ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

நடராஜன், திவாகரன் சந்திப்பு நடந்ததா?

திருச்சி ஜெயில் ரிப்போர்ட்

##~##
நடராஜன், திவாகரன் சந்திப்பு நடந்ததா?

திருச்சி மத்திய சிறையில் அடைக் கப்பட்டுள்ள நடராஜன், திவா கரன் இருவரும் சிறையிலும் சொகுசாகவே இருப்பதாக ஒரு சாரார் முணுமுணுக்கிறார்கள். இன்னொரு பக்கமோ, சராசரிக் கைதிகளுக்குக் கிடைக் கும் உரிமைகள்கூட கிடைக்காமல் கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள் என்று அவர்களது உறவினர்கள் புலம்பு கிறார்கள். உண்மையை அறிந்துகொள்ள முயன்றோம்.

 காட்சி: 1

உயர் பாதுகாப்புப் பிரிவு 1-ல் உள்ள 20 அறைகளைக்கொண்ட ப்ளாக்கில் இரண்டாவது தொகுதியில் அடைக் கப்பட்டு உள்ளார் நடராஜன். இந்த ப்ளாக் தலா ஐந்து அறைகள்கொண்ட நான்கு தொகுதிகளாக உள்ளது. இரண்டாவது ப்ளாக்கில் உள்ள ஐந்து அறைகளிலும் நடராஜனைத் தவிர வேறு யாரும் அடைக்கப்படவில்லை. மற்ற ப்ளாக்களில், தூக்குத் தண் டனைக் கைதிகள் மூவரும், திருச்சி மாநகர பா.ஜ.க. பிரமுகர் டாக்டர் ஸ்ரீதர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அடைந்த கைதி ஒருவரும் உள்ளனர். சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ப்ளாக் கில், நடராஜனைத் தவிர மற்ற கைதிகள் ஓய்வு நேரங்களில் பூப்பந்து விளையாடுகிறார்கள். அதைத் தனது அறையில் இருந்து நடராஜனால் ரசிக்கத்தான் முடிகிறது.

நடராஜன், திவாகரன் சந்திப்பு நடந்ததா?

அவரைச் சந்திக்க வரும் நண்பர்களிடம் சில புத்தகங்களை வாங்கிவரச் சொல்லி, பெரும்பாலான நேரம் படிப்பில் மூழ்கிக்கிடக்கிறார். கார்ல் மார்க்ஸின் 'மூலதனம்’, ஜவஹர்லால் நேரு எழுதிய 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா’, தமிழ் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் எழுதிய சில நூல்களை அவ்வப்போது எடுத்து வாசிக்கிறார். அவர் நடத்திவரும், 'புதிய பார்வை’ இதழுக்கான கட்டுரைகளை சிறையில் இருந்தபடியே எழுதி அனுப்புகிறார்.

ஒரு நாள், இரவு உணவை வாங்கித் தனது அறையில் வைத்துவிட்டு, புத்தகம் வாசிப்பதில் மூழ்கிவிட்டாராம். முழுமையாகப் படித்து முடித்தபின்பு, உணவுத் தட்டை நெருங்கிய நடராஜன் அதிர்ந்துபோனாராம். ஏனென்றால், அந்த தட்டில் இருந்த உணவை சிறையில் உலவும் எலிகள் பதம் பார்த்துக்கொண்டு இருந்தனவாம். உடனே டென்ஷனாகி, 'சிறையில் எலி மற்றும் கொசுத் தொல்லைக்குத் தீர்வு வேண்டும்’ என்று குரல் கொடுத்தாராம். அதைத் தொடர்ந்து அவரது அறைக்கு, கொசு வலைகள் அமைத்துத் தரப்பட்டனவாம்.

சிறையில் கோழிக் கறியை விரும்பிச் சாப்பிட்டவர், இப்போது சைவத்துக்கு மாறிவிட்டார். தினமும் குறைந்தது மூன்று வழக்கறிஞர்கள் வந்து உரையாடி விட்டுச் செல்கின்றனர். வாரத்தில் மூன்று நாட்கள் உறவினர்கள், நண்பர்கள் சந்திக்கிறார்கள். சற்றுத் தொலைவில் இருந்தபடி ஒரு புதிய நபர் தன்னைக் கண்காணிப்பதை நடராஜன் ஒரு முறை கவனித்துவிட்டார். அந்த நபர் எஸ்.பி. சி.ஐ.டி உதவி ஆய்வாளர் என்பது தெரியவரவே, 'சிறைக்குள் அனுமதி பெறாத நபர்களின் நடமாட்டம் குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்போகிறேன்’ என்று சிறைத் துறை உயர் அதிகாரிகளிடம் கர்ஜித்தாராம்.

காட்சி: 2

நடராஜன், திவாகரன் சந்திப்பு நடந்ததா?

உயர் பாதுகாப்புப் பிரிவு 2-ல் உள்ள, ஆறு அறைகள்கொண்ட ப்ளாக்கில் அடைக்கப்பட்டு உள்ளார் திவாகரன் . அந்த ப்ளாக்கில் ஆயுள் தண் டனைக் கைதிகள் பலர் இருந்தாலும், திவாகரன் யாரிடமும் பேசு வது இல்லை. யோகா, தியானம் செய்து நேரத்தைக் கடத்துகிறார். சாப்பிடுவதற்கு முன்பு கண்களை மூடி, சில நிமிடங்கள் பிரார்த் தனை செய்கிறார். திவாகரன் வன விலங்கு ஆர்வலர். அதனால் அது தொடர்பான புத்தகங்களை நண்பர்கள் மூலம் வரவழைத்து, ஆர்வத்துடன் படித்து வருகிறார். இதய நோயாளி என்பதால், எண்ணெய் குறைவாகப் பயன்படுத்தி சமைக்கப்பட்ட உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்கிறார். சிறைக்கு வந்த முதல் தினத்தில் இருந்தே இவர் முழு சைவம். வாரத்தில் ஆறு நாட்களும் இவரை வழக்கறிஞர்கள் சந்திக்கிறார்கள். சில நாட்கள் உறவினர்களும், நண்பர்களும் வருகிறார்கள்.

நடராஜன் மற்றும் திவாகரன் இருவரையும் சந்திக்க வருபவர்கள் ஜெயிலர் அறையில் சிறைக் காவலர்கள் கண்காணிப்புடன்தான் பேச முடிகிறது. ஆட்சியாளரின் கோபத்துக்கு ஆளானவர்கள் என்பதால், எஸ்.பி. சி.ஐ.டி., மாநகரப் போலீஸ் உளவுப் பிரிவான ஐ.எஸ்., சிறைத் துறை உளவுப் பிரிவு என்ற மூன்று விதமான கண்காணிப்பும் தொடர்ந்து இருக்கிறது. எப்போதும் படை, பரிவாரங்கள் புடைசூழ பவனி வந்த இருவரும், தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதால் மனரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவே தெரிவிக்கிறார்கள்.

மாமனும் மைத்துனரும் அடிக்கடி சந்தித்துப் பேசுகி றார்கள் என்று சிலர் சொல்வதில் உண்மை இல்லை யாம். இருவரும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டு இருந்தாலும், அவர்கள் சந்தித்துக்கொள்ள முடியாதபடியே அறைகள் அமைந்துள்ளன. 'விசா ரணைக் கைதிகளை அடைத்துவைக்கும் முகாம் சிறையில் அடைக்காமல், தண்டனைக் கைதிகளை அடைத்துவைக்கும் உயர் பாதுகாப்புப் பிரிவில் இவர்களை பாதுகாப்பு காரணமாகவே அடைத்து வைத்திருக் கிறோம்’ என்று நியா யம் பேசுகிறது, சிறைத் துறை நிர்வாகம்.

கூட்டிக்கழித்துப் பார்த்தால், உறவினர்கள் புலம்பலில்தான் நியாயம் இருப்பதாகத் தெரிகிறது.

- அ.சாதிக் பாட்ஷா 

படம்: என்.ஜி.மணிகண்டன்