Published:Updated:

1,977 கணக்கு; மூடாதது 169..! - தேனியை மிரட்டும் ஆழ்துளைக் கிணறுகள்

தேனி மாவட்டம் முழுவதும் மொத்தம் 169 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

ஆழ்துளைக் கிணறு
ஆழ்துளைக் கிணறு

தேனி மாவட்டத்தில் மூடப்படாமல் மொத்தம் 169 ஆழ்துளைக் கிணறுகள் இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இவை அனைத்தும் ஊராட்சிகளுக்குச் சொந்தமானது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆழ்துளைக் கிணறு
ஆழ்துளைக் கிணறு

மணப்பாறை அருகே 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை ஆழ்துளைக் கிணறுகள் கைவிடப்பட்டு மூடப்படாமல் இருக்கின்றன என கணக்கெடுக்கும்படி, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், மாவட்டத்தில் எத்தனை ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன, அவற்றில் எத்தனை கைவிடப்பட்டு மூடப்படாமல் உள்ளன என்று கணக்கெடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

`அலட்சியமாக விடப்பட்டிருந்த 8,737 ஆழ்துளைக் கிணறுகள்!’ -அதிரடி காட்டிய வேலூர் கலெக்டர்

அதன்படி, கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தேனி மாவட்டம் முழுவதும் மொத்தம் 169 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இவை அனைத்தும் ஊராட்சி நிர்வாகத்தால் போடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் என்றும் சுகாதார வளாகங்கள், குடியிருப்புகள் என பொது இடங்களில் இவை இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆழ்துளைக் கிணறு
ஆழ்துளைக் கிணறு

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அதிகாரி ஒருவர், ``தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் குடிநீர் தேவைக்காக மொத்தம் 1,977 ஆழ்துளைக் கிணறுகள் இதுவரை அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1,509 ஆழ்துளைக் கிணறுகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.

மீதமுள்ள 468 ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் இல்லாததால் அவற்றை கைவிட்டுள்ளது ஊராட்சி நிர்வாகம். அதில், 299 ஆழ்துளைக் கிணறுகள் மட்டுமே முறையாக மூடி போட்டு மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள 169 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் உள்ளன. அவற்றை மூடும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” என்றார்.

ஆழ்துளைக் கிணறு
ஆழ்துளைக் கிணறு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தோப்புப்பட்டியில் கடந்த 2009-ம் ஆண்டு கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் விழுந்து மீட்கப்பட்டு, மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தான். தேனியில் மீண்டும் அது போன்றதொரு சம்பவம் நடைபெறாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.