதற்குள், முதல் ஆளாக 10 லட்ச ரூபாயை நிதியாக விஜயபாஸ்கர் கொடுத்து அம்மாவிடம் நல்ல பெயர் வாங்கினார். கட்சியினரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு செலவு செய்து கூட்டத்தை ஏற்பாடு செய்தார். ஆனால், அந்தக் கூட்டத்தில் நடந்த உட்கட்சிப் பிரச்னை அவருக்கு மிகப் பெரிய சங்கடத்தை உருவாக்கிவிட்டது. வேண்டும் என்றே கூட்டிவைத்து அசிங்கப்படுத்தியதாக ராமையா தரப்பினர் கோபத்தில் இருக்கிறார்கள். அதனால் தேவை இல்லாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கிளப்புவார்கள் என்ற பயத்தில் இருக்கிறார் விஜயபாஸ்கர்'' என்று சொன்னார்கள்.

வி.சி.ராமையா மீது மேடையிலேயே சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து அவரிடம் பேசினோம். ''கடந்த இரண்டு உள்ளாட்சித் தேர்தல்களிலும் கட்சி வேட்பாளரையே தோற்கடிக்க உள்ளடி வேலை பார்த்தவர் ரத்னசபாபதி. அதனால்தான், அவர் இம்முறை ஸீட் கேட்டபோது கொடுக்கக் கூடாது என்றேன். அந்தக் கோபத்தில்தான்  என்னைப் பற்றி தாறுமாறாகப் பேசிவிட்டார். அதை எல்லாம் நான் பொருட்படுத்தவில்லை'' என்றார்.

மாவட்டச் செயலாளர் விஜயபாஸ்கர், ''அன்று நடந்த கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் அவர்களது கருத்துகளைப் பரிமாறிக்கொண்டார்கள். மற்றபடி எந்த பிரச்னையும் நடக்கவே இல்லை'' என்றார் சிம்பிளாக.

இன்னும் என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்ளப்​போகிறாரோ டாக்டர்?

- வீ.மாணிக்கவாசகம்