Published:Updated:

மாஞ்சா நூலில் வருகிறது மரணம்!

சென்னை அலறல்

##~##
மாஞ்சா நூலில் வருகிறது மரணம்!

கோடை விடுமுறை சூடு பிடிக்கும் முன்னரே, உயிர்ப் பலியைத் தொடங்கி விட்டது, மாஞ்சா நூல் காத்தாடி. கடந்த வருடம், புதுப் பேட்டையில் மாஞ்சாநூல் சிக்கி, பெண் குழந்தை ஒன்று இறந்துபோனதும், மாஞ்சா நூல் காத்தாடிக்குத் தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம். இந்தத் தடைக்கு எந்த அர்த்தமும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு வழக்கம்போல் பறந்துகொண்டுதான் இருந்தன காத்தாடிகள். இப்போது, ராஜ்குமார் மரணம் அடையவே... மீண்டும் அதிர்ந்து நிற்கிறது சென்னை! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சென்னை - அரும்பாக்கம் நடுவங்கரை பஜனைக் கோயில் தெருவில் வசித்து வருகிறார் நரேஷ் பிரசாத். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த 30 ஆண்டுகளாக சென்னையில் தங்கி சமையல் தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் ராஜ்குமாருக்கு 24 வயது. 10-ம் வகுப்பு வரை படித்துள்ள ராஜ்குமார், சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் சமையல் வேலை செய்துவந்தார். கடந்த ஞாயிறு அன்று, இரு சக்கர வாகனத்தில் விடுதிக்குச் செல்லும்போது, மதுரவாயல் காவல் நிலையம் அருகே மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கிக்கொள்ள, அந்த இடத்திலேயே உயிர் இழந்துள்ளார் ராஜ்குமார். இவருக்கும், ஜார்கண்ட்டைச் சேர்ந்த அனிதா என்கிற சோனிதேவிக்கும் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. மூன்று வயதில் நித்யம்ராஜ், பிறந்து எட்டு மாதங்களே ஆன பிரின்ஸ்ராஜ் என இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

மாஞ்சா நூலில் வருகிறது மரணம்!
மாஞ்சா நூலில் வருகிறது மரணம்!

நம்மிடம் பேசிய ராஜ்குமாரின் சகோதரர் திலீப்குமார், 'ராஜ்குமாரின் சம்பளத்தை மட்டும் நம்பித்தான் அவன் மனைவியும், இரண்டு குழந்தைங்களும் இருந்தாங்க. ராஜ்குமாரின் மனைவி அனிதா, 2 வரை படிச்சிருக்காங்க. அவங்களுக்கு அரசு வேலை போட்டுக் கொடுத்தா, அனாதைகளா நிக்கிற இரண்டு குழந்தைகளுக்கும் விடிவு காலம் பிறக்கும்'' என்று கோரிக்கை வைத்தார்.

மாஞ்சா நூலில் வருகிறது மரணம்!

ராஜ்குமாரின் மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்த மதுரவாயல் போலீஸார், சுரேஷ் என்பவரைக் கைது செய்துள்ளனர். நெற்குன்றம் - மேட்டுக்குப்பம் ரங்கசாமி நாயுடு தெருவில் ஃபேன்ஸி ஸ்டோர் நடத்திவரும் சுரேஷ், மாஞ்சா தயாரிப்பது குறித்தும், காத்தாடி விடவும்அந்தப் பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு கற்றுக்கொடுப்பவராம். இவர், ஞாயிற்றுக்கிழமை மதியம் நெற்குன்றத்தில் உள்ள காலி மைதானத்தில் காத்தாடிவிட்ட போதுதான் நூல் அறுந்து ராஜ்குமார் பலியானது தெரிந்தது. இதை அடுத்து, சுரேஷை போலீஸார் கைது செய்து, இந்திய தண்டனைச் சட்டம் 304 ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.  

கமிஷனர் திரிபாதி உத்தரவின்பேரில், சென்னை முழுவதும் மாஞ்சா நூல் காத்தாடி விடுபவர்கள், விற்பவர்கள் என்று சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

ராஜ்குமார் மரணம் அடைந்த இரண்டு நாளிலேயே, மாஞ்சா காத்தாடியில் சிக்கிக்கொண்டார் வேலூரைச்

மாஞ்சா நூலில் வருகிறது மரணம்!

சேர்ந்த ராஜா. சென்னை, கே.கே. நகரில் உள்ள தன்னுடைய மாமியார் வீட்டில் தங்கியுள்ள இவர், குடியிருப்புகளுக்கு செக்யூரிட்டிகளை அனுப்பும் கான்ட்ராக்டராகப் பணிபுரிகிறார். கடந்த செவ்வாய் மாலை சொந்த வேலையாக வேலூருக்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார். பூந்தமல்லி நசரத்பேட்டை அருகே சென்றபோது பறந்து வந்த மாஞ்சா காத்தாடி நூல், அவருடைய கழுத்தில் படவே, சட்டென சுதாரித்துக்கொண்டவர் உடனே வாகனத்தை நிறுத்தி நூலை அறுக்க முயன்றிருக்கிறார். அதே சமயம் காற்றாடி விட்டவர்களும் நூலை இழுக்க, இந்தப் போராட்டத்தில் ராஜாவின் வலது கை கட்டைவிரல் துண்டாகிக் கீழே விழுந்துவிட்டது. மேலும், கழுத்திலும் மூன்று அங்குலத்துக்கு நூல் அறுக்க, ரத்தம் பீறிட்டுப் பாய்ந்திருக்கிறது. அந்த வழியாக வாகனத்தில் வந்தவர்கள் ராஜாவை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அந்தக் காத்தாடியை விட்ட நிதிஷ்குமாரைக் கைதுசெய்துள்ளனர் நசரத்பேட்டை போலீஸார்.

'மாஞ்சா நூல் விற்கப்படும் கடைகளை அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் மாஞ்சாவை முழுவதுமாகக் கட்டுப்படுத்த முடியும். முழுமையான தடை விதித்தால்தான், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முடியும்'' என்கிறார் கல்லூரி மாணவர் ராமு.

ஒருவருக்கு விளையாட்டாக இருப்பது, இன்னொருவருக்கு விபரீதமாக மாறுகிறது. இனியாவது அரசு தீவிர நடவடிக்கை எடுத்து, உயிர்களைக் காப்பாற்றட்டும்!

- சி. காவேரி மாணிக்கம், படங்கள்: வீ.நாகமணி