ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

''வசூல் எவ்வளவு... என் பங்கு என்னாச்சு?''

ஓப்பன் மைக்கில் வறுத்தெடுத்த ஆஸ்ரா கர்க்

##~##
''வசூல் எவ்வளவு... என் பங்கு என்னாச்சு?''

காவல் துறை அகராதியில் விருதுநகர் என்றால் 'விருந்து’ நகர். லஞ்சத்தில் கொழிக்க நினைக்கும் போலீஸாருக்கு இந்தப் பகுதியில் தினம் தினம் தீபாவளிதான். ஆனால், இப்போது அதிரடியாக ஆப்பு வைக்கப்​பட்டுள்ளது. 

பிப்ரவரி 5-ம் தேதி, விருதுநகர் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பு ஆணையர் நஜ்மல் கௌடா, இடைக்காலப் பயிற்சிக்காக ஹைதராபாத் சென்றார். அதனால் விருதுநகரும் கூடுதல் பொறுப்பாக மதுரை எஸ்.பி., ஆஸ்ரா கர்க் வசம் ஒப்படைக்கப்பட்டது. உடனே குஷியாகிப்போன பொதுமக்கள், விருதுநகரை நாறடிக்கும் போலீஸ் அதிகாரிகளைப் பற்றி ஆதாரங்களுடன் புகார் செய்ய ஆரம்பித்தார்கள். இது தவிர, 'உங்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டி இருக்கும்னு சொல்லியே பணம் பறிக்கிறாங்க...’ என்று சில நேர்மையான போலீஸாரும் போட்டுக் கொடுத்தார்கள்.

''வசூல் எவ்வளவு... என் பங்கு என்னாச்சு?''

கிடைத்த அத்தனை தகவல்களையும் பொறுமையாக ஆராய்ந்து பார்த்தாராம் ஆஸ்ரா கர்க். அதன் பிறகு திடீரென ராஜ​பாளையம் டி.எஸ்.பி. கண்ணனை மைக்கில் பிடித்தார். 'இன்னிக்கு வசூல் எவ்வளவு... என் பங்கு என்னாச்சு?' என்று ஓப்பன் மைக்கிலேயே கேட்க, ஆடிப்போய் விட்டாராம் கண்ணன். அதேபோன்று அடுத்து சாத்தூர் டி.எஸ்.பி-யையும் மைக்கில் பிடிபிடியென்று பிடித்துவிட்டார். இதைக் கேட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸார் அதிர்ந்து போனார்கள். அவர்களுடைய அதிர்ச்சி விலகும் முன்னரே... ஏழு இன்ஸ்பெக்டர்கள், எட்டு சப்-இன்ஸ்பெக்டர்கள், 10 போலீஸார்களை மதுரை மாவட்டத்துக்குத் தூக்கியடித்த எஸ்.பி., ஒழுங்கீனமாக நடந்துகொண்ட மூன்று போலீஸாரை சஸ்பெண்ட் செய்துவிட்டார்.

இது தவிர, 100 போலீஸாரை மதுரைக்கு வர​வழைத்து தனித்தனியே சந்தித்து இருக்கிறார். அவர்கள் மீதான புகார்களைச் சொல்லி, 'உங்களை கண்காணித்துக்கொண்டு இருக்கிறேன். இனி ஒரு முறை சின்னப் புகார் வந்தாலும், மிகக் கடுமையான நடவடிக்கை இருக்கும்' என்று எச்சரித்து அனுப்பினாராம்.

''வசூல் எவ்வளவு... என் பங்கு என்னாச்சு?''

ராஜபாளையம், விருதுநகர் போலீஸார் புட்டுப்புட்டு வைக்கிறார்கள்... 'புகார் கொடுப்பதற்குப் பணம், எஃப்.ஐ.ஆர். போடாமல் இருக்க பணம், கைது செய்யவும் பணம், கைதாகாமல் தப்பிக்கவும் பணம் என்று போலீஸார் இங்கே போட்ட ஆட்டம் ரொம்ப அதிகம். அனுமதி இல்லாத பார், மணல் லாரிகள், கஞ்சா விற்பனை, பாதுகாப்பான விபசாரம், அனுமதி இல்லாத பட்டாசு ஆலைகள், லாட்டரி, திருட்டு வி.சி.டி. என்று ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் லட்சக்கணக்கில் மாமூல் கொட்டுகிறது.

விருதுநகரில் ஓர் இன்ஸ்பெக்டருக்கு 'பத்தாயிரம் போலீஸ்’ என்று அடைமொழியே வந்து​விட்டது. இவருக்குத் தனியாக 10,000 ரூபாய் கொடுத்துவிட்டால் போதும், எதை வேண்டுமானாலும் முடித்துக் கொடுத்து​விடுவார். டி.எஸ்.பி. கண்ணனை மைக்கில் கூப்பிட்டு ஆஸ்ரா கர்க் எச்சரித்த மறுநாளே, அவருடைய டிரைவர், கிளார்க் ஆகியோர் மதுரை ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டார்கள். எந்த நேரமும் அமைச்சரின் பின்னாலேயே சுற்றிய இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் இருந்து, ஜீப் பறிக்கப்பட்டுவிட்டது. அதனால் அவர் இப்போது நடந்துதான் ஸ்டேஷனுக்கு வருகிறார்' என்று விலாவாரியாகச் சொன்னார்கள்.

''டி.எஸ்.பி. கண்ணன் இப்போதும் ராஜபாளையத்தில்​தானே இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்​பட​வில்லையே?'' என்று கேட்டோம். 'டி.எஸ்.பி-க்கு பணம் வாங்கிக் கொடுத்த அத்தனை கைகளும் வெட்டப்பட்டு​விட்டன. ஆனாலும் ஒரு டி.எஸ்.பி-யை இடமாற்றம் செய்ய​வேண்டும் என்றால், டி.ஜி.பி. அலுவலகம்தான் உத்தரவு போட முடியும். விஷயம் மேலிடத்துக்குப் போய் இருப்பதால், அவருடைய  நாட்களும் எண்ணப்படுகின்றன' என்று சொன்னார்கள்.

இந்த விவகாரம் உண்மை​தானா என்று டி.எஸ்.பி. கண்ணனிடம் பேசினோம். ''தவறு செய்த சில போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. என்னை இதில் சம்பந்தப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?'' என்று கேட்டார்.

இந்த அதிரடி நடவடிக்கை குறித்து ஆஸ்ரா கர்க்கிடம் கேட்டோம். 'விருதுநகர் மாவட்டத்தில் காவல் துறையினர் சிலர் மீது தொடர்ந்து புகார்கள் வந்தன. அவை உண்மை என்று தெரியவந்ததால், நடவடிக்கை எடுத்தோம். இப்போதும் சில புகார்கள் வருகின்றன. அவை ஊர்ஜிதமானால், மேலும் நடவடிக்கை தொடரும்'' என்றார் சுருக்கமாக.

'விருதுநகர் மாவட்டத்தில் அனுமதி இல்லாத பார்கள் மூடப்பட்டுவிட்டன. ரோட்டில் நின்று ஆள் பிடிக்கும் விபசார புரோக்கர்களையும் சில நாட்களாகக் காணவில்லை. திருட்டு லாட்டரி ஒழிந்துவிட்டது' என்றெல்லாம் சந்தோஷ​மாக சொல்லும் மக்கள், ''ஆஸ்ரா கர்க் பொறுப்பு எஸ்.பி. என்பதால், பயிற்சி முடிந்து பழைய எஸ்.பி. வந்த உடனே, விருதுநகர் போலீஸார் மீண்டும் 'மாமூல்’ வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவார்களே'' என்று சந்தேகப்படுகிறார்கள்.

மீண்டும் அப்படி ஒரு நிலைமை வராது என்றே நம்புவோம்!

- கே.கே.மகேஷ், எம்.கார்த்தி

படம்: பா.காளிமுத்து