##~## |

'புரட்சித் தலைவி அம்மாவுக்குப் பாதகமாக, பெங்களூருவில் நடந்துவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் எதுவும் நிகழ்ந்துவிடக் கூடாது என்று போடியில் உள்ள எல்லை பத்திரகாளியம்மன் கோயிலில் மகா பிரம்ம சித்தயாகம் நடத்தினேன். இப்போது என்னுடைய உயிருக்குப் பாதுகாப்பு இல்லை’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் சொன்னார் (044-66808002) சுந்தரவடிவேல் சுவாமிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கூடலூரை அடுத்த லோயர் கேம்ப்பில் இவரைச் சந்தித்தோம். ''நான் தீவிர எம்.ஜி.ஆர். ரசிகன். அவரது மறைவுக்குப் பிறகு ஆன்மீகத்தில் ஈடுபட்டு, முறைப்படி யாகங்கள் செய்து வருகிறேன். 1991-ம் ஆண்டு முதல் அம்மாவுக்காகத் தொடர்ந்து யாகங்கள் நடத்தி வருகிறேன். 2001-ம் ஆண்டு சுதாகரன் தலைமையில் முல்லைப் பெரியாறு கரையில் யாகம் நடத்தினேன். அதன் பிறகு நான் நடத்தி வரும் யாகத்துக்காக யாரிடமும் எந்தவிதப் பணமும், பொருளும் வாங்குவது இல்லை.


இந்த முறை நான் போடியைத் தேர்வு செய்ததற்குக் காரணம் இருக்கிறது. 1,000 ஆண்டுகளுக்கு முன்பு போடியை 'சதம்பவனம்’ என்று அழைத்தார்கள். போடியை ஆண்ட மன்னர்கள் யாருமே நலமாக வாழ்ந்தாகச் சரித்திரம் இல்லை. ஏன் என்றால் இது ஒரு சாப பூமி. இங்கு ஜெயலலிதாவுக்கும் தொடர்பு இருக்கிறது.
இங்கே ஜெயலலிதா சேவல் சின்னத்தில் நின்று வெற்றிபெற்று, எதிர்க் கட்சி தலைவர் ஆனார். இப்போது ஓ.பன்னீர்செல்வம் அமைச்சராக இருக்கிறார். ஒரு

தொகுதியில் இரண்டு முதல்வர்கள் நின்று ஜெயிக்கலாம். ஆனால் ஒரே கட்சியில் இரண்டு 'முதல்வர்கள்’ இருக்க முடியாது. அதனால் ஏற்படும் விளைவுகளைத் தீர்க்கத்தான் இங்கு யாகம் நடத்தினேன்.
பெங்களூரில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கில் அம்மாவுக்கு எதிராகத் தீர்ப்பு வந்துவிடும் என்று நினைத்து பலரும், அடுத்த முதல்வர் ஆசையில் காய் நகர்த்துகிறார்கள். சத்தம் இல்லாமல் ஒரு யுத்தமே நடக்கிறது. அதனால்தான் அம்மாவின் உடல்நலத்துக்காகவும், அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுபடவும் யாகம் நடத்தினேன். அம்மாவுக்காக யாகம் நடத்தினால் தப்பா என்ன?
ஆனால் எனக்கு இப்போது உயிர் பாதுகாப்பு இல்லை. 'நீ யாருடா அம்மாவுக்காக யாகம் நடத்துவதற்கு? யாகம் நடத்தினால் உன்னை 'காணாமல்’ செய்துவிடுவோம் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் ஆட்களும் தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ-வின் ஆட்களும், என்னை மிரட்டுகிறார்கள்.
நான் முதன் முதலாக கொடைக்கானலில் யாகம் நடத்தியபோதே, அமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் வந்து என்னை மிரட்டினார். தங்க தமிழ்ச்செல்வனின் ஆட்கள் வந்து, எனது ஆசிரமத்தில் இருந்த

ஆட்களைத் தாக்கினார்கள். மாவட்ட அரசியலைப் பொறுத்தவரைபன்னீர்செல்வமும், தங்க தமிழ்ச்செல்வனும் மோதிக்கொண்டு இருந்தாலும், என்னை மிரட்டுவதற்கு மட்டும் இருவரும் ஒன்று சேர்ந்துகொள்கிறார்கள்.
அம்மாவுக்கு தற்போது உடல் நலம் சரியில்லை. சொத்துக் குவிப்பு வழக்கு, துரோகச் சதிகள் என்று அவரது மனமும் காயப்பட்டு இருக்கிறது. அதனால்தான் யாரிடமும் பணமும், பொருளும் வாங்காமல் யாகம் நடத்தினேன். இனி அம்மாவுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது'' என்று ஆருடம் சொன்னார்.
அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் தொடர்பு கொண்டு தகவல் கேட்டோம். முழு விபரத்தையும் தெளிவாகக் கேட்டுக் கொண்டவர் சிரித்துக்கொண்டே, ''அவர் யாரு, என்ன என்பதேதெரியாது. இப்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வேலைகளில் பிஸியாக இருக்கிறேன்'' என்றார்.
தங்க தமிழ்ச்செல்வனைத் தொடர்பு கொண்டபோது அவரது சகோதரர் தங்க முருகன் போனை எடுத்துப் பேசினார். தகவலைச் சொன்னதும், ''அவன் யாருன்னே தெரியாது. அவனுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை. 'மென்டலா’ இருப்பார் போல...'' என்றவர், எம்.எல்.ஏ. வந்ததும் பேசச் சொல்கிறேன்என்றார்.
அடுத்துப் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், ''அம்மா நல்லா இருக்கணும் என்று யாகம் செய்கிறார் என்றால் நான் வரவேற்கிறேன். ஆனால் அதெல்லாம் தேவையில்லை'' என்றார்.
மீண்டும் கடந்த 25-ம் தேதி நம்மைத் தொடர்பு கொண்டு பேசிய சுந்தரவடிவேல் சுவாமி, ''முன்பு ஒரு முறை என்னை ஆசிரமத்தில் வந்து தாக்கிய சில குண்டர்களை, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தங்க தமிழ்ச்செல்வன் ஜாமீனில் எடுத்தார். அந்தக் குண்டர்கள் இப்போது என்னைத் தேடி ஆசிரமத்துக்கு வந்தார்களாம். நல்லவேளையாக நான் வெளியே போயிருந்தேன். நான் உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு போலீஸில் புகார் கொடுக்கச் சென்றேன். ஆனால், என்னுடைய புகாரை அவர்கள் வாங்கவே இல்லை. எந்த நேரத்திலும் என்னுடைய உயிருக்கு ஆபத்து வரலாம்'' என்று அலறினார்.
இந்தப் புகார் குறித்து கூடலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிலிப் கென்னடியிடம் கேட்டபோது, ''நீங்கள் சொல்வது போல் யாருமே புகார் கொடுக்க வரவில்லையே'' என்றார்.
ஜெயலலிதாவிடம் நல்ல பேர் வாங்க சாமியார் காமெடி பண்ணுகிறாரா என்று தெரியவில்லை!
- சண்.சரவணக்குமார்