Published:Updated:

நடுக்கடலில் காணாமல் போனாரா கண்ணன்?

மகனைத் தேடும் தந்தை

##~##
நடுக்கடலில் காணாமல் போனாரா கண்ணன்?

''கப்பல் கேப்டனாகி நிறையச் சாதிக்க வேண்டும் என்பதுதான் என் பையனின் கனவு. ஆசைப் படியே நல்லாப்படிச்சு, தமிழ்நாடு அரசுக் கப்பலுக்கு வேலைக்குப் போனான். இப்போ அவன் திடீர்னு காணாமப் போயிட்டான்னு அதிகாரிங்க சொல்றாங்க. எம் புள்ளையை நீங்கதான் கண்டுபிடிச்சுக் கொடுக்கணும்'' - கலங்கிய கண்களுடன் நம் அலுவலகம் வந்தார் கூலித் தொழிலாளியான சரவணன். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''தூத்துக்குடி மாவட்டம் நாராயணபுரம், என் சொந்த ஊர். இப்ப சென்னை தரமணியில் இருக்கேன். எனக்கு பாபு, கண்ணன்னு ரெண்டு பசங்க. இளையவன் கண்ணனுக்கு சின்ன வயசுல இருந்தே கப்பல் கேப்டன் ஆகணும்னு ஆசை. 11-வது படிக்கும்போதே அதுக்காகத் தயார் ஆக ஆரம்பிச்சான். அவன் எதிர்பார்த்த மாதிரியே, சென்னை - உத்தண்டியில் இருக்குற கடல்சார் பல்கலைக்கழகத்துல பி.எஸ்சி. நாட்டிக்கல் சயின்ஸ் ஸீட் கிடைச்சது. என்கிட்ட வசதி இல்லைன்னாலும், சக்திக்கு மீறி கடன் வாங்கி அவனைப் படிக்கவெச்சேன். அவனும் நல்ல மார்க் எடுத்து பாஸ் ஆனான். தமிழக அரசுக்குச் சொந்தமான பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேஷன்ல அவனுக்கு, பயிற்சி கேப்டனா வேலை கிடைச்சது. போன செப்டம்பர் மாசம், எம்.வி. தமிழ் அண்ணா என்ற சரக்குக் கப்பல்ல பயிற்சிக்கு அனுப்புனாங்க. இந்தியாவில் எந்தத் துறைமுகத்துல இறங்கினாலும், 'அப்பா நான் இந்த ஊர்ல இருக்கேன். இத்தனை நாள் இருப்பேன். அடுத்து இந்த ஊருக்குப் போறேன்’னு கரெக்டாத் தகவல் சொல்லிடுவான். வேலை எல்லாம் எப்படிப்பா இருக்குன்னு கேட்டப்ப, எந்தக் கஷ்டமும் இல்ல... நல்லா இருக்கேன்னு சொன்னான்.

நடுக்கடலில் காணாமல் போனாரா கண்ணன்?

பிப்ரவரி 3-ம் தேதி, 'அப்பா நான் கொல்கத்தாவுல இருக்கேன். இங்க இருந்து ஒடிசா போய்ட்டு,

நடுக்கடலில் காணாமல் போனாரா கண்ணன்?

தூத்துக்குடிக்கு வருவேன்’னு சொன்னான். பையன் தூத்துக்குடிக்கு வர்றப்ப, அவனைக் குடும்பத்தோட போய்ப் பார்க்கணும்னு ஆசையாக் காத்திருந்தேன். ஆனா, அடுத்த ரெண்டு நாள்ல அந்தக் கப்பலோட கேப்டன் ரோஜர் எனக்கு போன் பண்ணினார். 'ஒடிசாவுல இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்துல வந்துட்டு இருக்கோம். உங்க பையன் கண்ணனைக் கப்பல்ல காணோம். கடல்ல தவறி விழுந்து இருக்கலாம்னு நினைக்கிறோம். கடலோரக் காவல் படையைத் தேடச் சொல்லி இருக்கோம்’னு சொன்னார். உடனடியா பதறியடிச்சு, மத்தியக் கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், கடலோரக் காவல் படை, கடலோரப் பாதுகாப்பு போலீஸ், சென்னை கமிஷனர் அலுவலகம்னு எல்லா இடத்துலேயும் புகார் கொடுத்தேன். ஆனா, இதுவரைக்கும் யாரும், எந்த நடவடிக்கையும் எடுக்கலை. என் மகனுக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. கடல்ல தவறி விழுற அளவுக்கு அஜாக்கிரதையான பையனும் இல்ல. என் பையன் விவகாரத்துல பூம்புகார் ஷிப்பிங் கம்பெனி அதிகாரிகள் எதையோ மூடி மறைக்கிறாங்க. முதல்வர் அம்மா கவனத்துக்கு இந்த விவகாரம் போனா... நிச்சயம் என் பையன் கிடைப்பான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு'' என்று தழுதழுத்தார்.

சரவணனின் வழக்கறிஞர் ஜோயல், ''கண்ணன் காணாமல்போன சில தினங்களில், சுந்தர்ராஜன் என்ற பெயரில் ஒரு நபர் சரவணனுக்கு அடிக்கடி போன் செய்துள்ளார். 'உங்கள் மகன் என் வசம்தான்

நடுக்கடலில் காணாமல் போனாரா கண்ணன்?

இருக்கிறார். பத்திரமாக உள்ளார். கவலைப்படாதீர்கள். கூடிய சீக்கிரமே அவரைக் கொண்டுவந்து சேர்த்துவிடுகிறேன்’ என்று சொல்லி இருக்கிறார். 'நீங்கள் யார்... எங்கே இருந்து பேசுகிறீர்கள்?’ என்று கேட்டால், பதில் சொல்லாமல் லைனை கட் செய்துவிடுகிறாராம். இப்போது, அந்த எண் உபயோகத்தில் இல்லை. குறிப்பிட்ட அந்த செல்போன் எண்ணையும் காவல்துறை வசம் ஒப்படைத்து உள்ளோம். அவர் யார் என்று கண்டுபிடித்தாலே, கண்ணனைக் கண்டு பிடித்து விடலாம்.

ஒடிசாவில் இருந்து 40 கிலோ மீட் டர் தூரத்தில்தான் இந்த சம்பவம் நடந் துள்ளது. அந்தக் கப்பலின் கேப்டன் ரோஜர் அங்கு புகார் கொடுக்காமல், 1,000 மைலுக்கு அப்பால் உள்ள தூத்துக்குடியில் புகார் கொடுத்ததில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. கப்பலில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களிடமும் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று, விரைவில் வழக்கு தொடுக்க உள்ளேன்'' என்று சீறினார்.

பூம்புகார் கப்பல் நிறுவனத்தின் ஸ்பெஷல் டியூட்டி கேப்டன் தாமஸிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ''கண்ணன் மிகவும் துடிப்பான திறமையான இளைஞன். ஒடிசாவில் இருந்து கப்பல் கிளம்பிய பிறகு கடைசியாக ஜெராக்ஸ் எடுக்கும் பகுதிக்குச் சென்றுள்ளார். அதன் பிறகுதான் காணவில்லை. கண்ணன் கடலில் தவறி விழுந்தாரா என்று எனக்குத் தெரியாது. மும்பையில் உள்ள மெர்கன்டைல் மரைன் டிபார்ட்மென்ட் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். எனவே, இதற்குமேல் நான் எதுவும் சொல்ல முடியாது'' என்றார்.

தரமணி காவல்நிலைய ஆய்வாளர் கிருஷ்ணாவிடம் பேசினோம். ''எங்களுக்கு பூம் புகார் கப்பல் நிறுவனத்திடம் இருந்து போதிய ஒத்துழைப்பு இல்லை என்பதால், கண்ணனைக் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இப்போது ஒடிசா காவல்துறை வட்டாரத்தின் உதவியை நாடியுள்ளோம். விரைவில் முழுத் தகவலும் கிடைத்து விடும்'' என்றார்.

இனியாவது அரசு தீவிரம் காட்டி, ஓர் ஏழைத் தந்தையின் கண்ணீரைத் துடைக்கட்டும்.

- தி.கோபிவிஜய், படம்: ச.இரா.ஸ்ரீதர்

நடுக்கடலில் காணாமல் போனாரா கண்ணன்?