ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

உசிலை கல்லூரியில் ஊழல்!

மல்லுக்கட்டும் கதிரவன் எம்.எல்.ஏ.

##~##
உசிலை கல்லூரியில் ஊழல்!

ங்கிலேயர்களால் 'குற்றப் பரம்​பரையினர்’ என்று முத்திரை குத்தப்​பட்ட பிரமலைக் கள்ளர் சமூகத்தாரை முன்னேற்றுவதற்காக ஆரம்பிக்கப்​பட்டதுதான் 'கள்ளர் பொது நிதி’. சுதந்திரத்துக்குப் பிறகு இது, 'கள்ளர் கல்விக் கழகம்’ என மாறி, இப்போது இதன் கட்டுப்பாட்டில் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கலைக் கல்லூரி உள்ளிட்ட ஏகப்பட்ட சொத்துகள் இருக்கின்றன. சொத்து என்றால் பிரச்னை இருக்க வேண்டுமே... 

'அரசு உதவி பெறும் பசும்பொன் முத்து​ராமலிங்கத் தேவர் கலைக் கல்லூரியில் நிதி ஆளுமையில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்​கின்றன. எனவே கல்லூரி நிர்வாகக் குழுவைக் கலைத்துவிட்டு, தனி அலுவலரை நியமனம் செய்து முறைப்படி விசாரணை நடத்த வேண்டும்’  என்று தமிழக முதல்வருக்கும் பதிவுத் துறை தலைவருக்கும் புகார் அனுப்பி இருக்கிறார் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் மாநில பொதுச் செயலாளரும் உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ-வுமான கதிரவன்.

உசிலை கல்லூரியில் ஊழல்!
உசிலை கல்லூரியில் ஊழல்!

அவரிடம் பேசினோம். ''தேவர் கல்லூரியை பல்கலைக்கழகமாக உயர்த்த வேண்டும் என்கிற எதிர்பார்ப்போடுதான், பாலசுப்பிரமணியனை கள்ளர் கல்விக் கழகத்தின் செயலாளராகக் கொண்டுவந்தோம். ஆனால், அவரின் செயல்​பாடுகள் நேர்மாறாக இருக்கின்றன. கல்லூரிக்கு வரும் நிதிகளுக்கு முறையான கணக்கு வழக்கு இல்லை. உறுப்பினர்கள் யாராவது கேள்வி கேட்டால், அதிரடியாய் அவர்களைக் கல்விக் கழகத்தில் இருந்து நீக்குகிறார்கள். புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதிலும் முறையான அணுகுமுறைகள் இல்லை. 18 ஆண்டுகள் செயலாளராக இருந்த ஓ.ராமச்சந்திரனையே உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிவிட்டார்கள். தலைவர் மூக்கையா தேவர் உருவாக்கிய இந்தக் கல்லூரியில் தவறுகள் நடக்கக் கூடாது என்பதால்தான், முதல்வருக்கும் யு.ஜி.சி-க்கும் புகார் அனுப்பியுள்ளேன்'' என்றார்.

உசிலை கல்லூரியில் ஊழல்!

கள்ளர் கல்விக் கழகத்தின் செயலாளரான பாலசுப்பிரமணியனிடம் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசினோம். ''புதிய நிர்வாகக் கமிட்டி பொறுப்புக்கு வந்து, இரண்டு வருடங்கள்தான் ஆகின்றன. அதற்குள் மாணவர்கள் எண்ணிக்கையை 800-ல் இருந்து 2,100 என்று உயர்த்தி இருக்கிறோம். 12 கோர்ஸ்களை 19 கோர்ஸ்களாக உயர்த்தி இருக்கிறோம். இதெல்லாம் எங்களின் நிர்வாகத் திறமையின் அளவுகோல். கதிரவன் சொல்வதுபோல் இங்கு எந்த முறைகேடும் நடக்கவில்லை. அனைத்துக்கும் முறையான கணக்கு இருக்கிறது. கதிரவன் இங்கே செயலாளராக வர நினைத்தார். அது முடியவில்லை என்றதும், குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். அவருக்கு நெருக்கமான ரவி என்ற பேராசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்திருக்கிறோம். அவரைக் கல்லூரி முதல்வர் ஆக்க வேண்டும் என்பதுதான் கதிரவனின் ஆசை. அதற்காக, 63 வயதான நான் கல்லூரிக்குள் பெண்களைக் கூட்டிவந்து குடித்துக் கும்மாளம் போடுவதாக அநாகரிகமாய் பெட்டிஷன் எழுதுகிறார். எங்களுக்குத் தேவை கல்லூரியின் வளர்ச்சி மட்டுமே. நாங்கள் திறந்த புத்தகமாய் இருக்கிறோம். புகார்களில் ஒன்றையாவது கதிரவன் நிரூபித்தால், அடுத்த நொடியே நான் பதவியைவிட்டு இறங்கிவிடுகிறேன்'' என்றார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் (மகேஸ்வரன் பிரிவு) மாநிலத் தலைவர் நவமணி, ''உழவு மாடு வைத்திருப்பவர்கள் எல்லாம் தலைக்கு ஒரு ரூபாய் போட்டு உருவாக்கிய பிரமலைக் கள்ளர் கல்விக் கழகத்தைப் பற்றி வரும் புகார்களைக் கேட்கும்போது வருத்தமாக இருக்கிறது. இப்படி எல்லாம் பிரச்னைகள் வந்ததால்தான், 1985-ல் தேவர் கல்லூரியை அரசாங்கம் எடுத்துக் கொண்டது. பிறகு அப்போதைய தலைவர் வல்லரசு போராடி, மீண்டும் அதை கள்ளர் கல்விக் கழகத்துக்குக் கொண்டுவந்தார். ஊழல் நடப்பதாக கதிரவன் சொல்கிறார். தனக்கு வேண்டப்பட்டவரை முதல்வர் ஆக்கவில்லை என்பதற்காக கதிரவன் அவதூறு பரப்புவதாகச் செயலாளர் சொல்கிறார்.

எதுவாக இருந்தாலும் நமக்குள்ளேயேதான் பேசி முடிவு எடுக்க வேண்டுமே தவிர, குழாயடிச் சண்டை போடக் கூடாது. ஏற்கெனவே, மன்னன் உள்ளிட்ட தி.மு.க. பிரமுகர்களை வைத்து 'பிரமலைக் கள்ளர் கல்வி நலச் சங்கம்’ என்ற அமைப்பு ஒன்றைத் தொடங்கினார் கதிரவன். இப்போதுள்ள நிர்வாக கமிட்டியைக் கலைத்தால், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி 'பிரமலைக் கள்ளர் கல்வி நல சங்க’த்தின் கட்டுப்பாட்டில் கல்லூரி நிர்வாகத்தைக்கொண்டு வந்து, தானே செயலாளராகவும் வந்துவிடலாம் என்று கதிரவன் திட்டமிடுவதாக ஒரு பேச்சு இருக்கிறது. வல்லரசு மீட்டுக் கொடுத்த கல்லூரியை அவரது சிஷ்யரான கதிரவன், மீண்டும் அரசிடம் கொடுத்துவிடக் கூடாது'' என்றார்.

இது தொடர்பாக மீண்டும் கதிரவனைத் தொடர்புகொண்டபோது, ''இதெல்லாம் கட்டுக் கதை. தலைவர் வல்லரசு மீட்டுக் கொடுத்த பிறகு, மூன்று முறை தனி அதிகாரியின் கட்டுப்பாட்டுக்குப் போய் திரும்பி வந்திருக்​கிறது கல்லூரி. நிர்வாகக் கமிட்டியினர் தவறு செய்திருக்கிறார்கள். அவர்களை வைத்துக்கொண்டு எப்படி விசாரணை நடத்த முடியும்? அதனால்தான் தனி அதிகாரியை நியமிக்கச் சொல்கிறேனே தவிர, கல்லூரியை அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதோ, நான் பொறுப்புக்கு வர வேண்டும் என்பதோ நோக்கம் இல்லை'' என்றார்.

உசிலம்பட்டி ஏரியா உஷ்ணத்தில் தகிக்கிறது!

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி