Published:Updated:

அழிக்கப்படும் வரலாற்று ஓவியங்கள்!

திருவையாறு திகுதிகு

அழிக்கப்படும் வரலாற்று ஓவியங்கள்!

திருவையாறு திகுதிகு

Published:Updated:
##~##
அழிக்கப்படும் வரலாற்று ஓவியங்கள்!

'நமது முந்தைய காலத்து நாகரிகத்தைப் பறைசாற்று வதில் ஓவியக்கலைக்கு முக்கியப் பங்கு உண்டு. திருவையாறு சிவன் கோயிலில் குடமுழுக்குக்காக சுவர்களைச் சீரமைக்கிறோம் என்று, பழைமையான ஓவியங் கள் அழிக்கப்படுகின்றன. உடனே காப்பாற்றுங்கள்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்குத் (044-66808002) தகவல் வரவே பதறிப்போய் விசாரித்தோம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருவையாறைச் சேர்ந்த கணேசன் இதுபற்றி நம்மிடம் பேசினார். ''இந்தக் கோயில் சுவற்றில் உள்ள ஓவியங்கள் எல்லாமே 17-ம் நூற்றாண்டின் ஃப்ரெஸ்கோ ஓவிய வகையைச் சேர்ந்தவை. கோயிலைப் புதுப்பிக்கும் பணி என்ற பெயரில், சுவர்ஓவியங்களை அழித்து விட்டு மாடர்ன் ஆர்ட் வரைந்து வருகிறார்கள். 250 அடி வரை உள்ள இந்தக் கோயில் சுவர்களில் சுமார் 20 அடிக்கு மேல் உள்ள சுவர் ஓவியங்களை அழிக்க ஆரம்பித்து விட்டார்கள். உடனடியாக இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்'' என்றார் வேதனையாக.

அழிக்கப்படும் வரலாற்று ஓவியங்கள்!
அழிக்கப்படும் வரலாற்று ஓவியங்கள்!

ஓவியர் மருதுவிடம் பேசியபோது, ''திருவையாறு ஓவியங்கள் எல்லாம் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. இவை அழிக்கப்படுவது மிகப்பெரிய துயரத்தைத் தருகிறது. ஓவியங்களைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வை அடிப்படையில் இருந்து உருவாக்க வேண்டும். பள்ளிப் பருவத்தில் இருந்து குழந்தைகளின் மனதில் நம்முடைய பாரம்பரிய மதிப்பைப் பதியச் செய்ய வேண்டும். இந்த ஓவியங்கள் எல்லாம் நம்முடைய பண்பாட்டைச் சொல்லக்கூடியவை. நம்மு டைய

அழிக்கப்படும் வரலாற்று ஓவியங்கள்!

முன்னோர்கள் எல்லாம் நமக்காக விட்டுச் சென்ற அடையாளங்கள். இந்த மாதிரி ஓவியங்களைப் பாதுகாக்கும் பணிகளை 'எக்ஸ்பர்ட் கமிட்டி’ அமைத்து, அதனிடம் ஒப்படைக்க வேண்டும். என்னுடைய வாழ்நாளில் துயரமான நாள் என்றால் அது மூர்மார்க்கெட் எரிந்த நாளும், நாயக்கர் காலத்தில் வரையப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சுவர் ஓவியங்கள் அழிக்கப்பட்ட நாளும்தான். 70-களில் நான் ஓவியக் கலை படித்த நேரத்தில் மூர் மார்க்கெட்டில்தான் சுற்றித் திரிந்தேன். அந்த மூர் மார்க்கெட் எரிந்தபோது நான் அடைந்த துயரத்துக்கு அளவே இல்லை.

மற்ற நாடுகளில் பழைமைச் சின்னங்களுக்கு ரொம்பவே முக்கியத்துவம் தருகிறார்கள். பல வெளிநாடுகளின் பெரிய நகரங்களில் ஓல்டு முனிசிபாலிட்டி, நியூ முனிசிபாலிட்டி என்று இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள். ஓல்டு முனிசிபாலிட்டியில் இருக்கும் பழமைக் காலச் சின்னங்களை யாரையும் தொடக்கூட விடமாட்டார்கள். ஐரோப்பாவில் 12-ம் நூற்றாண்டின் தெருக்களைக்கூட பாது காப்பாக வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் இடிக்கப்பட்ட சென்னை மத்தியச் சிறையின் அரிய 200 படங்களை நான் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேன்.

திருப்பணி என்னும் பெயரில் கோயில்களின் சில பகுதிகள் காலத்தால் அழிந்தே போகின்றன. கோயில் பணிகள் எல்லாம் இடைத்தரகர்கள் கைகளுக்குப் போய்விட்டதால், அவர்கள் லாப நோக்கில்தான் செயல்படுகிறார்கள். இதனை சரி செய்யும் முதல் அடியை, அரசுதான் எடுத்து வைக்க வேண்டும். அழியும் நிலையில் உள்ள சின்னங்கள், ஓவியங்கள் எல்லாம் அரசால் பாதுகாக்கப்பட வேண்டும்'' என்றார்.

ஓவியர் வீரசந்தானம், ''திருவையாறு கோயிலின் சுவர் ஓவியங்கள் அழிக்கப் படுவதைக் கேட்டு அதிர்ந்து போனேன். திருவையாறு மட்டும் அல்ல, தமிழ்நாட்டின் பலதரப்பட்ட பழைமையான சின்னங்களும், சித்திரங்களும் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன என்பதுதான் உண்மை. நான் இளம்

அழிக்கப்படும் வரலாற்று ஓவியங்கள்!

வயதில் பார்த்த திருவிடைமருதூர் சித்திரப் பிரகாரம் இப்பொழுது இல்லை. நம்முடைய பழைமையான சின்னங்களை அழியாமல் இருக்க அரசுதான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும், 'பழங்கால ஓவி யங்களை முழுமையாகப் பாதுகாக்க வேண்டும்’ என்று நிரந்தரமான சுற்றறிக்கை அனுப்பி கண்காணிக்க வேண்டும். தமிழ் உணர்வாளர்களுக்கும் இவற்றைப் பாதுகாக்கும் கடமை இருக்கிறது'' என்றார்.

பழங்காலக் கோயில்கள் பற்றி ஆய்வு செய்துவரும் குடவாயில் பாலசுப்பிரமணியத்திடம்  பேசினோம். ''திருவண்ணாமலை அருகில் உள்ள, திருக்கோவிலூரின் சிவன்கோயில் சுவர் ஓவியங்களும் இதே போல் அழிக்கப்பட்டு விட்டன. இப்படி அழிக்கப்பட்டு வரும் மற்றும் அழி யும் நிலையில் உள்ள பழங்கால ஓவி யங்களைப் பாதுகாப்பதற்காகவே மைசூரில் நடுவனரசின் 'கலாசாரப் பண்பாட்டுத்துறை’யின் ஓவியக்கலைப் பாதுகாப்புத்துறையினர் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களே கோயிலின் பராமரிப்புகளை முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்கள். இது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள தொல்லியல் துறை மற்றும் இந்தியத் தொல்லியல் துறையினரை அணுகியும் கோயிலைப் பாதுகாக்கும் கடமையைச் செய்யலாம். பொதுவாக பழைமையான கோயிலைச் சீரமைப்பதற்கு முன்பு, தொல்லியல் துறையின் உதவியை நாடுவதே சரியான முறை. திருவையாறு கோயில் நிர்வாகமும் அவ்வாறு பணியைத் தொடருவதே சரியானது'' என்றார்.

இதுபற்றி கோயில் நிர்வாகத்தின ரிடம் பேசினோம். ''பல ஆண்டுகளாகப் புனரமைப்புச் செய்யாமல் கிடந்த கோயிலைச் சீர்படுத்தி, குடமுழுக்கு செய்ய இருக்கும்போது இப்படிப் பிரச்னை செய்வது எந்தவிதத்தில் நியாயம்?'' என்று அப்பாவியாகக் கேட்டார்கள்.

பழைமையின் சிறப்பை இவர்களுக்கு யார் புரிய வைப்பது?

- வே.கிருஷ்ணவேணி

படங்கள்: ந.வசந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism