ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

''பள்ளியை இடிக்கப் போறாங்க..''

போராடும் ஆசிரியர்கள்.. அதிர்ச்சியில் புரசைவாக்கம்

##~##
''பள்ளியை இடிக்கப் போறாங்க..''

'பழைமை வாய்ந்த புரசைவாக்கம் எம்.சி.டி. முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை மூடப்பார்க்கிறார்கள். தமிழக அரசு மற்றும் கல்வித் துறை தலை யிட்டு அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்ற கோரிக்கையோடு, அந்தப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த 27-ம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர். 

''பள்ளியை ஏன் மூட வேண்டும்?''

உள்ளிருப்புப் போராட்டத்தில் இருந்த தமிழ் ஆசிரியர் ஞானசேகரிடம் கேட்டோம்.

''1891 -ல் தோற்றுவிக்கப்பட்ட இந்தப் பள்ளியின் கீழ் மொத்தம் மூன்று பள்ளிகள் இருக்கின்றன. இதன் தாளாளராக இருந்த முத்தையா செட்டியார் 96-ல் இறந்த பிறகு, அந்தப் பொறுப்பில் பீகார் மாநிலத்துக்காரரான அவரது மருமகன் தருண் ராய் வந்து அமர்ந்தார். அவர் பள்ளியில் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், பணி இடங்களை நிரப்பவும் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அவர்தான், இந்தப் பள்ளியை மூடிவிட்டு வணிக வளாகம் கட்ட முயற்சி செய்து வருகிறார்.

''பள்ளியை இடிக்கப் போறாங்க..''

திடீரென பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்களை வெளியேற்ற முடியாது என்பதால், ஆறு மாத காலத்துக்கு முன்பிருந்தே அதற்கான ஆயத்தப் பணிகளை செய்ய ஆரம்பித்து விட்டார். தேவையில்லாத காரணங்களுக்கு எல்லாம் ஆசிரியர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டுவதும், ஏதாவது ஒரு பொய்யான குற்றத்தைச் சுமத்தி ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்வதுமாக இருந்தார்'' என்று நிறுத்தினார்.

ஆதங்கத்துடன் தொடர்ந்தார் பள்ளியின் அசோசியேட் பிரசிடென்ட் கோவிந்தராஜன். ''நான்கு மாதத்துக்கு முன்பு ஞானசேகர் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரை பணிநீக்கம் செய்தார் தருண் ராய். அது மட்டுமின்றி, இந்த வருடம் பள்ளியில் புது மாணவர்களைச் சேர்க்கவே இல்லை. இப்படி அட்மிஷன் போடாமல் இருந்தால், ஒவ்வொரு வகுப்பும் காலியாகிக் கொண்டே வரும்; அதற்குப் பிறகு பள்ளியைச் சுலபமாக இழுத்து மூடிவிட்டு வணிக வளாகம் கட்டலாம் என்பதுதான் இப்போதைக்கு அவருடைய பிளான்.

''பள்ளியை இடிக்கப் போறாங்க..''

ஆசிரியர்களின் பணி இடைநீக்கம், பணி நீக்கம் மற்றும் ஊதியம் தராமை போன்ற பல

''பள்ளியை இடிக்கப் போறாங்க..''

காரணங்களால்தான் இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறோம். இந்தப் பள்ளியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பதுதான் பாதிக்கப் பட்டவர்களான எங்களுடைய கோரிக்கை. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வரை எங்கள் போராட்டம் தொடரும்'' என்றார்.

அடுத்து பேசிய ஆசிரியர் மனோகர், ''கிட்டத் தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆசிரியர் பணியில் இருந்து வரும் எங்களுடைய குடும்பம் இந்த வருவாயை மட்டும்தான் நம்பி இருக்கிறது. கடந்த நான்கு மாதங்களாக சம்பளப் பணத்தைப் பிடித்து வைத்துக் கொண்டும், திடீரென காரணம் இல்லாமல் பணி நீக்கமும் செய்கிறார்கள். இதை எதிர்த்து கமிஷனரிடமும், முதன்மைக் கல்வி அதிகாரியிடமும் புகார் மனுக்களை அளித்து வருகிறோம். நீதிமன்றத்திலும் வழக்குப் போட்டிருக் கிறோம். இந்தப் பிரச்னையில் அரசு தலையிட்டு, நல்ல தீர்வு தரவேண்டும். அதுவரையில் நாங்கள் வகுப்பறைக்குத் திரும்பப் போவது இல்லை'' என்றார்.

பள்ளியின் தாளாளர் தருண் ராயிடம் பேசினோம். ''எந்த இடத்திலும் நான் இந்தப் பள்ளி இடத்தை கமர்ஷியல் நோக்கத்துக்குப் பயன்படுத்தப் போவதாகச் சொல்லவே இல்லை. அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை. என்னுடைய மனைவியின் தந்தை முத்தையா செட்டியார் இறந்தபிறகு இந்தப் பள்ளியை நல்லத் தரத்துக்கு கொண்டு வரும் நோக்கத்தில்தான் செயல்பட்டு வருகிறேன். அதனால்தான் கேமராக் களைப் பொருத்தி இருக்கிறேன். ஏழு செக்யூ ரிட்டிகளையும் வேலைக்குச் சேர்த்திருக் கிறேன்.

நீதிமன்றத்திலும், 'நாங்கள் பள்ளியை மூடப் போவது இல்லை. எங்களுக்கு கமர்ஷியல் நோக்கம் என்பதே கிடையாது. கல்வியைப் பயிற்றுவிப்பதே எங்களின் நோக்கம்’ என்று பதில் சொல்லி இருக்கிறோம்.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். ஆனால், கடந்த 27-ம் தேதியில் இருந்து ஒன்பது ஆசிரியர்கள் மட்டும்தான் வகுப்புக்குச் செல்கின்றனர். மற்றவர்கள் இந்தப் போராட்டத்தில் இருக்கிறார்கள். ஆசிரியர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையிலான பிரச்னைகளை என்னிடம் கொண்டுவந்து தீர்த்து இருக்கலாம். வகுப்புக்குச் செல்லாமல் புறக்கணிப்பதால், பாதிக்கப்படுபவர்கள் மாணவர்களே. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத் தேர்வு நடைபெற இருக்கும் சூழ்நிலையில், இந்தப் போராட்டம் தேவை இல்லாதது'' என்றார் தருண்ராய்.

இனி, அதிகாரிகள்தான் முடிவு சொல்லவேண்டும்.

- வே.கிருஷ்ணவேணி

படங்கள்: கே.கார்த்திகேயன்