Published:Updated:

குருக்கள் வீட்டில் வெடித்தது வெடிகுண்டா? சிலிண்டரா?

விலகாத ஈரோடு மர்மம்

##~##
குருக்கள் வீட்டில் வெடித்தது வெடிகுண்டா? சிலிண்டரா?

குருக்கள் ஒருவரின் வீட்டில் நடந்த வெடி விபத்து மர்மம் இன்னமும் நீடிக்கிறது! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஈரோடு குருக்கள் ஒருவரின் வீட்டில், கடந்த வாரம் படுபயங்கரமான சத்தத்துடன் ஒரு வெடி விபத்து. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், 'இது எரிவாயு சிலிண்டர் கசிவினால் ஏற்பட்ட விபத்து’ என்று சொல்லிவிட்டுப் போனார்கள். அடுத்து வந்து பார்த்த  இந்தியன் ஆயில் நிறுவனத்தினர், 'இது எரிவாயுக் கசிவு காரணமாக ஏற்பட்ட விபத்து அல்ல’ என்று மறுத்தார்கள். என்னதான் நடந்திருக்கும்?

சம்பவம் நிகழ்ந்த வீட்டுக்குச் சென்றோம். குருக்கள் சிவசுப்ரமணியத்தின் மகன் கபாலீஸ்வரனிடம் பேசினோம். ''சம்பவம் நடந்த அன்று நான் இங்கு இல்லை. தைப்பூசத் திருவிழாவின் கடைசி நாள் என்பதால், வெளியூரில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டேன். அம்மா, அப்பா மட்டும்தான் இருந்தார்கள். பின்னிரவு 2 மணிக்கு, என் பெற்றோர் உறங்கிக்கொண்டு இருந்த அறையில் உள்ள

குருக்கள் வீட்டில் வெடித்தது வெடிகுண்டா? சிலிண்டரா?

கண்ணாடி ஜன்னல்கள் பயங்கர சத்தத்துடன் உடைந்துள்ளன. அவர்கள் எழுந்து  பார்த்தபோது, சமையலறை தொடங்கி அனைத்து அறைகளிலும் தீ கொழுந்துவிட்டு எரிந்திருக்கிறது. . பயந்துபோன என் பெற்றோர், அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்து எனக்குத் தகவல் கொடுத்தனர்.

தீ அணைப்புத்துறையினர் வந்து நெருப்பை அணைத்த பிறகு, நாங்கள் உள்ளே சென்று பார்த்தோம். அறையில் இருந்த மர பீரோ இருந்த இடம் தெரியாத அளவுக்கு எரிந்து, இடிபாடுகளில் சிக்கி மண்ணோடு மண்ணாகிக்கிடந்தது. நல்ல வேளையாக எனது பெற்றோர் வெளியேறிவிட்டார்கள். இன்னும் சில நிமிடங்கள் உள்ளே இருந்திருந்தால் அவர்களும் உயிர் பிழைத்திருக்க முடியாது. நாங்களும் முதலில் காஸ் சிலிண்டர்தான் வெடித்திருக்கிறது என்று நினைத்தோம். தற்போது ஐ.ஓ.சி. அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 'இந்த விபத்து கேஸ் கசிவால் ஏற்படவில்லை’ என்று உறுதியாகச் சொல்கிறார்கள். அப்படி என்றால் எப்படித்தான் வெடித்ததோ... எல்லாம் கடவுளுக்குத்தான் வெளிச்சம்'' என்றார்.

குருக்களின் பக்கத்து வீட்டுக்காரரான தொண்டீஸ்வரன், ''இரவு திடீரென்று எங்கள் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. திருடன்தான் உள்ளே புகுந்துவிட்டான் என்று நினைத்து சத்தம் போட்டுக்கொண்டே எழுந்து கதவைத் திறக்க முயற்சி செய்தேன். ஆனால், கதவைத் திறக்க முடியவில்லை. வெளிப்புறத்தில் யாரோ தாழ் போட்டு இருப்பது

குருக்கள் வீட்டில் வெடித்தது வெடிகுண்டா? சிலிண்டரா?

தெரிந்தது. பிறகு சிரமப்பட்டுக் கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தேன். அப்போதுதான் பக்கத்து வீட்டில் விபத்து ஏற்பட்டு தீ எரிந்துகொண்டு இருந்ததைப் பார்த்தேன். ஆனால் எங்கள் வீட்டுக் கதவை யார் தாழ் போட்டார்கள் என்பதுதான் மர்மமாக இருக்கிறது'' என்றார் புரியாமல்.

இந்து அமைப்புகளின் எந்த ஓர் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்றாலும், சம்பவம் நடந்த வீட்டின் அருகே உள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் இருந்துதான் துவங்குமாம். அதனால் இது மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் நிகழ்த்திய குண்டு வெடிப்பாக இருக்கும் என்று ஊருக்குள் பீதி கிளம்பி இருக்கிறது.

காவல்துறை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வத்திடம் பேசினோம். ''குருக்கள் வீட்டில், சில முஸ்லீம் தீவிரவாதிகள் குண்டு வைத்துவிட்டதாகச் சிலர் விஷமத்தனமாகச் செய்தி பரப்பி மக்களிடையே தேவை இல்லாத பதற்றத்தை உருவாக்குகின்றனர். வெடித்தது வெடிகுண்டாக இருந்திருந்தால், பெரிய அளவில் சேதாரம் நிகழ்ந்திருக்கும். வெடிகுண்டு வெடித்தால், வீடே சிதைந்திருக்கும். மேலும் நாங்கள் தேடிப் பார்த்த வரையிலும், எந்த ஒரு சிறிய வெடிபொருளின் அடையாளமும் அங்கு இல்லவே இல்லை. அதனால் இது நிச்சயம் கேஸ் சிலிண்டர் விபத்துதான்'' என்றார்.

போலீஸ் சொல்வதை ஐ.ஓ.சி. தரப்பில் முற்றிலுமாக மறுக்கிறார்கள். ஈரோடு மண்டல ஐ.ஓ.சி. துணை மேலாளர் வெள்ளைச்சாமி ''இது கண்டிப்பாக எரிவாயு கசிவால் ஏற்பட்ட விபத்து கிடையாது. ஏனென்றால் விபத்து நடந்த வீட்டில் சிலிண்டர் அப்படியே இருக்கிறது. சிலிண்டரில் இருந்து ஸ்டவ்வுக்குச் செல்லும் டியூப் அப்படியே இருக்கிறது. தீயணைப்பு வீரர்களிடமும் நாங்கள் கேட்ட போது, 'சமையல் கேஸ் கசிவுக்கான எந்த வாசனையும் இல்லை’ என்று சொன்னார்கள்'' என்று உறுதியாகச் சொன்னார்.

வழக்கை முடிக்க வேண்டும் என்பதற்காக போலீஸ் உண்மையை மூடி மறைக்க கூடாது. பெரிதாக ஏதேனும் விபரீதம் ஏற்படுவதற்குள் விழித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.. அவசரம்..!

- ம.சபரி

படங்கள்: மகா. தமிழ்ப்பிரபாகரன்