Published:Updated:

பாலைவனம் ஆகிறதா அவிநாசி?

கானல் நீராகும் நீர்ச் செறிவூட்டும் திட்டம்

##~##
பாலைவனம் ஆகிறதா அவிநாசி?

'50 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் கிடக்கிறது அவிநாசி - அத்திக்கடவு நீர்ச் செறிவூட்டும் திட்டம். 20 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னைக்குத் தீர்வு எப்போது கிடைக்கும்?’ என்று ஏக்கத்துடன் நமது ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) கேட்டு இருந்தார் ஒரு வாசகர். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதைத் தொடர்ந்து விசாரிக்கத் தொடங்கினோம்.  அவிநாசி - அத்திக்கடவு நீர்ச் செறிவு திட்டப்பகுதி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்​கியது. இந்தப் பகுதியில் அரசும் தனியாரும் அமைத்துள்ள ஆழ்துளைக் கிணறுகளின் எண்ணிக்கை ஏறத்தாழ ஒரு லட்சம். தற்போது இவற்றில் முக்கால்வாசி ஆழ்துளைக் கிணறுகள் பயன் இல்லாமல் போய்விட்டன. காரணம் நிலத்தடி நீர் மட்டம் மிகமிகக் கீழே போய்விட்டதுதான்.

''அவிநாசி பகுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட குளம், குட்டைகளுக்குத் தண்ணீர் வரும் பாதைகள் மறிக்கப்பட்டு வீடுகள், தொழிற்சாலைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் அந்த நீர்ப்பிடிப்பு பகுதிகள் வறண்டு போய் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. அவிநாசி - மங்கலம் சாலையில் 300 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து இருக்கும் தாமரைக் குளம் மட்டும் நிரம்பினாலே, அதனைச் சுற்றி 10 கி.மீ. தொலைவில் உள்ள கிணறுகளில் தண்ணீர் ஊறும். இந்தக் குளம் 35 ஆண்டுகளாக வறண்டு கிடக்கிறது. இந்த நிலை நீடித்தால், தார் பாலைவனம் மாதிரி அவிநாசியும் மாறிவிடும்'' என்று விவசாயிகள் மிரட்சியுடன் பேசுகிறார்கள்.

பாலைவனம் ஆகிறதா அவிநாசி?

இந்த நிலைமையைப் போக்குவதற்​காகத்தான் அவிநாசி - அத்திக்கடவு நீர்ச் செறிவுத் திட்டம் தீட்டப்பட்டது. அவிநாசிப் பகுதியை ஒட்டிய பவானி அணையில் இருந்து கோவை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு குடி நீர் வழங்கப்படுகிறது. இந்த அணைக்கு மூன்று கிலோ மீட்டர் தொலைவில் பவானி ஆறும் மோயாறும் சந்திக்கின்றன. இந்தப் பகுதிதான் அத்திக்கடவு. இருப்பினும் இந்த ஆறுகளின் தண்ணீரை அவிநாசி மக்கள் பயன்படுத்த முடியவில்லை. காரணம் அவிநாசி பகுதி கடல் மட்டத்திலிருந்து 1,200 அடி உயரத்தில் உள்ளது.

பவானி சாகர் அணையில் இருந்து ஒவ்வொரு மழைக்​காலத்தின் போதும் சராசரியாக 22 டி.எம்.சி.

பாலைவனம் ஆகிறதா அவிநாசி?

தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இப்படி வீணாகும் தண்ணீரில் 1.5 டி.எம்.சி-யை மட்டும் அத்திக்கடவில் கால்வாய் அமைத்து, அவிநாசிப் பக்கம் திருப்பி விட்டாலே போதும். அனைத்துப் பகுதிக்கும் நீர் கிடைத்துவிடும். விவசாயம் பெருகிவிடும்.

இந்தத் திட்டம் நிறைவேறுவதில் என்ன​தான் சிக்கல்?  

குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பக் கோரும் இயக்கத்தின் செயலாளர் டி.கே. பெரிய​சாமியிடம் கேட்டோம். ''பவானி சாகர் அணை நிரம்பி வெளியேறும் நீரை அத்திக்கடவில் இருந்து ஒரு வாய்க்கால் வெட்டி, அவிநாசிப் பகுதிக்குத் திருப்பி​விடுமாறு கேட்கிறோம். இதற்காக 130 கி.மீட்டர் கால்வாய் வெட்டவேண்டும். இந்தக் கால்வாய் அமைக்கப்பட்டால்தான் இந்தப் பகுதியில் உள்ள அனைத்து ஏரி, குளம், குட்டைகளும் நிரம்பும். மக்களுக்கு நீர் ஆதாரம் கிடைப்பதுடன் விவசாய​மும் செழிக்கும்'' என்கிறார்.

அடுத்துப் பேசிய பாரதீயகிஸான் சங்க மாவட்டத் தலைவரான வேலுசாமி, ''எனது தந்தை மாரப்பன் எம்.எல்.ஏ.வாக (காங்கிரஸ்) இருந்த 1957 முதல் 1982 வரை 25 வருடங்களும் இந்தத் திட்டத்துக்காகப் போராடினார். நிதி ஆதாரத்தைக் காரணம் காட்டி இந்தத் திட்டம் தள்ளிப் போடப்பட்டது. ஒவ்வொரு தேர்தல் போதும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தித் தருவதாக, அரசியல்வாதிகள் வாக்குறுதி கொடுப்பார்கள். ஆனால் ஜெயித்தபிறகு இந்தத் திட்டத்தை எந்த அரசும் கண்டுகொள்வதே இல்லை'' என்றார்.

இயக்கத்தின் பொருளாளர் நடராஜன், ''1996-ம் ஆண்டு இந்தத் திட்டத்துக்கு 138 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. 2001-ல் இந்த மதிப்பீட்டுத் தொகை 270 கோடியானது. கடைசியாக பொதுப்பணித் துறை தற்போது மதிப்பீடு செய்துள்ள தொகை 1,863 கோடி ரூபாய். ஒவ்வோர் ஆண்டிலும் குறைந்த பட்சம் 10 சதவிகிதம் அளவுக்குத் திட்ட மதிப்பீடு அதிகரிக்கவே செய்யும். அதனால் இந்தத் திட்டத்தைத் தொடுவதற்கே அரசுகள் பயப்படுகின்றன. மக்கள் நலன் கருதி இன்றைய அரசாவது உடனே செயல்படுத்த வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ. கருப்பசாமியிடம் விளக்கம் கேட்டோம். ''இந்தத் திட்டம் குறித்து ஆய்வு செய்ய மோகனகிருஷ்ணன் கமிட்டி அமைத்து வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. ஆய்வுப் பணிகளுக்காக 30 லட்ச ரூபாயை தமிழக முதல்வர் அவர்கள் ஒதுக்கியிருந்தார். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற 2,000 கோடி ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது.  இந்த நிதி ஆண்டிலேயே இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது'' என்றார்.

மக்கள் நெஞ்சில் நீர் வார்த்த பெருமை இந்த அரசுக்காவது கிடைக்கட்டும்!

- சிவன்