Published:Updated:

முதலில் மெமோ.. அப்புறம் சஸ்பெண்ட்!

திருவண்ணாமலையில் ஜூ.வி. - கலெக்டர் ஆக்ஷன்

##~##
முதலில் மெமோ.. அப்புறம் சஸ்பெண்ட்!

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சுகாதாரச் சீர்கேடு, லஞ்சம் என்று நிறைய நிறையப் புகார்கள். உடனே நடவடிக்கை எடுங்கள்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) ஒரு குரல். இதை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவிடம் கொண்டுசென்றோம். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''நாம் திடீரென ஒரு நாள் மருத்துவமனையை விசிட் செய்து இவை அனைத்தும் உண்மையா என்று பார்க்கலாம்'' என்றவர், கடந்த 3-ம் தேதி காலை 7 மணி என்று நேரமும் குறித்தார்.

நாம் செல்லும் முன்னரே, ஆட்சியர் வரும் விஷயம் எப்படியோ தெரிந்து எல்லா வார்டுகளையும் சுத்தம் செய்து, நோயாளிகளின் படுக்கை விரிப்புகளை மாற்றி மருத்துவமனையை பளிச் என்று அவசரம் அவசரமாக மாற்றிக்கொண்டு இருந்தனர். ஆனால், தெருநாய்கள் உள்ளே திரிவதை ஏனோ அவர்களால் தடுக்க முடியவில்லை. புற நோயாளிகள் பிரிவு அருகே சென்றபோது, அப்போதுதான் ஓ.பி. ஸீட் கொடுக்கும் ஊழியர்கள் அவசர அவசரமாக வந்து பணியைத் தொடங்கி இருந்தனர். அங்கே டாக்டரின் வருகைக்காகக் காத்திருந்த ரேவதி என்ற பெண் ணிடம் பேசினோம், ''நான் நேத்து வெளியே ஒரு டாக்டர்கிட்ட பல் பிடுங்கினேன். ஆனா, ரத்தம் இன்னும் நிக்காம வந்துக்கிட்டே இருக்கு. இங்கே வந்தா பல்டாக்டர் இன்னும் வரலைன்னு சொல்றாங்க. ரத்தம் நிக்க ஏதாவது மருந்து கொடுங்கன்னு கேட்டாலும் கண்டுக்க மாட் டேங்குறாங்க. வலி தாங்க முடியலை. ரத்தம் வந்துக்கிட்டே இருக்கறதால, எனக்கு மயக்கமா வருது. நான் என்ன செய்றதுன்னே தெரியலை'' என்று புலம்பியபடியே வீட்டுக்குக் கிளம்பினார்.

முதலில் மெமோ.. அப்புறம் சஸ்பெண்ட்!

கலெக்டரின் வருகைக்காகக் காத்திருந்த மருத்துவ அலுவலர் கணே சனிடம் இந்த விஷயத்தைச் சொன்னதும் அவரே ஓடிப்போய் வேறு ஒரு ஓ.பி. ஸீட் வாங்கி, ரேவதி சிகிச்சை பெற ஏற்பாடு செய்தார்.

இதற்குள் ஆட்சியர் வந்து சேர, அவரைப் பின்தொடர்ந்தோம். மருத்துவமனையில் ஸ்கேன் பிரிவு, எக்ஸ்ரே பிரிவு, ரத்த வங்கி, பிரசவ வார்டு, அறுவை சிகிச்சைப் பிரிவு என்று ஒவ்வோர் அறையாகப் பார்வையிட்டு, அங்கிருந்த நோயாளிகளிடம் குறைகள் கேட்டுக்கொண்டே வந்தார். மாத்திரைகள் கொடுக்கும் அறைக்குச் சென்று விசாரித்தார். அப்போது, அங்கே ஒரு ஊழியர் நோயாளியிடம் காட்டமாகப் பேசுவதைக் கவனித்தவர், ''முதலில் நோயாளிகளிடம் கனிவாகப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள்'' என்று அறிவுறுத்திவிட்டு அடுத்த அறைக்குச் சென்றார்.

முதலில் மெமோ.. அப்புறம் சஸ்பெண்ட்!

வெளியே, சமுத்திரம் காலனி யைச் சேர்ந்த பாலு என்பவர் வாகனங்களுக்குப் பணம் வசூலிப் பதைப் பார்த்த ஆட்சியர், ''நீ யார்? உன்னை யார் பணம் வசூலிக்க சொன்னது?'' என்று கேட்டார்.

உடனே அவர், ''எனக்கு எதுவும் தெரியாது. ஆளும் கட்சிக்காரர் ஒருவர் சொல்லித்தான் வசூல் செய்கிறேன்'' என்றார். அங்கிருந்த காவல் துறையினரிடம் பணம் வசூலித்தவரைப் பிடித்துக் கொடுத்து, ''இவரை ரிமாண்ட் செய்யுங்கள். இவரை யார் வசூலிக்கச் சொன்னது என்பதையும் விசாரித்து அவர் மீதும் நடவடிக்கை எடுங்கள்'' என்றார்.

அடுத்து, உள்நோயாளிகள் ஆண்கள் பிரிவுக்குச் சென்றவர், படுக்கை விரிப்புகள் ரத்தக் கறையோடு கிடப்பதைப் பார்த்து அதிர்ந்தார். ''தினமும் சுத்தம் செய்வது இல்லையா? இதைப் பார்த்தால் நான்கு நாட்களாகச் சுத்தம் செய்யாத மாதிரி இருக்கிறதே?'' என்று சுத்தம் செய்யும் மேரி என்ற பணியாளருக்கு டோஸ் விட்டதுடன், மெமோ கொடுக்கவும் உத்தரவிட்டு அடுத்த அறைக்குச் சென்றார்.

அங்கு ஒரு நோயாளி, ஆட்சியரைப் பார்த்ததும்... ''குளுகோஸ் ஏற்றுவதற்குக் காசு கேக்கிறாங்க'' என்றார். பணம் கேட்டது யார் என்றதும் திரும்பவும் அந்த மேரியைக் கை காட்ட கோபத்தின் உச்சிக்கே சென்ற ஆட்சியர், அவரை சஸ்பெண்ட் செய்ய  உத்தரவு போட்டார்.

''இங்கே நோயாளிகளுக்கு பால், ரொட்டி வழங்குகிறார்கள். ஆனால், நோயாளிகளுடன் இருப்பவர்களுக்குச் சரியான உணவு கிடைப்பது இல்லை. வெளியாட்கள்தான் இங்கே வந்து விற்பனை செய்கிறார்கள். இங்கேயே ஒரு கேன்டீன் வசதி செய்து கொடுத்தால், எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்'' என்றோம்.

''ஒரு கேன்டீன் இருந்தால் நல்லது தான். அதற்கு டெண்டர் விட்டு ஏற்பாடு செய்யலாம்'' என்றவர் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் மருத்துவமனையை சுற்றிப் பார்த்து பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக் கைகள் எடுத்தார்.

''இன்னும் சின்னச் சின்ன குறைபாடுகளும் தேவைகளும் இருக்கின்றன. அதை உடனே நிவர்த்தி செய்யச் சொல்லி இருக்கிறேன். மாவட்டத்தில் உள்ள எல்லா மருத்துவமனைகளுக்கும் திடீர் விசிட் அடிக்க இருக்கிறேன். லஞ்சத்தை ஒழிக்க எல்லா அறைகளிலும் புகார் பெட்டியும் எனது செல்போன் எண் போட்ட போர்டும் வைக்கச் சொல்லி இருக்கிறேன். மீறி தவறு நடந்தால், கடுமையான நடவடிக்கை இருக்கும்'' என்று சொல்லிக் கிளம்பினார்.

இனியாவது அனைவருக்கும் மருத்துவ சேவை நல்ல முறையில் கிடைக்கட்டும்.

- கோ.செந்தில்குமார்

படங்கள்: பா.கந்தகுமார்