Published:Updated:

வீரபாண்டியாருக்கு செக் வைக்கும் ஸ்டாலின்!

சேலம் தி.மு.க. கடமுடா தொடர்கிறது

##~##
வீரபாண்டியாருக்கு செக் வைக்கும் ஸ்டாலின்!

டந்த சில மாதங்களாக வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சிக்கல். மு.க.ஸ்டாலினுடன் மோதிய காரணத்​தால், அவரது மாவட்டச் செயலாளர் பதவியைப் பறிக்க புது வியூகம் வகுக்கப்படுவதாக செய்தி பரவிக்கிடக்கிறது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சேலம் தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகளிடம் விசாரித்தோம். ''தமிழ்நாடு முழுவதும் கட்சியை வலுப்படுத்த ஸ்டாலின் எடுத்த சில முடிவுகளுக்கு, சேலத்தில் வீரபாண்டியாரால் கடும் எதிர்ப்பு கிளம்​பியது. இதை அடுத்து வீரபாண்டியாரை வீட்டுக்கு அனுப்பினால் மட்டுமே, சேலத்தில் கட்சியை வலுப்படுத்த முடியும் என்று நினைக்கிறார் ஸ்டாலின்.

அதற்காக, கடந்த தி.மு.க. பொதுக்குழுவில் நிர்வாக வசதிக்காகப் 10 -க்கும் மேற்பட்ட சட்டசபைத் தொகுதிகள் உள்ள சில மாவட்டங்களை இரண்டாகப் பிரிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன்படி 11 சட்டமன்றத் தொகுதிகளைக்கொண்ட சேலம் மாவட்​டமும் குறிவைக்கப்பட்டது. கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு ஆகிய 6 சட்டசபைத்

வீரபாண்டியாருக்கு செக் வைக்கும் ஸ்டாலின்!

தொகுதிகளை சேலம் கிழக்கு மாவட்டமாகவும்... மேட்டூர், சங்ககிரி, வீரபாண்டி, எடப்பாடி, ஓமலூர் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளை சேலம் மேற்கு மாவட்டமாகவும் பிரித்து, கட்சியில் தேர்தல் நடத்தி மாவட்டச் செயலாளர்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என்று முடிவு எடுக்கப்பட்டது.

சேலம் கிழக்கில் உள்ள ஆறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், 10 ஒன்றியச் செயலாளர்கள் எல்லோருமே வீரபாண்டியாரின் எதிர் கோஷ்டியான பனமரத்துப்பட்டி ராஜேந்திரனின் ஆதரவாளர்கள். ஆகவே சேலம் கிழக்கில் ராஜேந்திரன் மாவட்டச் செயலாளர் ஆவது உறுதி. அடுத்து சேலம் மேற்கு. இங்கு உள்ள ஐந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், 10 ஒன்றியச் செயலாளர்கள் எல்லோருமே செல்வகணபதியை ஆதரிப்பவர்கள். சேலம் மேற்கில் வீரபாண்டியாரின் சார்பாக அவரது மகன் ராஜாவைக் களம் இறக்க நினைத்தாலும், அங்கு ராஜாவுக்கு தனி செல்வாக்கு கிடையாது.

இதையெல்லாம் தெளிவாக யோசித்து, கடுப்பாகிப்​​போனதால்தான் ஸ்டாலினுக்கு எதிராக தன்னிச்சையாக உறுப்பினர் சேர்க்கை, பொறுப்பாளர்கள் நியமனம் என்று களமிறங்கினார் வீரபாண்டியார்.

கட்சியில் புதிய உறுப்பினர்களை யார் நேரடியாகச் சேர்க்கிறார்களோ... அவர்களின் பெயர், பரிந்துரை என்ற இடத்திலும் அதனுடன் அவர்களது பொறுப்பு, கையப்பம், முகவரி ஆகியவையும் பூர்த்தி செய்யப்படவேண்டும் என்பது தி.மு.க-வின் நடைமுறை. ஆனால் கடந்த வாரம் தலைமையில் இருந்து அனுப்பப்பட்ட 10,000 பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களில், தானே உறுப்பினர்களைச் சேர்த்தது போன்று பரிந்துரை என்ற இடத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் கையெழுத்து இருக்கிறது.

இந்தப் புகாரைத் தலைமைக்குத் தட்டிவிட்டதால், முரசொலி இதழில் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், 'உறுப்பினர் படிவங்களை விநியோகிப்பவரே, பரிந்துரையாளராகத் தங்கள் பெயரையும் முகவரியையும் பூர்த்தி செய்யக் கூடாது. கழக அமைப்புக்களின் செயலாளர், நிர்வாகிகள் ஆகியோரில் எவரும் அந்தப் பொறுப்புக்கான முத்திரையிட்டோ, முகவரியை எழுதியோ அனுப்பலாகாது’ என்று அறிக்கை வெளியிட்டார்.

மாவட்டச் செயலாளர் தேர்தலை மனதில்வைத்து பயந்துபோய்தான் வீரபாண்டியார் இந்தக் காரியத்தைச் செய்துள்ளார். பரிந்துரை இடத்தில் தன்னுடைய கையெழுத்து இருப்பதால், உறுப்பினர் கார்டுகள் அனைத்தும் தன்னுடைய முகவரிக்குத்தான் வரும். அப்போது தன் ஆதரவாளர்களுக்கு மட்டுமே உறுப்பினர் அட்டைகளைக் கொடுக்கலாம் என்று நினைத்தார். ஆனால், இனி வீரபாண்டியார் என்ன செய்தாலும் வேலைக்கு ஆகாது. அவரை வீட்டுக்கு அனுப்​புவது உறுதி. சேலத்தில் வீரபாண்டியாரின் 30 ஆண்டு கால அரசியல் சாம்ராஜ்​யம் முடியப்போகிறது. உடனே இல்லை என்றாலும் விரைவில் சேலத்​தை இரண்டாகப் பிரித்து புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்து​​விடுவார்கள்'' என்று உறுதியாகச் சொன்னார்கள்.

இதுபற்றி வீரபாண்டி ஆறுமுகத்திடம் பேசியபோது, ''விண்ணப்பத்தில் அப்படி எழுத வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. இதுகுறித்த எந்த அறிக்கையையும் யாரும் வெளியிடவில்லை. நான் பார்க்கவும் இல்லை. சேலம் மாவட்டத்தைப் பிரிக்க மாட்டோம் என்பதை உயர் மட்ட பொதுக் குழுக் கூட்டத்திலேயே சொல்லிவிட்டார்கள். ஜனநாயக முறைப்படி மாவட்டச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். மற்றபடி யாராவது ஏதாவது சொல்லிக்கொண்டு இருப்பார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியது இல்லை'' என்றார்.

பார்க்கலாம்!

- வீ.கே.ரமேஷ்