Published:Updated:

பணம் திருடாமல் டிஸ்க் எடுத்தது ஏன்?

சந்தேகம் கிளப்பும் மதுரை வங்கிக் கொள்ளை

பணம் திருடாமல் டிஸ்க் எடுத்தது ஏன்?

சந்தேகம் கிளப்பும் மதுரை வங்கிக் கொள்ளை

Published:Updated:
##~##
பணம் திருடாமல் டிஸ்க் எடுத்தது ஏன்?

மிழகம் முழுவதும் சர்வசாதாரணமாக வங்கிக் கொள்ளை நடக்கும்போது, மதுரை மட்டும் விதிவிலக்கா என்ன? கடந்த 6-ம் தேதி கே.கே.நகரில் உள்ள கூட்டுறவு வங்கி ஒன்றில் கொள்ளை முயற்சி நடந்தது. அதில் சம்பந்தப்பட்டவர்களை இதுவரை பிடிக்கவில்லை. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், சென்னையில் வங்கிக் கொள்ளையர்கள் ஐந்து பேர் சுட்டுக்​கொல்லப்பட்ட அதே இரவில், மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள பாங்க் ஆஃப் பரோடாவில் ஒரு கொள்ளை நடந்திருக்கிறது. ஆனால், இங்கே திருடப்​பட்டது பணம் இல்லை என்பது​தான் ஆச்சர்​யத்தையும் சந்தேகத்தையும் கிளப்​புகிறது.

கொள்ளை நடந்த வங்கிக்குச் சென்​றோம். மக்கள் நெருக்கமுள்ள குடியிருப்புப் பகுதியில்

பணம் திருடாமல் டிஸ்க் எடுத்தது ஏன்?

அமைந்திருக்கிறது வங்கி. அதன் மாடியில் இருக்கும் மூன்று வீடுகளின் ஒன்றில் வங்கியின் மேலாளர் குடியிருக்கிறார். மாடியில் வசிப்பவர்களின் வசதிக்காக அந்த காம்பவுண்டின் ஒரு கேட் திறந்த நிலையிலேயே இருக்கிறது. வங்கியின் பின்பக்கம் மரக்கதவுடன் கூடிய வாசல். உள்பக்கம் இரும்புத் தடி போட்டும், வெளிப்பக்கம் கிரில் கேட் போட்டும் உறுதியுடன்(?) இருந்த, அந்தக் கதவைத்​தான் கொள்ளையர்கள் உடைத்துப் புகுந்திருக்கிறார்கள்.

'கணக்குப் பிரிவில் இருந்த ஐந்து கம்ப்யூட்​டர்களின் சி.பி.யு-க்களையும் மேஜை மீது வைத்து கழற்றி இருக்கிறார்கள். ஆனால், இரண்டு சி.பி.யு.க்களில் மட்டும் ஹார்ட் டிஸ்க்குகள் மட்டும் திருடு போயிருக்கிறது. இரண்டு எல்.சி.டி. மானிட்டர்களைக் காணவில்லை. மற்றபடி வங்கி லாக்கரைரோ, கேஷியர் அறையையோ திறக்க முயற்சி செய்யவில்லை. லாக்கரைத் திறக்க முயன்றிருந்தால் அலாரம் அடித்திருக்கும்'' என்கிறார்கள் வங்கி ஊழியர்கள்.  

பணம் திருடாமல் டிஸ்க் எடுத்தது ஏன்?

சம்பவத்தன்று வங்கி மேலாளர் முருகையா கோவைக்குச் சென்றுவிட்டதால், துணை மேலாளர் நாகராஜன்தான் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். பணம் கொள்ளை போகாத காரணத்தாலோ என்னவோ, போலீஸார் ஹவுஸ் பிரேக்கிங் (இ.பி.கோ. 457, 380) போன்ற சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

'கோர் பேங்கிங் சிஸ்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, வங்கி தொடர்பான அனைத்து வரவு செலவு விவரங்களும் அந்தந்த வங்கிகளிலேயே சேமிக்கப்பட்டு வந்தன. ஒவ்வொரு வாரம், மாதமும் கம்ப்யூட்டரில் இருந்து அந்தத் தரவுகளை எடுத்து பாதுகாத்து வைப்பார்கள். வாடிக்கையாளர்களின் கணக்கு எண், ரகசிய எண் போன்றவை அதில் இருக்கும். தற்போது போலி ஏ.டி.எம். கார்டு முலம் கொள்ளை அடிக்கும் கும்பல் அதிகரித்துவிட்டதால், அதுபோன்ற தகவல்களை எதிர்பார்த்து இந்தக் கொள்ளை நடந்திருக்கலாம்.

அல்லது, வங்கியில் ஏதேனும் முறைகேடு, பணம் கையாடல் செய்தவர்கள், அதிகக் கடன் வாங்கியவர்கள் அந்தத் தகவலை அழிப்பதற்காக ஹார்டு டிஸ்க்கைத் திருடி இருக்கலாம். ஆனால், வங்கித் தரப்பிலோ சில ஆயிரம் மதிப்புள்ள வெறும் ஹார்டு டிஸ்க்கைத் திருடத்தான் கொள்ளையர்கள் வந்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். யாராவது வெண்கலப் பூட்டை உடைத்து விளக்குமாற்றைத் திருடுவாங்களா சார்?' என்று போலீஸ் தரப்பிலே டென்ஷன் ஆகிறார்கள்.

பணம் திருடாமல் டிஸ்க் எடுத்தது ஏன்?

இதுகுறித்து வங்கி மேலாளர் முருகையாவிடம்கேட்ட​ போது, 'இப்போது எங்கள் வங்கி அனைத்துக் கிளைகளுடனும் இணைக்கப்பட்டுவிட்டது. அதனால் வங்கிக் கணக்கு, கடன் கணக்கு உள்பட எதையும் நாங்கள் சேமித்து வைப்பதில்லை. அவை எல்லாம் மும்பையில்தான் பதிவு ஆகும். மற்றவர்கள் கணக்கைத் திறந்து பார்க்க வேண்டும் என்றால்கூட குறைந்த பட்சம் யூஸர் நேம், பாஸ்வேர்டு, டொமைன் பாஸ்வேர்டு கொடுத்துத்தான் உள்ளேயே நுழைய முடியும். சந்தேகப்படும்படியான ஊழியர்கள் யாரும் எங்கள் வங்கியில் இல்லை. முறைகேடு, ஒழுங்கு நடவடிக்கை போன்ற பிரச்னையில் சிக்கியவர்களும் இல்லை' என்றார் உறுதியான குரலில்.

திடீர்நகர் காவல் உதவி ஆணையர் பேச்சிமுத்துப் பாண்டியனிடம் கேட்ட​போது, 'ஒவ்வொரு திருடனுக்கும் ஒரு ஸ்டைல் இருக்கிறது. எனவே, இதே போல கம்ப்யூட்டர் திருட்டில் சிக்கிய வேறு நபர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று விசாரித்து வருகிறோம். அதேநேரத்தில், வங்கி ஊழியர்கள் யாருக்கும் இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. விரைவில் குற்ற​வாளிகளைப் பிடித்து​விடுவோம்'' என்றார்.

''பணம் கைக்கு அருகே இருந்தும் அதை எடுக்க எந்த முயற்சியும் செய்​யாமல், டிஸ்குகளை மட்டும் சாவ​காச​மாக எடுத்துச் சென்று இருக்​கிறார்கள் என்றால் மிகப்பெரிய சதி நடக்கப்போகிறது. போலீஸ் உஷாராக இருக்கவேண்டும்'' என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள், பொதுமக்கள்.

- கே.கே.மகேஷ்,

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism