Published:Updated:

''செல்போன் அடித்தது... ரிமோட்டை அழுத்தினேன்!''

ஊத்தங்கரை குண்டுவெடிப்பு..

''செல்போன் அடித்தது... ரிமோட்டை அழுத்தினேன்!''

ஊத்தங்கரை குண்டுவெடிப்பு..

Published:Updated:
##~##
''செல்போன் அடித்தது... ரிமோட்டை அழுத்தினேன்!''

த்தங்கரையில், கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் கூட்டுறவு வங்கி அருகில் கடந்த 30 ஆண்டுகளாக டீ கடை நடத்துகிறார் காந்தலட்சுமி. கடந்த 5-ம் தேதி, மாலை 6.40 மணிக்கு பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் கடைக்கு வாசலில் இருந்த மரபெஞ்சில் அமர்ந்தனர். அடுத்த சில வினாடியில், அந்த ஏரியாவே கிடுகிடுத்துப் போகும் அளவுக்கு 'டமார்’ என்று வெடிச் சத்தம். இதில் சின்னாபின்னமாகிப் போனது டீ கடை. காந்தலட்சுமி படுகாயத்துடன் கடைக்குள் மயங்கி விழுந்தார். புகை மூட்டத்தில் அந்த ஏரியாவே சிக்கிக்கொள்ள, 'டீ கடை சிலிண்டர் வெடித்து விட்டது, வண்டியின் டயர் வெடித்து விட்டது...’ என்று ஆளுக்கு ஒரு விதமாக  பேசிக் கொண்டார்கள்.     

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தகவல் அறிந்து வந்த போலீஸ், காந்தலட்சுமியை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, அந்த இடத்தை ஆய்வு செய்தபோதுதான் 'திடுக்’ அதிர்ச்சி. அந்தப் பகுதியில் மட்டும் இல்லாமல் அக்கம்பக்க வீட்டுச் சுவர்களிலும் மனித உடலின் சதை துணுக்குகள் சிதறிக் கிடந்தன. போலீஸாருக்கு அந்த இடத்தில் முழுமையாக கிடைத்த உடலின் ஒரே பாகம், ஒற்றைக் கால் மட்டும்தான். கடைக்கு வந்த இரண்டு பேரில் இப்படி ஒருவன் சின்னாபின்னமாகி இறந்துவிட, இன்னொருவன் காயங்களுடன் தப்பி ஓடிவிட்டான்.

''செல்போன் அடித்தது... ரிமோட்டை அழுத்தினேன்!''

உடனே ஏரியா முழுக்கவும் தங்களது கட்டுப்பாட்டுக்​குள் கொண்டுவந்த போலீஸ், சுற்றுவட்டாரம் முழுக்க தேடுதல் வேட்டை நடத்தியது. அவர்கள் வந்த மோட்டார் பைக் எண் மூலம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை போலீஸார் தொடர்பு கொண்டபோது, அந்த பைக் எண் போலியானது என்று தெரியவந்தது.

''செல்போன் அடித்தது... ரிமோட்டை அழுத்தினேன்!''

அடுத்தடுத்த விசாரணையில், குண்டு வெடித்து இறந்தது ஊத்தங்கரையை அடுத்த மடத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சீனிவாசன் என்பதும் தெரிய வந்தது. அந்த சமயத்தில் ஊத்தங்கரை டி.எஸ்.பி-யான காசி விஸ்வநாதனிடம் பேசினோம்.

''23 வயசான சீனிவாசன் ராணுவத்துக்குப் போய் மூணு வருஷம் ஆகுது. பெங்களூருவில் ராணுவப் பயிற்சி எடுத்துட்டு, அருணாசல பிரதேசத்தில் இருந்திருக்கான். இப்போ விடுமுறையில ஊருக்கு வந்து இருக்கான். அவன் வீட்டை சோதனை செஞ்சோம். அங்கே கல்குவாரிக்குப் பயன்படுத்துற வெடிமருந்து கொஞ்சமும், முழுமையாக செய்து முடிக்கப்​படாத நாட்டு வெடிகுண்டுகள், வெடிகுண்டு தயாரிக்க வழிமுறை சொல்லும் ஒரு சார்ட் மேப் கிடைச்சது'' என்றார்.

போலீஸாரின் அடுத்தகட்ட விசாரணையில் அன்றைய தினம் டீ கடைக்கு வந்து குண்டு காயத்துடன் தப்பிய ராமமூர்த்தி அமுக்கப்பட்டான். அவரிடம் போலீஸ் விசாரித்தபோது, ''ராணுவத்தில் பணியாற்றும் சீனிவாசனுக்கு வெடிகுண்டு தயாரிக்கும் தொழில்​நுட்பம் அத்துப்படி. அதனால நான், சீனிவாசன், பைக் மெக்கானிக் விஜய், ஆண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் நாலு பேரும் சேர்ந்து வங்கியைக் கொள்ளை​யடிச்சு செட்டிலாகத் திட்டம் போட்டோம்.

''செல்போன் அடித்தது... ரிமோட்டை அழுத்தினேன்!''

சம்பவம் நடந்த இடத்துக்குப் பக்கத்தில் இந்தியன் வங்கிக் கிளையின் ஏ.டி.எம். இருக்கு. அங்கே சாயங்காலம்தான் பணம் லோடு செய்வாங்க. பணம் லோடு செஞ்ச உடனே ஏ.டி.எம். மெஷினை ரிமோட் வெடிகுண்டு மூலம் தகர்த்து, பணத்தைக் கொள்ளை அடிக்கும் திட்டத்தோடு வந்தோம். விஜய், சக்திவேல் ரெண்டு பேரும் முன்னதாகவே ஏ.டி.எம் மெஷின் இருக்கும் பகுதிக்கு வந்து, மறைவுல தயாரா இருந்தாங்க. நானும், சீனிவாசனும் பைக்கில் வந்தோம். பணம் லோடு செய்ற வரைக்கும் டீ கடையில காத்திருக்க முடிவு செஞ்சோம். சீனிவாசன்கிட்டத்தான் பாம் இருந்துச்சு. நான் ரிமோட் வைச்சிருந்தேன். அந்த சமயத்துல என்னோட செல்போன் அடிச்சது. பதட்டத்துல செல்போனை ஆன் பண்றதுக்குப் பதிலா... ரிமோட் பட்டனை அழுத்திட்டேன். சீனிவாசன் வெடிச்சு சிதறிட்டான்'' என்று திகிலுடன் விவரித்து இருக்கிறார்.

இதையடுத்து, மெக்கானிக் விஜய்யை போலீஸார் அமுக்கிப் பிடித்தனர். இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆண்டி​யூர் சக்திவேலைத் தேடி வருகிறார்கள்.

போலீஸார் விசாரணையை முடித்து விட்​டாலும், ஏரியா மக்களுக்கு சில சந்தேகங்கள் இருக்கிறது. ''சமீபத்தில்தான் வங்கிக் கொள்ளையர்கள் ஐந்து பேரை சென்னையில் போலீஸார் என்கவுன்டர் செய்தனர். வங்கிப் பணத்தில் விளையாடுவோருக்கு ஏற்பட்ட கதி, சீனிவாசனுக்குத் தெரியாமல் இருக்குமா? அந்தச் சம்பவத்தின் சலசலப்புகூட இன்னும் அடங்காத நிலையில், ஏ.டி.எம் மையத்தில் கொள்ளையடிக்க சீனிவாசன் டீம் துணிந்திருக்குமா? மாலை 7 மணி என்பது ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள நேரம். இந்த நேரத்தில் ரிமோட் குண்டு மூலம் மையத்தைத் தகர்த்துப் பணத்தை அள்ளிச் செல்வது என்பது சாத்தியமா என்பதை  ஒரு ராணுவ வீரரின் மூளை உணர்ந்திருக்காதா? ஒருவேளை அவர்கள் திட்டமிட்டிருந்த வேறு ஏதேனும் சதிச்செயல் பற்றிய உண்மையான தகவலை போலீஸாரால் வெளியே சொல்ல முடியவில்லையா?'' என்று கேட்கிறார்கள்.

அலட்சியப்படுத்த முடியாத சந்தேகம்!

- எஸ்.ராஜாசெல்லம்

படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism