Published:Updated:

திடீர் பிள்ளையார்

காரைக்குடி கடமுடா

திடீர் பிள்ளையார்

காரைக்குடி கடமுடா

Published:Updated:
##~##
திடீர் பிள்ளையார்

காரைக்குடி சுப்பிரமணிய​புரம் ஏரியா முதல் வீதியில் உள்துறை அமைச்சர் ப.சிதம்​பரத்தின் எம்.பி. அலுவலகம் இருக்கிறது. இதன் எதிரே கடந்த 4-ம் தேதி இரவு, சிலர் ஐந்து முக விநாயகர் சிலை ஒன்றைக் கொண்டுவந்து வைக்க, பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விநாயகர் சிலையை அகற்றக்கோரி திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்​புகள் கச்சைகட்ட, சிலைக்கு ஆதரவாக பி.ஜே.பி., இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி. உள்ளிட்ட இந்து அமைப்புகள் களம் இறங்கிவிட்டன. பிள்ளை​யாரைச் சுற்றி காவிக்கொடி​கள் முளைத்து, மேட்டர் சீரியஸ் ஆனதால் 6-ம் தேதி மதியம், சிலையை அகற்று​வதற்காக நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் ஸ்பாட்டுக்கு வந்தனர். 'இப்போதைக்குச் சிலையை எடுக்கமுடியாது, ரெண்டு நாள் டைம் கொடுங்கள்’ என்று அவகாசம் கேட்டார்கள் ஆதரவு கோஷ்டியினர். அதை நம்பி அதிகாரிகள் சென்றுவிட, அன்று இரவே கொட்டகை போட்டு சிறப்பு யாகம், பூஜைகள் என்று அடுத்தடுத்த கட்டத்துக்கு முன்னேறிவிட்டனர்.

திடீர் பிள்ளையார்

திராவிடர் கழகம், இந்திய ஜனநாயக கட்சி, முஸ்லிம் முன்னேற்றக் கழகம், கம்யூ​னிஸ்ட்கள், ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஒன்றுகூடி 'மக்கள் நலப் போராட்டக் குழு’ என்ற அமைப்பை உருவாக்கி, 'தமிழக அரசே! நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் சட்ட மீறலாய் ஆக்கிரமிப்பு செய்தவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்’ என்று போஸ்டர் ஒட்டினார்கள். இதற்குப் போட்டியாக, 'காரைக்குடி நகராட்சியே... நாங்கள் வணங்கும் பஞ்சமுக விநாயகர் கோயிலை அகற்றாதே. இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தாதே’ என போஸ்டர் ஒட்டியது இந்து முன்னணி. இதன் தொடர்ச்சியாக, 'காரைக்குடி நகராட்சி நிர்வாகமே... வ.உ.சி. சாலை​யில் நீர்ப்பிடிப்பு மற்றும் புறம்போக்கில் உள்ள ஆசாத் பள்ளி மற்றும் நகராட்சி புறம்போக்கில் உள்ள சகாய மாதா சர்ச் ஆகியவற்றை உடனே அப்புறப்படுத்து - இந்து மக்கள் போராட்டக் குழு’ என்ற வம்பான போஸ்டர்களும் முளைத்தன. இதனால் கலவரமாகிக் கிடக்கிறது காரைக்குடி ஏரியா.

திடீர் பிள்ளையார்
திடீர் பிள்ளையார்

நம்மிடம் பேசிய பி.ஜே.பி. இளைஞர் அணியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் சபரிநாதன், ''இங்கே பிள்ளையார் சிலை வைப்பதற்காக எட்டு வருஷங்களுக்கு முன்பே முடிவு செய்திருந்தோம். அதற்காக வைச்ச அரசமரக் கன்றுகூட மரமா வளர்ந்திருச்சி. 'பிள்ளையாரை எடுக்கணும்’னு சொன்னதுமே காரைக்குடி அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வான சோழன் பழனிச்சாமிக்கிட்ட போய்ச் சொன்னோம். அவரும் வந்து பாத்துட்டு, 'இங்கேயே இருக்கட்டும்’னு சொல்லிட்டுப் போனார். நாங்க அவரைப் பார்த்தது அ.தி.மு.க. சேர்மனுக்குப் பிடிக்கல.

