Published:Updated:

விடாது குமுது!

நீதிமன்றத்தில் 'காதல்' போராட்டம்!

விடாது குமுது!

நீதிமன்றத்தில் 'காதல்' போராட்டம்!

Published:Updated:
##~##
விடாது குமுது!

டந்த ஜூ.வி. இதழில், 'எஸ்.எம்.எஸ். அனுப்பிய டீச்சர்... எகிறி ஓடிய மாணவன்...’ என்ற தலைப்பில் சென்னை சௌகார்பேட்டை பள்ளி ஆசிரியை குமுதுவுக்கும், மாணவனுக்கும் இடையிலான காதல் விவகாரம் பற்றி கட்டுரை வெளியிட்டு இருந்தோம். வீட்டை விட்டு ஓடிப்போன இருவரும் போலீஸில் பிடிபட்ட பிறகும் விவகாரம் தீர்ந்தபாடில்லை. ஆசிரியை குமுதுவும் மாணவனும் தங்களின் பொருந்தாக் காதலை கைவிட மறுத்து அடம் பிடிக்கிறார்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதனால் குமுது, அவரது கணவர் மற்றும் மாண வனின் பெற்றோர்களுக்கு இடையே மும்முனை சட்டப் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அந்த விவகாரத்துக்குள் போகும்முன், குமுதுவையும் மாணவனையும் டெல்லியில் போலீஸார் வளைத்துப் பிடித்தது பற்றி பூக்கடை போலீஸார் சொல்வதைக் கேட்போம்.

விடாது குமுது!

''கடந்த 4-ம் தேதி தன் வீட்டில் இருந்து ஒரு லட்ச ரூபாய் பணமும் 3 சவரன் நகை யையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார் குமுது. தனது தோழி சந்தோஷி வீட்டுக்கு மாணவனுடன் சென்று தங்கி உள்ளார். பின்னர், அங்கிருந்து ரயில் மூலம் காஷ்மீருக்குச் சென்றனர். அங்கு இரண்டு நாட்கள் தங்கியுள்ளனர். அவ்வப்போது தனது சகோதரி வந்தனாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, நிலைமையை விசாரித்து இருக்கிறார் குமுது.

கடந்த 15-ம் தேதி வந்தனாவை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது, அவரது செல்போனுக்குப் பேசினார் குமுது. தான் டெல்லியில் இருப்பதாகவும், அங்கு தங்குவதற்கு வீடு ஏற்பாடு செய்து தரும்படியும் வந்தனாவைக் கேட்டார். உடனே வந்தனாவை அழைத்துக்கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் வடிவாம் பிகையும், செல்வராஜ், பிரபாகர் என்ற இரு காவலர்களும் டெல்லிக்கு விமானத்தில் பறந்தனர். குமுதுவையும் மாணவரையும் பிடித்து, அன்றிரவே மீண்டும் விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வந்தனர். இருவரையும் விசாரித்தபோது, அவர்கள் செய்தது தவறு என்று உணராதவர்களாகவே இருந்தனர். இனி வீட்டுக்குச் செல்ல மாட்டோம். ஒன்றாக சேர்ந்து வாழப்போகிறோம்’ என்றே திரும்ப திரும்பச் சொன்னார்கள்'' என்று சொன்னார்கள்.  

விடாது குமுது!

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆசிரியை குமுதுவை 15 நாள் காவலில் வைக்கவும், மாணவனை ராயபுரம் காப்பகத்தில் வைத்து மருத்துவப் பரிசோதனை செய்யவும் மாஜிஸ்திரேட் அலெக்சாண்டர் உத்தரவிட்டார்.

ஆசிரியையுடன் வாழவேண்டும் என்று தன் மகன் உறுதியாக இருப்பதால், இந்த விவகாரத்தில் உயர்

விடாது குமுது!

நீதிமன்றத்தின் துணையை மாணவனின் தந்தை சரவண்குமார் நாடியுள்ளார். அவருடைய வழக்குரைஞர் அழகேஸ்வரன், ''தனது வீட்டுக்குத் திரும்பிச் செல்லமாட்டேன் என்பதில் மாணவன் உறுதியாக உள்ளான். ஆசிரியை குமுதுவுடன்தான் வாழ்வேன் என்றும், அதற்கான வயதை எட்டும்வரை வேறு எங்காவது தங்குகிறேன் என்றும் பிடிவாதமாகக் கூறுகிறான். அவன் தகுந்த மனமாற்றம் பெறுவதற்கு கவுன்சிலிங் தேவை. எனவேதான், அவனை இன்னும் ஆறு மாதங்கள் காப்பகத்திலேயே வைக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு செய்துள்ளோம். அதேபோல், ஆசிரியை குமுதுவுக்கு ஜாமீன் தரக்கூடாது என்று கோரி ஆட்சேபனை மனுவும் தாக்கல் செய்துள்ளோம். தற்போது மாணவன் இருக்கும் மனநிலையில், ஆசிரியை குமுதுவை சந்திக்க நேரிட்டாலோ, அல்லது செல்போனில் தொடர்பு கொண்டாலோ, மீண்டும் அவர்களைப் பிரிப்பது இயலாத காரியமாகிவிடும்'' என்றார்.

ஆசிரியை குமுதுவின் தந்தை நாராயண பாண்டே, தனது மகளை ஜாமீனில் வெளியில் கொண்டுவர தீவிர முயற்சி செய்து வருகிறார். ஆசிரியை குமுதுவின் கணவர் ராஜீவ் சுக்லாவைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர் சார்பில் பேசிய வழக்கறிஞர் சுரேஷ்குமார், ''ராஜீவ் சுக்லா, தனியார் டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் பணிபுரிகிறார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கடந்த ஏழு மாதங்களாகவே குமுதுவின் நடவடிக்கையில் நிறைய மாற்றங் கள் தென்பட்டன. இரவு ஒரு மணி வரை அந்த மாணவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவதும் செல்போனில் பேசுவதுமாக இருந்திருக்கிறார். இதைக் கண்டித்தும் அவர் திருந்துவதாக இல்லை. இதனால், குமுதுவின் பெற்றோர்களிடம் விஷயத்தைக் கொண்டுசென்றார். ஆனால், 'மாணவனுடன் ஆசிரியை பேசுவது இயல்பு. இதற்கெல்லாம் சந்தேகப்படக்கூடாது’ என்று ராஜீவுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர். இதனால், வெறுத்துப்போனவர், கடந்த மூன்று மாதங்களாக ராயபுரத்தில் தனிவீடு எடுத்து, தனது மகனுடன் தங்கி உள்ளார். இந்த விவகாரத்துக்குப் பிறகு ஆசிரியை குமுதுவிடம் இருந்து விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார் ராஜீவ்'' என்றார்.

பெற்ற மகனின் எதிர்காலத்தைக் மீட்க வேண்டி மாணவனின் தந்தை சரவண்குமார் தாக்கல் செய்துள்ள வழக்கும், தனது 11 வயது மகனோடு மீதமுள்ள காலத்தைக் கழிப்பதற்காக குமுதுவின் கணவர் ராஜீவ் தாக்கல் செய்துள்ள விவாகரத்து வழக்கும், குமுதுவைக் காப்பாற்ற வேண்டிய கடமைக்காக குமுதுவின் தந்தை நாராயண பாண்டே தாக்கல் செய்துள்ள மனுவும், உயர் நீதிமன்றத்தில் உள்ளன.

விசித்திர வழக்குக்கு விரைவில் விடை தெரியட்டும்!

- ஜோ.ஸ்டாலின்

படங்கள்: எம்.உசேன், வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism