ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

''கட்டணம் இல்லாமல் கல்வி வேண்டும்''

மாணவர்களுக்குத் தோள் கொடுக்கும் வேல்முருகன்

##~##
''கட்டணம் இல்லாமல் கல்வி வேண்டும்''

'தானே’ புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்கள் மறுவாழ்வு வேண்டி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இப்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் போராட்டக்களத்துக்கு வந்துவிட்டார்கள். கடந்த 28-ம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு சுமார் 3000-க்கும் மேற்பட்ட பள்ளி - கல்லூரி மாணவர்கள் ஒன்று திரண்டு, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி கடலூரையே கலங்கடித்துவிட்டனர். 

போராட்டத்துக்கு தலைமை தாங்கிய தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகனிடம் பேசினோம். ''புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், நாகை மாவட்ட விவசாயிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் தங்கள் பிள்ளைகளின் கல்விக் கட்டணங்களை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். அதனால், அவர்களின் கல்விக் கட்டணங்களை ஐந்து வருடங்களுக்கு ரத்து செய்யவேண்டும். கல்விக்காக மாணவர்கள் எந்த வங்கியில் கடன் வாங்கி இருந்தாலும், அதை உடனடியாக ரத்து செய்யவேண்டும். செமஸ்டர் ஃபீஸ், ஸ்பெஷல் ஃபீஸ் போன்று எந்தக் கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது. உடனடியாக தனியார் பள்ளி மற்றும் கல்லூரித் தாளாளர் களை அரசு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, கல்விக் கட்டணத்தை ரத்து செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.

''கட்டணம் இல்லாமல் கல்வி வேண்டும்''

ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் அமைந்திருக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், அங்கு படிக்கும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ரத்து செய்யவேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால், அந்த நிர்வாகத்தை எதிர்த்தும் போராட்டம் நடத்தவேண்டி இருக்கும். என்.எல்.சி. நிர்வாகமும், புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிள்ளைகளின் கல்விக்காக தங்கள் பங்களிப்பைச் செலுத்தவேண்டும். இந்த மாவட்டத்தில் ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால், இதுவரைக்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, யாருமே குரல் கொடுக்கவில்லை.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிடாமல், கடலூரில் மேடை அமைத்து 12 நிமிடங்களில் நிவாரணங்களை வழங்கிவிட்டுச் சென்றுவிட்டார். அவர் வழங்கிய 2500 ரூபாய் நிவாரணத்தை வைத்து வீட்டின் கூரைகூடப் போட முடியாமல் தவித்து வருகிறார்கள்.

மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அரசு விழா நடத்தி, மாணவர்கள் அனைவருக்கும் கல்விக் கடன் வழங்கப்படும் என்றார். ஆனால், இதுவரை அப்படி எதுவும் நடக்கவே இல்லை. வங்கிகள் உடனடியாக நிபந்தனை இல்லாமல் மாணவர்களுக்குக் கல்விக் கடன்கள் வழங்கவேண்டும். மறுப்பு தெரிவித்தால், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு வங்கியில் தொடர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவோம்'' என்று எச்சரித்தார்.

அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும் என்றே நம்புவோம்!

- க.பூபாலன், படம்: ஜெ.முருகன்