Published:Updated:

பலூன் விளையாட்டு... பாவ மன்னிப்பு!

தஞ்சை 'பலான' பாதிரியார்

பலூன் விளையாட்டு... பாவ மன்னிப்பு!

தஞ்சை 'பலான' பாதிரியார்

Published:Updated:
##~##
பலூன் விளையாட்டு... பாவ மன்னிப்பு!

பெண்கள் படிக்கும் கல்லூரியில் நடந்த கிறிஸ்தவப் பிரார்த்தனைக் கூட்டத்தில், 'நீங்கள் வேறு ஆண்களுடனோ, பெண்களுடனோ உடலுறவு வைத்திருந்தீர்கள் என்றால், இப்போதே பாவ மன்னிப்புக் கேளுங்கள்’ என்று ஒரு பாதிரியார் வெளிப்படையாகச் சொல்லவே, அதிர்ந்து போனார்கள் மாணவிகள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள முத்துப்பிள்ளை மண்டபத்தில் திரு இருதய ஆண்டவர் செவிலியர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கே சுமார் 120 மாணவிகள் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கிறார்கள். இந்தக் கல்லூரியின் பாதிரியார் மரிய பிரான்சிஸ்தான் இப்படிப் பேசியவர். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாணவிகள் கடந்த 22-ம் தேதி கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள்.

பலூன் விளையாட்டு... பாவ மன்னிப்பு!

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவிகளிடம் பேசினோம். ''இந்தக் கல்லூரி ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு, இங்கே பாதிரியார் மரிய பிரான்சிஸ் வந்ததில் இருந்தே பிரச்னை ஆரம்பித்துவிட்டது. முதலில் கல்லூரிக் கட்டணத்தை அதிகமாக்கினார்.அதுவரை  இருந்த நல்ல வார்டனை மாற்றினார். 'கிறிஸ்தவக்  கல்லூரின்னா இப்படித்தான் இருக்கணும்’ என்று இங்கு படிக்கும் இந்து மாணவிகளுக்கு ஏகப்பட்ட கண்டிஷன்களைப் போட்டார்.

பாத்ரூம் கழுவுவது உள்பட எல்லா வேலைகளையும் எங்களையே செய்ய சொன்னார். போன் பேசுவது, டி.வி. பார்ப்பது, லீவு கொடுப்பது போன்ற ஒவ்வொன்றிலும் கெடுபிடி செய்ய ஆரம்பித்தார். வாரத்துக்கு மூன்று முறை காலேஜ் ஹாஸ்டலுக்கு வருவார். அதுவும் இரவு 8 மணிக்குத்தான் வருவார். நாங்க எல்லோரும் நைட்டி போட்டிருப்போம். பாதிரியார் வந்து, உங்களுக்குப் புத்துணர்வுக்காக விளையாட்டு சொல்லித்தர்றேன்னு சொல்லி, பலூனை ஊதிப் பறக்கவிடுவார். நாங்கள் பின்னால் கையைக் கட்டிக்கொண்டு அதை ஊதித் தள்ளணும். அப்போது உட்காந்து கொண்டு ஆர்வத்துடன் வேடிக்கை பார்ப்பார். அடிக்கடி டபுள் மீனிங்கில் பேசுவார்.

பலூன் விளையாட்டு... பாவ மன்னிப்பு!
பலூன் விளையாட்டு... பாவ மன்னிப்பு!

சனிக்கிழமை சாயங்காலம் பாட்டு சொல்லித் தருவதாக அழைத்தார். பிரார்த்தனைக் கூட்டத்தில் எல்லோரும் இருக்கும்போது பாதிரியார் எங்களைப் பார்த்து 'இதற்கு முன்பு நீங்கள் ஆண்களுடன் உடலுறவு வைத்திருந்தாலோ, இல்லை பெண்களுடன் உடலுறவு வைத்திருந்தாலோ மன்னிப்புக் கேளுங்கள்’ என்றார். அத்தனை பேர் இருக்கும் இடத்தில் பாதிரியார் இப்படி பேசியது எங்களுக்கு பெரும் அவமானமாகிவிட்டது. இதுபற்றிக் கேட்டதும், இன்டர்னல் மார்க் போட மாட்டோம் என்று மிரட்டினார். இவருக்கு உடந்தையாகவே வார்டன் டயானாவும் செயல்படுகிறார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எங்களுக்குத் தொல்லை கொடுக்கும் இவர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்கள் உறுதியுடன்.

'மாணவிகளுக்குப் பாதுகாப்பு வேண்டும்’, 'தனி மனித ஒழுக்கம் மீறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடு’, 'பாலியல் தொல்லை கொடுக்கும் பாதிரியார் மேல் நடவடிக்கை எடு’ என்று மாண விகள் தங்கள் கைப்பட எழுதி கல்லூரி முழுவதும் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டி இருந்தனர். கேட்டை இழுத்து மூடி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இதனை அடுத்து காவல் துறையினர், அரசுத் துறை அதிகாரிகள், அரசியல் கட்சியினர் கல்லூரி முன்பு திரண் டதால் பதற்றம் உருவானது. உண்ணாவிரதம் மேற்கொண்ட சில மாணவிகள் மயங்கி விழவே போராட்டம் தீவிரமானது. இதைக் கண்டு வெளியூர்களில் இருந்து வந்த மாணவிகளின் பெற்றோர் களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பலூன் விளையாட்டு... பாவ மன்னிப்பு!

இக்கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியின் தந்தையான அருள்ராஜ், ''நான் சென்னையில் வசிக்கிறேன். நானும் ஒரு கிறிஸ்தவன் தான். அதற்காக இந்த அக்கிரமங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது. பெற்றோரான நாங்கள் ஹாஸ்டலுக்குள் போகவே முடியாது. என்ன கேட்டாலும், 'டி.சி. வேணுமா?’ என்று மிரட்டுகிறார்கள். இரண்டு பெண்கள் பேசிக்கொண்டாலே ஓரினச் சேர்க்கை என கொச்சைப்படுத்தி அசிங்கப்படுத்துகிறார்கள். இதையெல்லாம் எங்களிடம் சொல்லக்கூட முடியாமல், எங்கள் பெண்கள் மரண வேதனையை அனுபவித்து இருக்கிறார்கள். வாரத்தில் ஒரு நாள் அதுவும் மூன்று நிமிடங்கள்தான் பெற்றோர்கள் போன் பேச வேண்டும். அதையும் அருகில் இருந்து கேட்டுக் கொண்டு இருப்பார்கள். குரு பீடத்தில் இருந்து கொண்டு, ஃபாதர் அப்படிப் பேசியது கடும் குற்றம். பாதிரியார் மற்றும் வார்டனை உடனே நீக்கவேண்டும்'' என்று ஆவேசமானார்.

மாணவர்களின் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து அன்று மாலை, கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணி சாமி, கும்பகோணம் ஆர்.டி.ஓ. வெங்கடேசன், டி.எஸ்.பி-க்கள் சிவ பாஸ்கர், இளங்கோவன் ஆகியோர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு, வார்டன் நீக்கப்பட்டு உள்ளார். பாதிரியார் மரிய பிரான்சிஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். 'விரைவில் அவரை இந்தக் கல்லூரியில் இருந்து மாற்றிவிடுவோம்’ என்று உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

பாதிரியார் மரிய பிரான்சிஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதால், அவர் கல்லூரிக்கு வரவில்லை. அவரை சந்திக்கவோ, தொடர்பு கொள்ளவோ முடியவில்லை என்பதால் அவருடைய விளக்கத்தைப் பெற முடியவில்லை.

அவர், ''மாணவிகளை மன அழுத்தத்தில் இருந்து காப்பாற்றத்தான் பலூன் விளையாட்டு விளையாடச் சொன்னேன். அதே போல பாவ மன்னிப்பு கேட்கச் சொன்னதும் சாதாரணமானதுதான். எங்கள் மீது மாணவிகள் வேண்டுமென்றே பழி போடுகிறார்கள்'' என்று மரிய பிரான்சிஸ் விளக்கம் தெரிவித்ததாக அவருக்கு வேண்டப்பட்டவர்கள் சொன்னார்கள். அவர் தனது தரப்புக்  கருத்தைச் சொல்ல விரும்பினாலும் பிரசுரம் செய்யத் தயாராகவே இருக்கிறோம்.

- சி.சுரேஷ்

படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism