Published:Updated:

புற்று நோய் பரப்புகிறதா மணல் ஆலை?

தீராத குமரி அவலம்

##~##
புற்று நோய் பரப்புகிறதா மணல் ஆலை?

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இயங்குகிறது மத்திய அரசின், 'இண்டியன் ரேர் எர்த்’ மணல் ஆலை. இங்கு மணலில் இருந்து அணு சக்திக்குத் தேவையான தாதுப் பொருட்கள் பிரித்து எடுக்கப்படுகிறது. இந்த ஆலையினால் பரவி வரும் கேன்சர் ஆபத்து பற்றி, கடந்த 7.10.2001 ஜூனியர் விகடனில் 'ஐயோ, இது என்ன கொடுமை?’ என்று கட்டுரை வெளியிட்டு இருந்தோம். 11 ஆண்டுகள் கழிந்த நிலையில், அங்கு கேன்சர் பாதிப்பு எப்படி இருக்கிறது என்று விசாரிக்கச் சென்றபோது, பேரதிர்ச்சி. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த ஆலைக்கு 100 ஆண்டு சரித்திரம் உண்டு. இயற்கைத் துறைமுகமான குளச்சலில் கறுப்பு, சிவப்பு மணல்கள் தேங்கிக் கிடப்பதைக் கண்டு, ஆய்வு செய்து அதில் மோனோசைட் இருப்பதைக் கண்டறிந்தவர் ஜெர்மன் விஞ்ஞானியான ஸ்கோம்பெர்க். அங்கு தோரியம், டைட்டானியம் உள்ளிட்ட எட்டு விதமான கனிமங்களும் இருப்பது அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட, ஜெர்மானியர்கள் 1910-ல் மணவாளக்குறிச்சியில் மணல் ஆலை​யைத் துவங்கினார்கள். பின்னர் அது, ஆங்கிலேயர்கள் கைகளுக்குச் சென்று இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் இந்திய அரசு நிறுவனமாக மாறியது.

புற்று நோய் பரப்புகிறதா மணல் ஆலை?

இந்த மணலில் இருந்து பிரித்து எடுக்கப்படும் கார்னெட், இல்மனைட், சிர்கான், மோனைட், ரூட்டைல், எரிக்கோனியம், சிர்கோனியம் போன்ற கனிமங்கள் பெட்ரோமாக்ஸ் லைட்டில் உள்ள மேண்டலில் தொடங்கி ஆயுதங்கள் செய்வது வரை பயன்படுகிறது. உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டியின் விளைவாக முன்னர் ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் மணலை அள்ளிய நிறுவனம், இப்போது நான்கு லட்சம் டன் மணலை அள்ளுகிறது.  

புற்று நோய் பரப்புகிறதா மணல் ஆலை?

''மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வள்ளி ஆற்றில் அடித்து வரப்படும் இந்த அரிய மணல், அப்படியே மணலாக இருக்கும் வரை அதில் எந்த ஒரு பாதிப்பும் யாருக்கும் இல்லை. அதில் இருந்து கனிமங்களைப் பிரித்து எடுக்கும் போதுதான் கதிர் இயக்கம் காற்றில் கலக்கிறது. நாங்கள் நடத்திய ஆய்வில் சின்னவிளை, பெரியவிளை, மிடாலம் போன்ற கிராமங்களில் கதிர் வீச்சின் அளவு அதிகமாகக் காணப்படுகிறது. அதனால் இந்தப் பகுதி மக்களுக்கு கேன்சரில் என்னென்ன வகை இருக்கிறதோ அத்தனை பாதிப்பையும் காண முடிகிறது. புற்று நோய் மட்டுமின்றி மந்தப்புத்தி, தைராய்டு, பிறவியிலேயே ஊனம் போன்ற பாதிப்புடனும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் இந்தப் பகுதியில் உள்ள நெய்யூர் கேன்சர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்' என்கிறார் சூழலியல் ஆர்வலரான லால் மோகன்.

புற்று நோய் பரப்புகிறதா மணல் ஆலை?

நெய்தல் மக்கள் இயக்கத்தின் அமைப்​பாளர்​களில் ஒருவரான பெர்லின், ''அரிய மணல் ஆலையால்

புற்று நோய் பரப்புகிறதா மணல் ஆலை?

கதிர் இயக்கமும், அதனால் கேன்சரும் உருவாவதை அறிந்து,  ஒரு கட்டத்தில் குறும்பனை, கொட்டில்பாடு, மிடாலம் போன்ற கிராமத்து மீனவர்கள் ஆலையில் வேலை செய்ய மறுத்து விட்டார்கள். ஆனால் சின்னவிளை, பெரியவிளை, புதூர் கிராம மக்கள் ஆபத்தை அறியாமல் இன்னமும் மண் சுமக்கிறார்கள். இந்தக் கிராமங்களைச் சேர்ந்த கேன்சர் நோயாளிகள் நெய்யூர் கேன்சர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால், செலவை இந்த நிறுவனமே ஏற்றுக் கொள்கிறது. அப்படி என்றால் தங்களால்தான் கேன்சர் பாதிப்பு வருகிறது என்பதை நிர்வாகமே ஒப்புக் கொள்கிறது என்றுதானே பொருள்?' என்றார்.

கேன்சர் ஆபத்து குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் நாகராஜன், 'நான் இப்போதுதான் பொறுப்புக்கு வந்திருக்கிறேன். மணவாளக்குறிச்சி தொடர்பான விபரங்களை முழுமையாகத் தெரிந்துகொண்டுதான் விளக்கம் தரமுடியும்' என்றார்.

ஆலை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டோம். பெயர் குறிப்பிட விரும்பாத மணல் ஆலையின் உயர் அதிகாரி ஒருவர், 'மணல் ஆலையால்தான் இந்தப் பகுதியில் கதிர்வீச்சு இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் இயற்கையாகவே இந்தப் பகுதியில் கதிர் வீச்சு உள்ளது. இந்த மணலில் இருந்து மோனோசைட் போன்ற கனிமங்களைப் பிரித்து எடுப்பதால் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்துகிறோம் என்பதுதான் உண்மை. கேன்சர் நோயால் பாதிப்படைந்த மக்களுக்கான சிகிச்சைக்கு எங்களால் முடிந்தவரை உதவி செய்து வருகிறோம். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக எங்களிடம் உதவி கோரி யாருமே வரவில்லை. காரணம் நாங்கள் மணல் எடுப்பதால், கேன்சர் பாதிப்பு குறைந்து விட்டது. கதிர் வீச்சை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?'' என்றார்.

ஆனால் நாம் குறும்பனை கிராமத்துக்குச் சென்றபோது, கேன்சரால் இறந்த ராபர்ட் எடிசன் என்ற 31 வயது இளைஞரை அப்போதுதான் அடக்கம் செய்துவிட்டு வந்திருந்தார்கள். மணவாளக்குறிச்சியைச் சுற்றியுள்ள 10 கிராமங்களிலும் முன்பைவிட, புற்று நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து இருப்ப தாகவும் சொல்கிறார்கள்.

இனி, அரசுதான் தீவிர விசாரணை மேற்​கொண்டு உண்மையைக் கண்டறிந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

- டி.அருள் எழிலன்