பிள்ளையார் வச்சிருக்கும் இடத்துக்குப் பக்கத்தில், 'எலைட் பார்’ கொண்டு வரப்போறாங்க. இந்த ஏரியாவுல 'பார்’ வெச்சா நாஸ்தி ஆகிடும். நாங்க பிள்ளையாரை வைச்சதுக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். பிள்ளையார் இருந்தா 'பார்’ வைக்க முடியாதுன்னு ஆளும் கட்சியினர் அதை எடுக்கத் துடிக்கிறாங்க'' என்றார்.

வி.ஹெச்.பி-யின் மாநில இணைச் செயலாளர் சத்தியமூர்த்தி, ''முழுக்க முழுக்க இந்துக்கள் வசிக்கும் ஏரியாவில் பிள்ளையாரை வெச்சிருக்காங்க. இதனால் யாருக்கு என்ன பிரச்னை? ஆக்கிரமிப்பு என்று பார்த்தால் ஆசாத் பள்ளியும் சர்ச்சும் ஆக்கிரமிப்பில்தான் இருக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்திவிட்டு பிள்ளையாரிடம் வரட்டும். பிள்ளையாருக்குப் போட்டியாக புத்தர் சிலையை வைக்கப் போவதாக தி.க-காரர்கள் சொன்னார்களாம். எங்களுக்கு அதில் ஆட்சேபனை இல்லை. வைக்கட்டும்; நாங்களும் புத்தரை வணங்குகிறோம். அதை விட்டுட்டு, 'வெச்ச பிள்ளையாரை எடு’ன்னு சொல்றதுக்கு இவங்க யாரு?'' என்று ஆவேசப்பட்டார்.

நகர் நலப் போராட்டக்குழுவின் தலைவரான வக்கீல் கருணாநிதியிடம் பேசினோம். ''அந்த இடத்​தில் பூங்கா வைப்பதற்கு ஏற்கெனவே நகராட்சித் தீர்மானமே இருக்கு. இரண்டு நாளைக்குள் பிள்ளையாரை எடுத்துவிடு​வதாகச் சொன்னவர்கள், இப்ப அந்த இடத்துல யாகம் நடத்தி பொங்கல் வெச்சு ஸ்ட்ராங் ஆக்கிக்கிட்டே போறாங்க. இது அமைதியா இருக்கிற ஊரை அமளிக் காடாக்கும் வேலை. இந்து அமைப்புகளுக்கு இதே வேலையாப் போச்சு. அவங்க சொல்வது போல் சர்ச், பள்ளிக்கூடம் போன்றவை உண்மையிலேயே ஆக்கிரமிப்புப் பகுதியில் இருந்தால் அதை அப்புறப்படுத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை'' என்றார்.

காரைக்குடி நகராட்சி சேர்மன் கற்பகத்​திடம் கேட்டதற்கு, '' 'எலைட் பார்’ திட்டம் கைவிடப்பட்டதுகூட தெரியாமல் வதந்தியைப் பரப்புகிறார்கள். அ.தி.மு.க-​காரருக்காக பிள்ளையார் சிலையை எடுக்க முயற்சிப்பதாகச் சொல்வது அபத்தம். இது சிக்கலான விஷயமாக இருப்பதால் நகராட்சி, மாவட்ட, மாநில நிர்வாகங்கள் இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதைக் கட்டாயம் எடுக்கும்'' என்றார் திடமாக.

இந்தப் பிரச்னை சிக்கல் இல்லாமல் முடிய பிள்ளையார் அருள் புரியட்டும்!

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism