Published:Updated:

பதறும் விவசாயிகள்... அலறும் மீனவர்கள்!

நாகையில் 'அனல்' மின்சாரப் போராட்டம்

##~##
பதறும் விவசாயிகள்... அலறும் மீனவர்கள்!

கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் முன்னரே, நாகை மாவட்டத்தில் அடுத்த போராட்டம்.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நாகப்பட்டினம் மாவட்ட கடற்கரைகளை, ஒட்டு மொத்தமாக தனியார் அனல்மின் நிலையங்களுக்குத் தாரை வார்த்து விட்டது மாநில அரசு. இப்போதுள்ள திருக்கடையூர் அனல்மின் நிலையத்தையும் சேர்த்து, 12  மின் நிலையங்கள் இந்தப் பகுதியில் அமைய உள்ளன. அதனால் அவ்வப்போது கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடப்பதும், அமளி ஏற்படுவதும் வாடிக் கையாகிவிட்டது.

சிந்தியா நிறுவனத்தினரால் பூம்புகாருக்கு அருகில் உள்ள பெருந்தோட்டம் கிராமத்தில், 700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ஒரு அனல் மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக கடந்த மாதம் 17-ம் தேதி கலெக்டர் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடந்து முடிந்துவிட்ட நிலையில், 'அனல்மின் நிலையம் வேண்டவே வேண்டாம்’ என்று பெருந்தோட்டம் கிராம மக்கள் போராடத் தொடங்கி இருக்கிறார்கள். வீடுகளில் கறுப்புக்கொடி, படகுகளில் கறுப்புக்கொடி, பொதுக் கூட்டம், தெருமுனைப் பிரசாரம் என்று பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும்நிலையில், போராட்டக் குழுவினரை சந்தித்தோம்.

பதறும் விவசாயிகள்... அலறும் மீனவர்கள்!
பதறும் விவசாயிகள்... அலறும் மீனவர்கள்!

முஸ்லீம் ஜமாத்தைச் சேர்ந்த ஃபைஜுர் ரஹ்மான், ''இந்த ஊர் மிகப்பெரிய சாகுபடி பரப்பைக் கொண் டது. இப்போதுகூட நெல்லும் உளுந்தும் பயிரிட்டு வருகி றார்கள். இந்தப் பகுதியில்தான் மிகப்பெரிய பெருந்தோட்டம் ஏரி அமைந்துள்ளது. சுற்றுச்சூழலைக் காப்பதற்காக சவுக்கு மரக்காடுகளும், மாங்குரோவ் காடுகளும் உள்ளன. இங்கு பல அரிய பறவைகளும் வெளி நாட்டுப் பறவைகளும் வந்து தங்கிச் செல்கின்றன. இத்தனை இயற்கை அழகோடு இருக்கும் எங்கள் ஊரில் அதைக் கெடுக்கும் வண்ணம், இப்படி ஒரு அனல்மின் நிலையம் வேண்டாம் என்பதுதான் ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கை'' என்று முகவுரை கொடுத்தார்.

''முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த ஊர் இது. அதனால், கிட்டத்தட்ட 5,000 விவசாயத் தொழி லாளர்கள் இருக்கிறார்கள். இப்போது 700 ஏக்கரை சிந்தியா நிறுவனம் வாங்கி விட்டது. அவர்கள் மின் நிலையம் அமைத்து விட்டால், மற்ற இடங்களுக்கு நீர் போகும் பாதை அடைபட்டு விடும். நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர், புகை, சாம்பல், கரி லாரிகள் ஆகியவற்றால் இங்குள்ள ஒட்டு மொத்த விவசாயமும் அழிந்து போகும்'' என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்பாளர் அன்பழகன்.  

பதறும் விவசாயிகள்... அலறும் மீனவர்கள்!

சிந்தியா நிறுவனத்தின் மின் நிலையம் அமைய இருக்கும் இடத்தைப் பார்வை யிட்டோம். பச்சைப் பசேலென்று பரந்து விரிந்திருக்கும் வயல்கள் நடுவே இரண்டு குடியிருப்புகள் இருக்கின்றன. மெய்யந்தெரு, மன்னந்தெரு ஆகிய அந்த இரண்டு குடியிருப் பிலும் 60 வீடுகள் இருக்கின்றன. அங்கே வசிக்கும் மக்கள், ''யார் யாரோ வந்து பார்த்துட்டுப் போறாங்க. மாற்று இடம் தருவதா பேசிக்கிறாங்க. மாற்று இடம் கொடுத்தாலும், நாங்க இதை விட்டுப் போக மாட்டோம்'' என்கிறார் ஊர்த்தலைவர் நீலமேகம்.

பெருந்தோட்டம், நாயக்கர்குப்பம், சாவடிக்குப்பம், கீழமூவர்கரை, மேலமூவர்கரை, கோனயாம்பட்டினம், அல்லிமேடு, அகரபெருந்தோட்டம் என்று எட்டு ஊர்களை சுற்றிலுமாக வைத்து நடுவே அமையப்போகிறது அனல்மின் நிலையம். அதனால், அனைத்து ஊர்களைச் சேர்ந்தவர்களையும் ஒருங்கிணைக்கிறார்கள் போராட்டக் குழுவினர். அவற்றில் பெரும்பாலானவை மீனவக் கிராமங்கள் என்பதால், அனல்மின் நிலையம் அமைந்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் மீனவர்கள்.

பதறும் விவசாயிகள்... அலறும் மீனவர்கள்!

நாயக்கர்குப்பம் மீனவர் கிராமத் தலைவர் முத்து, ''அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் கடல் மீன்வளம் பாதிக்கப்படும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. அப்படி இருக்கும்போது இதை எவ்வாறு நாங்கள் அனுமதிக்க முடியும்? அதோடு மின் நிலையத்துக்குத் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்ய துறைமுகமும் இங்கே அமைக்கப் போகிறதாம். அப்படி அமைந்தால் மீனவர்கள் எங்கே போகமுடியும்? அவர்கள் தொழிலை எப்படிச் செய்ய முடியும்? அதனால் இங்கே அனல்மின் நிலையம் வரவே கூடாது'' என்றார் ஆத்திரத்துடன்.

சிந்தியா நிறுவனம் என்ன சொல்கிறது?

அந்த நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி சித்திரவேலுவிடம் பேசினோம். ''பெருந்தோட்டம் கிராமத்தின் ஒட்டுமொத்த மக்கள் ஆதரவோடும்தான் அங்கே மின் நிலையம் அமையப் போகிறது. ஊராட்சித் தலைவர் முதல் சாதா ரண குடிமக்கள் வரை எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். சிலர் மட்டுமே எதிர்க்கிறார்கள். விரை வில் அவர்களும் எங்களைப் புரிந்து கொண்டு வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. முறையாக அரசு அனுமதி பெற்று அனைத்து சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டுத்தான் இங்கே அனல்மின் நிலையம் தொடங்கப் போகி றோம். கிராமங்களின் வளர்ச்சிக்குத் தேவையான பணிகளைச் செய்து கொடுத்து, கிராம மக்கள் அமை தியாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கு நாங்கள் உறு துணையாக இருப்போம். மற்றபடி வாழ்வாதாரம் பாதிக்கும் என்று விவசாயிகளும், மீனவர்களும் அச்சப்படத் தேவையே இல்லை'' என்று விளக்கம் அளித்தார்.

நாகை மாவட்ட ஆட்சியர் முனுசாமியிடம் பேசினோம். ''கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை அரசுக்கு அறிக்கையாக அனுப்பி வைத்துள்ளோம். அரசு எடுக்கும் முடிவை நடைமுறைப்படுத்துவோம்'' என்று சொன்னார்.

இங்காவது ஆரம்ப கட்டத்திலேயே மக்களின் அச்சத்தைப் போக்க அரசு முன்வரட்டும்.

- கரு.முத்து