Published:Updated:

பாலில் யூரியா கலப்படம்?

தேனி திகில்

##~##
பாலில் யூரியா கலப்படம்?

தாய்ப் பாலாக நினைத்து குழந்தைகளுக்குப் புட்டிப்பால் கொடுப்பவர்கள், மனதைத் திடப்படுத்திக் கொண்டு இந்தக் கட்டுரை​யைப் படியுங்கள்! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பால் பண்ணைகளில், ஒருவித மாவுப் பொருளை தண்ணீரில் கலந்து பால் போல் மாற்றி, ஆவினுக்கு சப்ளை செய்கிறார்கள்’ என்று மாவட்ட எஸ்.பி. பிரவீன்குமார் அபிநபுவுக்கு யாரோ ஒருவர் தகவல் அனுப்பி இருக்கிறார். உடனே, ரகசிய விசாரணைக்கு உத்தரவிட்டார் அவர். ஆண்டிப்பட்டி டி.எஸ்.பி. விஜயபாஸ்கர் தலைமையிலான தனிப்படையினர் ஒரு வாரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கடந்த 23-ம் தேதி இரவு, பாலில் கலப்படம் செய்வதற்காக, பவுடர் மூட்டைகளை ஏற்றி வந்த மினி லாரி மற்றும் பண்ணைகளுக்கு பவுடர் சப்ளை செய்யும் சென்றாயப்பெருமாள், சுல்தான் ஆகியோரைக் கைது செய்தனர். ஆண்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணையைத் தொடங்க, 'ஆளும் கட்சிப் புள்ளிகள் நடத்தும் பால் பண்ணைகளுக்கு இந்தப் பவுடரை சப்ளை செய்வதாக’ கைதானவர்கள் விஷயத்தைக் கக்கியதாக தகவல் கசிந்தது.

பாலில் யூரியா கலப்படம்?

டி.எஸ்.பி. விஜயபாஸ்கரிடம் பேசினோம். ''லாரியில் சிக்கிய பவுடர் கர்நாடக மாநிலத்தில் தயாரிக்கப் பட்டவை. அதில் மால்டெக்ஸ் - மால்​டோடெக்ஸ் என்று எழுதி இருந்தார்கள். 25 கிலோ மூட்டையை 1,250 ரூபாய்க்கு வாங்கி 2,000 ரூபாய்க்கு பால் பண் ணைகளுக்கு சப்ளை செய்கிறார்கள். ஒரு மாதத்துக்கு சுமார் 50 லோடு வரை தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டத்தில் சப்ளை செய்கிறார்கள். ஒரு கிலோ மாவில் 10 லிட்டர் பாலைக் கலந்து 20 லிட்டர் தண்ணீர் ஊற்றி, 30 லிட்டர் பால் தயாரிப்பார்களாம். இந்தக் கலப்பட பாலை கேரளாவைச் சேர்ந்த தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள் மற்றும் மதுரை ஆவினுக்கு அனுப்பி இருக்கிறார்கள். பவுடர் சப்ளை செய்தவர்கள் மீது கலப்படம் செய்தல், மோசடி போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளோம். ஆவின் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளோம். எந்தெந்த தனியார் பால் பண்ணைகளுக்கு இந்தப் பவுடர் சப்ளை செய்யப்பட்டது என்றும் விசாரணை நடத்தி வருகிறோம். கூடிய விரைவில், கலப்படம் செய்த பால் பண்ணைகள் மீதும் வழக்கு பாயும்'' என்றார்.

பாலில் யூரியா கலப்படம்?

அலுவலர்கள் படையுடன் வந்த மதுரை ஆவின் மேலாளர் டாக்டர் மாரிமுத்து, பாலில் கலப்பதற்காக வைத்திருந்த பவுடர் மூட்டைகளை பார்வையிட்டு, அதன் சாம்பிளை எடுத்தார். அவரிடம் பேசினோம். ''தேனி கலெக்டரிடம் பேசிய பிறகே, என்னால் எதையும் சொல்ல முடியும்'' என்றார்.

ஆவின் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ''இந்தப் பவுடர் சோயா பீன்ஸ் மாவில் டெக்ஸ்சோ மோனோ ஹைட்ரேட் கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பவுடரில் தண்ணீர், சிறிதளவு யூரியா கலந்தால் பால் போன்ற நிறமும் சுவையும் இருக்கும். ஆவின் ஆய்வகத்தில் இந்தப் பாலை சோதித்துக் கண்டறிய வசதிகள் இல்லை. மைசூரில் உள்ள மத்திய உணவு சோதனை ஆய்வகத்தில் மட்டுமே இதை கண்டு பிடிக்க முடியும்'' என்று அதிர்ச்சி தகவலைச் சொன் னார்கள்.

அடுத்துப் பேசிய ஒரு சில அதிகாரிகள், ''தனியார் பால் மையங்களில் இருந்து வரும் பாலில் கலப்படம் இருப்பதை அறிந்து, 2010-ல் தேனி மாவட்டத்தில் சோதனை நடத்தினோம். கம்பம், போடி பகுதியில் இயங்கிய நான்கு பால் பண்ணைகளை சீல் வைத் தோம். இப்போது புதிதாகக் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தப்படி, எங்களுக்கு வரும் பாலின்

தரத்தை சோதிக்கலாமே தவிர, தனியார் பால் பண்ணை களில் சோதனை நடத்த முடியாது. சுகாதார ஆய் வாளர்கள், மாவட்ட உணவுக் கட்டுப்பாட்டு அலு வலர்கள் மட்டும்தான் சோதனை நடத்த முடியும். மாவட்ட வாரியாக உணவு சோதனை ஆய்வகங்கள் இல்லாததால், பெயரளவுக்கே கலப்படத் தடுப்பு நட​வடிக்கைகள் எடுக்கப்படுகிறது'' என்று வேத னையுடன் சொன்னார்கள்.

இந்தப் பால் குடித்தால் என்ன ஆகும்?

''கலப்பட பாலை தொடர்ந்து குடித்தால் பல பிரச்னைகள் உண்டாகும். குறிப்பாக, டெக்ஸ்சோ மோனோ ஹைட்ரேட் மற்றும் யூரியா கலந்த பாலைத் தொடர்ந்து குடித்தால் அலர்ஜி, வயிற்றுப் போக்கு, தோல் நோய், குறைந்த ரத்த அழுத்தம், கண் பார்வைக் குறைபாடு, சிறுநீரகப் பாதிப்பு போன்றவை ஏற்படும்'' என்று தேனியைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் ராஜ்குமார் எச்சரிக்கை கொடுக்கிறார்.

சென்றாயப்பெருமாள், சுல்தான் ஆகியோர் கொ​டுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்  போடி,  சிலமலை, பத்திரகாளிபுரம், வருசநாடு, சிங்கராஜபுரம், முத்தாலம்பாறை பகுதிகளில் கலப்படப் பால் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிய வந்திருக்கிறது.

தவறு செய்திருக்கும் ஒவ்வொருவர் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

-  இரா.முத்துநாகு