Published:Updated:

அழகிரி வழியில் ராஜன் செல்லப்பா?

மதுரை மாநகராட்சி மல்லுக்கட்டு

##~##
அழகிரி வழியில் ராஜன் செல்லப்பா?

ழியர்களுக்குச் சம்​பளம் போடவும் நொண்டியடிக்கிற ஒரு மாநகராட்​சிக்கு, கோடிக்​கணக்​​​கில் வருமானம் வர வழி இருப்பது தெரியவந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆனால், என்ன செய்யக்கூடாதோ அதைச் செவ்வனே செய்திருக்கிறது, மதுரை அ.தி.மு.க.! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மதுரை மாநகராட்சியில் டூவீலர் ஸ்டாண்ட், கட்டணக் கழிப்பறை, மார்க்கெட், புல் பண்ணை என்று வருவாய் தரும் 85 இனங்களுக்கான ஏலம் கடந்த 21, 22-ம் தேதிகளில் நடைபெற இருந்தது. மாநகராட்சி நிர்ணயித்த தொகையே சுமார் 3.5 கோடி ரூபாய். டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிப்பது போல், ஒரு கூட்டமே மாநகராட்சிக்குப் படை எடுத்தது. கடும் போட்டி இருப்பதால்,  ஏலத் தொகை ஐந்து கோடியைத் தாண்டலாம் என்று எதிர்பார்க்கப்​பட்டது.

அழகிரி வழியில் ராஜன் செல்லப்பா?

ஆனால், ஏலத்தில் கலந்து கொள்வதற்கான அனுமதி டோக்கன் கேட்ட அனைவருக்கும் கொடுக்கப்​படவில்லை. அதனால் ஒவ்வொரு இனத்துக்கும் இரண்டு நபர்கள் மட்டுமே ஏலம் கேட்க அனுமதிக்கப்பட்டார்கள். சொல்லி வைத்தது போல, ஒருவர் ஏலம் கேட்பதும், மற்றொருவர் விட்டுக் கொடுப்பதுமாக இருந்தார்கள். கத்தரிக்காய் ஏலம் போன்று நூறும், இருநூறும் உயர்த்திக் கேட்டார்கள் ஏலதாரர்கள். இதனால் பெரும்பாலான இனங்கள், மாநகராட்சி நிர்ணயித்த தொகையைவிட 2,000 ரூபாய்தான் அதிகம் போனது. சுமார் ஒரு கோடி ரூபாய்

அழகிரி வழியில் ராஜன் செல்லப்பா?

வருமானம் தருகிற மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டின் டூ வீலர், கார் ஸ்டாண்ட் 38 லட்சத்துக்குத்தான் ஏலம் போனது. (மாநகராட்சியின் நிர்ணயித்திருந்த தொகை 37 லட்சம்) அதாவது சொந்த சம்பாத்தியத்தைப் பெருக்கிக் கொள்ள மாநகராட்சிக்கு வரவேண்டிய பணத்தை வரவிடாமல் சிண்டிக்கேட் வைத்து தடுத்துவிட்டார்கள்.

இந்த விவகாரத்தில் கொந்தளிக்கும் தி.மு.க-வைச் சேர்ந்த மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் எம்.எல்.ராஜ், ''ஏலத் தேதி அறிவிச்சதும், ஏற்கெனவே டூ வீலர் ஸ்டாண்ட் நடத்துறவங்க புதிய ஏலத்தில் கலந்து கொள்வதற்கான என்.ஓ.சி. பெறுவதற்கு வந்​தார்கள். இன்னைக்கு வாங்க நாளைக்கு வாங்கன்னு அலைக்கழிச்ச அதிகாரிகள், கடைசி நேரத்தில் வருவாய்ப் பிரிவையே பூட்டிவிட்டு ஓடிவிட்​டார்கள். பல்வேறு இனங்களுக்கு டி.டி. எடுத்துக் கொண்டு வந்தவர்களால், ஏலத்தில் கலந்து கொள்வதற்கான டோக்கன் வாங்க முடியவில்லை. அதே நேரத்தில், தனியார் ஓட்டல் ஒன்றில் கூடிப்பேசி அனைத்து வேலைகளையும் அ.தி.மு.க-காரர்களுக்கே ஒதுக்கிவிட்டார்கள் மேயர் தரப்பினர். ஜனநாயக முறைப்படி ஏலம் நடந்தது போல் காட்டுவதற்காக ஒவ்வொரு நபருடனும் ஒரு டம்மி ஏலதாரருக்கு டோக்கன் வழங்கி உள்ளார்கள்.

டோக்கன் கிடைக்கவில்லை என்றதும் 19-ம் தேதி கமிஷனரைப் போய்ப் பார்த்தேன். 'நாளைக்கு வரச் சொல்லுங்க. டோக்கன் குடுத்திடுவோம்’ என்றார். ஆனால் மறுநாள் அவரும் ரூமைப் பூட்டிவிட்டு ஓடிவிட்டார். துணை ஆணையர் தேவதாஸ், உதவி ஆணையர் (வருவாய்) சாந்தி மாயி ஆகியோருக்குப்

அழகிரி வழியில் ராஜன் செல்லப்பா?

போன் போட்டால், 'பூங்கா முருகன் கோயிலில் உண்டியல் எண்ணுகிறோம். இதோ வந்துவிடுகிறோம்’ என்றார்கள். ஆனால் வரவேயில்லை. மறுபடி தொடர்பு கொண்டால், இருவரின் போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டிலேயே இல்லாத கொடுமை என்னவென்றால், கிழக்கு மண்டலத்தில் உதவி ஆணையராக இருந்தவரை டபுள் புரோமோஷன் கொடுத்து கமிஷனர் சீட்டில் உட்கார வைத்திருக்​கிறார்கள். அந்த விசுவாசத்தில்தான் மனிதர் ஆளும் கட்சியினரின் அத்துமீறல்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறார். அனைத்து இனங்களுக்கும் மறு

அழகிரி வழியில் ராஜன் செல்லப்பா?

ஏலம் நடத்த வேண்டும். இந்த பொம்மைக் கமிஷனரைத் தூக்கிவிட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரைக் கமிஷனராகப் போட வேண்டும்' என்றார் வேதனையாக.

முன்னாள் மேயர் தேன்மொழியின் கணவர் கோபி​நாதன், 'ஏலத்தில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்​காதவர்கள், மாநகராட்சி நிர்ணயித்த தொகையை​விட 25 சதவிகிதம் அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கத் தயாராக இருப்பதாக கோர்ட்டுக்குப் போய் இருக்கிறார்கள். இதுதவிர, 85 இனங்களில் 60 இனங்கள் மட்டுமே ஏலம் விட்டிருக்கும் அ.தி.மு.க-வினர், மற்றவை ஏலம் போகவில்லை என்று கூறி அதை இன்னும் அடிமட்டத் தொகைக்கு ஏலம்விட முயற்சிக்கிறார்கள்' என்று குற்றம் சாட்டினார்.

இந்த புகார் குறித்து கமிஷனரிடம் பேச முடியாமல்போகவே, துணை கமிஷனர் தேவதாஸிடம் பேசினோம். 'உதவி கமிஷனர் சாந்தி மாயிதான் இதற்குப் பொறுப்பு' என்று நழுவினார்.  'நாங்கள் செக்ஷனைப் பூட்டிவிட்டு எங்கும் ஓடிப்போகவில்லை. பக்கத்தில் இருக்கிற கருத்தரங்கு கூடத்தில்தான் இருந்தோம்'' என்றார் சாந்தி மாயி.

இது குறித்து மேயர் ராஜன் செல்லப்பாவின் கருத்தைக் கேட்​டோம். 'கடந்த முறையைவிடக் கூடுதல் தொகை வைத்துத்தான் ஏலம் விட்டிருக்கிறோம். ஏற்கெனவே பேசி முடித்துவிட்​டோம் என்ப​தெல்​லாம் பொய். இருந்​தாலும், கோர்ட்டு உத்தரவை மதித்து, இரு இனங்களில் மறு ஏலம் நடத்த உள்ளோம். ஒவ்வொரு ஏலத்திலும் இரண்டு பேர் மட்டுமே கலந்து கொண்​டார்களா என்ற விவரம் என்னிடம் இல்லை. ஆனால் எல்லாமே முறையாக நடந்தது'' என்று சொன்னார்.

''கடந்த ஆட்சியில் அழகிரி வீட்டில் டோக்கன் கொடுத்தார்கள். அதே வழியைப் பின்பற்றி இப்போது மேயர் ராஜன் செல்லப்பாவின் பங்களாவில் டோக்கன் கொடுத்திருக்கிறார்கள். வேண்டப்பட்டவர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, சொந்தக் கட்சிக்காரர்கள் பலரையும் ஏலத்தில் கலந்து கொள்ளவிடாமல் தடுத்துவிட்டார்' என்று அ.தி.மு.க-வினரும் புகார் கூறுகிறார்கள்.

மதுரன்னா இப்படித்தான் இருக்கணும்!

- கே.கே.மகேஷ்

படங்கள்: பா.காளிமுத்து