Published:Updated:

திருத்தி எழுதப்படும் தீர்ப்புகள்!

அதிர வைக்கும் பொது விசாரணை

திருத்தி எழுதப்படும் தீர்ப்புகள்!

அதிர வைக்கும் பொது விசாரணை

Published:Updated:
##~##
திருத்தி எழுதப்படும் தீர்ப்புகள்!

ழும்பூர் இக்சா மையத்தில் 'தமிழகத்தில் தலித் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள்’ குறித்த பொது விசாரணை கடந்த 15-ம் தேதி நடைபெற்றது. இளைஞர்களுக்கான சமூக விழிப்பு உணர்வு மையம், ஆதிவாசிகள் கூட்டமைப்பு, மனித உரிமை மையம் உள்ளிட்ட பல தன்னார்வ அமைப்புகள் இணைந்து நடத்திய விசாரணையில் திரைப்பட இயக்குநர் ஆர்.ரேவதி, எழுத்தாளர் வ.கீதா, வழக்கறிஞர்கள் ப.பா.மோகன், அஜிதா, பேராசிரியர் கல்விமணி ஆகியோர் பொது விசாரணை நீதிபதிகளாக இருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இருளர் பெண்கள் மீது இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை, தலித் மக்களுக்கு சொந்தமான இடத்தை பிறர் ஆக்கிரமித்தது, தலித் தொழிலாளிகள் மீதான சித்ரவதை உள்ளிட்ட பல வழக்குகள் விசாரணைக்கு வந்தன.

கடலூர் ஆற்றங்கரை வீதியைச் சார்ந்த ராஜம்மாள், ''என் மகன் முத்து 'சுப்பிரமணியபுரம்’, 'கோவா’ படங்களில் புரொடக்ஷன் மானேஜரா வேலை செஞ்சான். கல்யாணம்கூட பண்ணிக்காம 34 வயசுலேயும் குடும்பத்துக்காக உழைச்சான். திடீர்னு போன செப்டம்பர் மாசத்துல ஒருநாள் என்னையும் என் புருஷனையும் சென்னைக்கு அழைச்சிட்டுப்போன வடபழனி போலீஸ்காரங்க, ஒரு வெள்ளைத்தாள்ல கையெழுத்து கேட்டாங்க. எதுக்குன்னு கேட்டதுக்கு, 'உன் மகனை ஒப்படைக்கத்தான்’னு சொன்னாங்க. 'என்னாச்சு என் பையனுக்கு? என்ன தப்பு செஞ்சான்?’னு கேட்டதுக்கு எந்தப் பதிலும் சொல்லலை. பையன் கிடைச்சாப் போதும்னு வெள்ளைத்தாள்ல கையெழுத்துப் போட்டேன். ஆனா, பொணமாத் தருவாங்கன்னு நினைக்கலைய்யா...  

திருத்தி எழுதப்படும் தீர்ப்புகள்!

வடபழனியில் உள்ள ஒரு ஹோட்டல்ல நகை, பணம், திருடு போயிடுச்சாம். அதை திருடினது

திருத்தி எழுதப்படும் தீர்ப்புகள்!

முத்துதான்னு முடிவு செஞ்ச போலீஸ்காரங்க, விருகம்பாக்கத்துல இருந்த அவன ராத்திரி 11 மணிக்குப் போய் அடிச்சு இழுத்துட்டு வந்திருக்காங்க. அவனை வேன்லேயே கடலூருக்கு அழைச்சுட்டுப் போய், அவனோட கூட்டாளி ராஜூவைத் தேடி இருக்காங்க. ராஜூவைக் கண்டுபிடிக்க முடியாம, அவனோட தம்பி சண்முகத்தை சென்னைக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. வடபழனி ஸ்டேஷன்ல வைச்சு என் பையனை அடிச்சுக் கொன்னுட்டாங்க. 12 வருஷத்துக்கும் மேல சினிமாவில் வேலை பார்க்கிறவன் திருடப் போவானாய்யா..? என் பையனை அநியாயமாக் கொலை செஞ்ச மூணு போலீஸையும் சஸ்பெண்ட் பண்ணி இருக்காங்க. அவங் களுக்கு அந்தத் தண் டனை போதுமா..? நீங்க தான் வழிகாட்டணும்'' என்று கையெடுத்துக் கும்பிட அரங்கமே நிசப்தம் ஆனது.

''இச் சம்பவத்தில் ஈடுபட்ட வடபழனி காவல் நிலையக் குற்றப் பிரிவு ஆய்வாளர் நடேசன், உதவி ஆய்வாளர் வி.கே.ஏ.மூர்த்தி, ஏட்டு முருகேசன் ஆகியோர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ஆனால், இந்த மூவரின் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. 302 பிரிவின்படி இவர்கள் மூவரின் மீதும் கொலை வழக்கு பதிவுசெய்ய வேண்டும். தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆகியவற்றுக்கு ராஜம்மாள் புகார் அனுப்பியுள்ளார். ராஜம்மாள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டி ஒரு வழக்கைப் பதிவு செய்யலாம்'' என்று பொது விசாரணை நடுவர்கள் கூறினர்.  

அடுத்த செல்வராணியின் வழக்கும் வித்தியாசமானது. ''நான் தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் முத்துவீரன்கண்டியன் பட்டியில் குடியிருக்கேன். எனக்கு கல்யாணமாகி 12 வருஷங்களாச்சு. என் கணவர் வீரையன் பன்றி வியாபாரம் செய்றார். அவர் மேல செய்யாத குற்றத்துக்காக ஏற்கெனவே பொய்யான திருட்டு கேஸ்கள் இருக்குது. போலீஸுக்குப் பயந்து அடிக்கடி எங்களை விட்டுட்டு எங்கேயாவது போயிடுவார்.  

திருத்தி எழுதப்படும் தீர்ப்புகள்!

போன ஜூலை 13-ம் தேதி என் கணவர் எங்கே போனார்னு தெரியல. அப்ப அவரைத் தேடி போலீஸ் காரங்க வீட்டுக்கு வந்தாங்க. புருஷன் இல்லைன்னு சொன்னதும், என்னோட அப்பா துரைசாமியையும் தம்பி ராஜகுருவையும் அழைச்சுட்டுப் போயிட்டாங்க. எங்க ஊரே திரண்டு அய்யம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் போனோம். ரெண்டு பேரையும் வெளியே அனுப்புங்கன்னு சொன்னோம். தம்பி ராஜகுருவை மட்டும் அனுப்பிட்டு அப்பாவை சித்ரவதை பண்ணாங்க. என் அம்மா முத்தாயியும் நானும் அழுது கெஞ்சியதும், '15 பவுன் நகையும், 5,000 ரூபாய் பணமும் கொடுத்தா விடுறோம்’னு சொன்னாங்க.

அதுக்கு வழி இல்லாம என் அண்ணன் தர்மராஜ் வீட்டுக்கு வந்தேன். மன உளைச்சல்ல கஷ்டப்படுறதைவிட செத்துடலாம்னு தோணுச்சு. மண்ணெண்ணெய் ஊத்திக் கொளுத்திக்கிட்டேன். வலி தாங்காம கத்தும்போது என் அண்ணி சித்ரா நெருப்பை அணைச்சுக் காப்பாத்திட்டாங்க...'' விசும்பல்களுக்கு இடையே பேசி முடித்தார்.

''மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்த செல்வராணி மாஜிஸ்திரேட் முன்னி லையில் விளக்கம் அளித்துள்ளார். இந்த வழக்கை விசாரிக்க தனி அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். செல்வராணி குடும்பத்துக்கு நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரவேண்டும்'' என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

''கேஸுக்கு ஆள் கிடைக்காதபோது எங்களை மாதிரி குறவர் வகுப்பைச் சார்ந்தவங்க மேல வழக்குப் பதிவுசெய்து கேஸை முடிக்கிறது போலீஸ்காரங்களுக்கு வழக்கமாயிடுச்சு. என் அப்பா ஒரு காலத்துல திருடனா இருந்ததால, நானும் திருடன் ஆயிடுவேனா? என் பெரிய மகள் தனுஷா நாலாவது படிக்கிறா. சின்ன மகள் தர்ஷினி ரெண்டாம் வகுப்பு படிக்கிறா. மூணு வயசுப் பையன் விஷ்ணு இருக்கான். இவங்களை என் கண் எதிர்லேயே பலரும் திருடன் பெத்த பசங்கன்னு அவமானப்படுத்துறாங்க. செய்யாத குற்றத்துக்குத் தண்டனையா... என்ன கொடுமை இது?'' கொந்தளிப்போடு பேசினார் வீரையன்.

''வீரையன் மேல் இருக்கும் வழக்குகளைப் பட்டியல் இட்டு, அதில் உண்மையான குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிக்க, உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவுசெய்ய வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டது பொது விசாரணைக் குழு.

என்றுதான் ஓயுமோ இந்த பாவப்பட்ட மக்களின் பிரச்னைகள்!

- க.நாகப்பன்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism