ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

அரசுப் பணியில் இடஒதுக்கீடு!

ஓங்கி ஒலிக்கும் திருநங்கைகள் குரல்

##~##
அரசுப் பணியில் இடஒதுக்கீடு!

'பிச்சை எடுக்க மாட்டோம். பாலியல் தொழிலில் ஈடுபட மாட்டோம். எங்களுக்கான சில கோரிக்கைகளை மட்டும் அரசு நிறைவேற்றித் தந்தால் போதும்’ என்று 'சங்கமா’ எனும் திருநங்கைகளுக்கான அமைப்பு கடந்த 24-ம் தேதி சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு அருகில், கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தியது. இதில் தென்னக ரயில்வே நீதிமன்றக் குற்றவியல் நடுவர் ஜெயந்தி, ரயில்வே கமிஷனர் காந்தி, சமூக நலத் துறை துணை இயக்குநர் யமுனா, திருநங்கை பிரியாபாபு உள்ளிடட பலர் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய சமூகநலத் துறை இணை இயக்குநர் யமுனா, ''அரசு ஆணை எண் 38-ன் படி 2008-ம் ஆண்டு திருநங்கை நல வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உறுப்பினர்கள் ஆன 3,900 திருநங்கைகளுக்கும், மருத்துவக்குழு மூலம் மருத்துவச் சான்றிதழும், அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளன. திருநங்கைகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்க, சுய உதவிக்குழுக்களுக்குப் பொருளாதாரக் கடன் வசதி மற்றும் சிறு வணிகக் கடன் வசதி ஏற்படுத்தப் பட்டன. 15 லட்சம் ரூபாய் வரை சுய உதவிக் குழுக்கள் கடன் பெறலாம். இதில் 25 சதவிகித மானியத்தை அரசு ஏற்கும். இதுவரையில் 2.25 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டுள்ளது'' என்று சமூகநலத் துறையின் பங்கினை வெளிச்சம் போட்டார்.

அரசுப் பணியில் இடஒதுக்கீடு!
அரசுப் பணியில் இடஒதுக்கீடு!

திருநங்கைகளின் மன வலிகளையும், நடைமுறைச் சிக்கல்களையும் அழுத்தமாகச் சொன்னார் பிரியாபாபு. ''திருநங்கைகளுக்கான அடையாள அட்டை தமிழில் மட்டுமே தரப்படுவதால், வங்கி, பாஸ்போர்ட் அலுவலகம் போன்ற பல இடங்களில் பயன்படுத்த முடிவது இல்லை. இனி அடையாள அட்டையில் என்ன பாலினம் என்று தெளிவாகக் குறிப்பிடுவதோடு தமிழ், ஆங்கிலம் போன்ற இரண்டு மொழிகளிலும் இருக்கவேண்டும். ஆணாக இருந்து பெண்ணாக மாறும்போது, படித்த சான்றிதழ்களில் பாலினத்தை மாற்றும் வகையில் சட்டம் பிறப்பிக்க

அரசுப் பணியில் இடஒதுக்கீடு!

வேண்டும். தன்னம்பிக்கை, திறமை இருந்தும் திருநங்கைகள் கடைகளில் கையேந்திப் பிச்சை எடுப்பது, பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்குக் காரணம்... வேலை கிடைக்காததுதான். எங்க ளுக்கு என்று வேலை கிடைத்தால், பிச்சை எடுக்கவோ, தவறான வழிகளில் செல்லவோ மாட்டோம்.

இயல்பாகவே திருநங்கைகளுக்கு அழகு உணர்ச்சியும், சமையல் திறமையும் இருக்கிறது. மத்திய அரசு, தென்னக ரயில்வேயில் சமைத்தல், பரிமாறுதல், துப்புரவுப் பணி செய்தல் போன்ற வேலைகளை திருநங்கைகளுக்குத் தரவேண்டும். இதற்காக, திருநங்கைகளுக்கு குறிப்பிட்ட சதவிகித இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். பெண்களுக்கு மகப்பேறின்போது, 6,000 ரூபாய் பணம் தந்து அரசு உதவுவது போல, பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் திருநங்கைகளுக்கும் பண உதவி வேண்டும். டெய்லரிங், துணிக்கடை, கேன்டீன் வைப்பதற்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளிப்பதுடன், கடன் வசதிகளையும் ஏற்பாடு செய்துதர வேண்டும். நாங்கள் சமூகத்தோடு, மக்களோடு இணைந்து வாழ விரும்புகிறோம். அதற்கு அரசுதான் உதவியும் சலுகையும் தரவேண்டும்'' என்று ஆக்கபூர்வமான கோரிக்கைகளை முன்வைத்தார்.

அரசுப் பணியில் இடஒதுக்கீடு!

ரயில்வே கோர்ட் நீதிபதி ஜெயந்தி, ''திருநங்கைகளின் படிப்பு, வேலை வாய்ப்புக்கு அரசு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். எல்லோரும் சமமாக வாழ்வதற்கு உரிய அடிப்படை உரிமைகளை திருநங்கைகள் பெற, அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தவேண்டும்'' என்று பேசியதும் ஆதரவு அலைகள் அதிகரித்தன.

அடுத்துப் பேசிய திருநங்கை விஜய், ''ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, திருநங்கை உறுப்பினர் அட்டை மூன்றையும் தந்தால்தான் சுய உதவிக்குழுவில் சேர முடியும், வங்கிக் கணக்கை ஆரம்பிக்க முடியும் என்ற நிலை உள்ளது. இந்த மூன்று ஆவணங்களும் எல்லோரிடமும் இருப்பது இல்லை. இதில் ஓர் ஆவணம் இருந்தாலே சுய உதவிக்குழுவில் சேரலாம் என்று திருத்தவேண்டும். ஒருவரே வாடகை தந்து சமாளிக்க முடியாத நிலையில் நான்கைந்து பேராக ஒரே வீட்டில் தங்கி வருகிறோம். அப்படி தங்கினால் ஒருவருக்கு மட்டுமே ரேஷன் கார்டு கிடைக்கிறது. எல்லோருக்கும் ரேஷன் கார்டு கிடைத்தால்தான், பொருட் களை வாங்கிப் பயன்படுத்த வசதியாக இருக்கும். அடிக்கடி வீடு மாறும் சூழல் உருவாகிவிடுவதால், ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும்போது ஒரு முகவரியும், நல வாரிய உறுப்பினர் அட்டையில் ஒரு முகவரியும் இருக்கிறது என்று சொல்லி ரேஷன் கார்டு தரப்படுவது இல்லை. ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பிக்கும்போது, மனுவில் இருக்கும் முகவரியில்தான் வசிக்கிறார்களா என்று விசாரணை செய்தாலே, பலருக்கும் ரேஷன் கார்டு கிடைக்கும். இது எங்களுடைய வாழ்வாதாரப் பிரச்னை என்பதால், அசட்டை செய்யாமல் உதவவேண்டும்'' என்று பேசியது திருநங்கைகளின் ஒட்டுமொத்தக் குரலாக ஒலித்தது.

திருநங்கைகளின் வாழ்வில் ஒளியேற்றிய பெருமை இன்றைய முதல்வருக்குக் கிடைக்கட்டுமே!

- க.நாகப்பன், படங்கள்: என்.விவேக்