Published:Updated:

அலங்கோலமானதே ஓவியர்கள் வாழ்க்கை...

வேதனையில் கவின்கலைக் கல்லூரி மாணவர்கள்

அலங்கோலமானதே ஓவியர்கள் வாழ்க்கை...

வேதனையில் கவின்கலைக் கல்லூரி மாணவர்கள்

Published:Updated:
##~##
அலங்கோலமானதே ஓவியர்கள் வாழ்க்கை...

'சென்னை மற்றும் கும்பகோணம் கவின் கலைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் வேலைக்கு, எந்த உத்தரவாதமும் இல்லை. அரசு இதில் ஒருதலைப்பட்சமாக நடக்கிறது. உதவுங்கள் ப்ளீஸ்’ என்று ஜு.வி ஆக்ஷன் செல் லுக்குத் (044-66808002) தகவல் வந்ததும் புகார் கூறிய அய்யாவுவைச் சந்தித்தோம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சென்னை மற்றும் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 1987-88 வரை கல்வித்துறையின் கீழ் ஐந்து வருட டிப்ளமோ படிப்பு வழங்கப்பட்டது. முதல் இரண்டு ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்பும் அடுத்த மூன்று ஆண்டுகள் சிற்பம், செராமிக், பெயின்டிங் போன்ற ஏதாவது ஒரு சிறப்பு பாடமும் கற்றுத் தரப்பட்டன. கவின் கலைக் கல்லூரியில் முதல் இரண்டு ஆண்டுகள் படித்தாலே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஓவிய ஆசிரியராகப் பணிபுரியலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்து இருந்தது. அதனால் ஐந்து வருட டிப்ளமோ கோர்ஸ் படித்தால் ஓவிய ஆசிரியர் ஆகிவிடலாம் என்று ஆயிரக் கணக்கான மாணவர்கள் படித்து முடித்தார்கள். இதற்கிடையில்  1988-ம் ஆண்டுக்குப் பிறகு கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் கவின் கலைக் கல்லூரிப் படிப்பை டிகிரி படிப்பாக மாற்றினார்கள். கும்பகோணம் கல்லூரியை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தோடும்,  சென்னைக் கல்லூரியை, சென்னை பல்கலைக்கழகத்தோடும்  இணைத்து நான்கு வருடப் படிப்பாக மாற்றினார்கள்.

அலங்கோலமானதே ஓவியர்கள் வாழ்க்கை...

பள்ளிகளில் நியமிக்கப்படும் ஓவிய ஆசிரியர் பணிக்கு கவின் கலைக் கல்லூரியில் டிப்ளமோ படித்தால் போதுமானது என்று 1989 அரசு ஆணை குறிப்பிட்டு உள்ளது. ஆனால் இப்போது அரசு ஆணையை யாரும் மதிப்பதே இல்லை. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ இன் டிராயிங் படித்தவர்கள் மற்றும் பள்ளிக்கல்வித் துறை நடத்தும் மூன்று மாத டி.டி.சி கோர்ஸ் முடித்தவர்களுக்குத்தான் வேலை கொடுக்கிறார்கள். கடந்த 2005-ம் ஆண்டு 560 பேருக்குப் பள்ளிக்கல்வித் துறை வேலைவாய்ப்பை வழங்கியது. கவின் கலைக் கல்லூரிகளில் படித்தவர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைத்ததோடு சரி, ஒருவருக்குக்கூட வேலை கிடைக்கவில்லை.

அலங்கோலமானதே ஓவியர்கள் வாழ்க்கை...

காரணம் கேட்டபோது, 'பள்ளிக்கல்வித் துறை பட்டச்சான்றிதழ் பெற்றவர்கள், டி.டி.சி படிக்காததால் வேலை பெறும் தகுதியை இழக்கிறார்கள்’ என்று விளக்கம் சொன்னார்கள். 'கவின் கலைக் கல்லூரியில் டிப்ளமோ படித்தால் அரசுப் பள்ளிகளில் ஓவிய ஆசிரி யராக பணி புரியலாம்’ என்று அரசு ஆணை இருக்கும்போது, ஏன் மீண்டும் நாங்கள் டி.டி.சி. கோர்ஸ் படிக்கவேண்டும்? டி.டி.சி. படிக்கும் மாணவர்களுக்குப் பயிற்சி தருவதே எங்கள் கல்லூரி மாணவர்கள்தான். பயிற்சி தருபவர்களுக்கே வேலை பெறத் தகுதி இல்லை என்று சொல்வது எந்தவிதத்தில் நியாயம்? இப்போது 5,000 பேருக்கு மேல் டிகிரி படித்து, வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம். இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தும், இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை.

அரசு இனியும் தாமதிக்காமல் சென்னை, கும்ப கோணம், மாமல்லபுரத்தில் டிப்ளமோ அல்லது டிகிரி படித்த அனைத்து கவின் கலைக் கல்லூரி மாணவர்களுக்கும் வேலை வழங்கவேண்டும். ஓவியம் படித்த எங்கள் வாழ்க்கை அலங்கோலமாக மாறிவிடாமல் அரசுதான் பாதுகாக்கவேண்டும்'' என்றார்.

பாதிக்கப்பட்ட மாணவர் களில் ஒருவரான பாலாஜி, ''நான் கும்பகோணம் கல்லூரியில் பி.எஃப்.ஏ. டிகிரி படித்தேன். கடந்த 2009-ம் ஆண்டு 231 ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்ட நேரத்தில், நாங்கள் உயர் நீதிமன்றத்தில் கவின் கலைப் பட்டதாரிகள் சங்கம் மூலமாக தடை பெற்றோம். 'டி.டி.சி. இல்லாததால் உங்கள் பட்டம் ஏற்கத்தக்கதல்ல...’ என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்தப் பிரச்னையை வேலூர் எம்.எல்.ஏ. லதா, வேல்முருகன் ஆகியோர் சட்டமன்றத்தில் பேசியும் எங்கள் வாழ்வில் விடியல் தென்படவில்லை.

கவின் கலைக் கல்லூரியில் டிகிரி படித்தால் அரசு வேலை கிடைக்காது என்ற அச்சம் காரணமாக, இந்தப் படிப்பு படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. 65 பேர் படிக்க வேண்டிய வகுப்புக்கு 35 பேர்கூட சேர்வது இல்லை. 175 வருடங்கள் ஆன பாரம்பரியமிக்க கல்லூரியின் நிலைமை வேதனையாக இருக்கிறது. இப்போது பகுதி நேர ஆசிரியர்களை அரசு நியமிக்க இருப்பதாக அறிவித்து இதிலாவது எங்களுக்கு வாய்ப்பு அளித்து, எங்கள் வாழ்வில் விளக்கேற்ற வேண்டும்'' என்று விரக்தியோடு பேசினார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிவபதியிடம் இவர்கள் விவகாரத்தை முழுமையாக எடுத்துச் சொன்னோம். 'அப்புறம் பேசலாம்’ என்று கழன்று கொண்டவர் பிறகு நமக்கு நேரம் ஒதுக்கவே இல்லை. பள்ளிக்கல்வித்துறை செயலர் சபிதாவிடம் பேசினோம். ''இதுவரை என் கவனத்துக்கு இந்த விஷயம் வரவில்லை. இருப்பினும் என்ன குறைபாடு என்பதைப் பார்த்து என்னால் முடிந்ததைச் செய்கிறேன்'' என்றார்.

ஓவியக் கனவு வீணாகலாமா?

- க.நாகப்பன்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ந.வசந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism