Published:Updated:

'கதவை சாத்திக்கிட்டு என்ன பண்ணுவாங்க?'

சேலத்தைக் கலக்கும் பன்முக கலெக்டர்

##~##
'கதவை சாத்திக்கிட்டு என்ன பண்ணுவாங்க?'

''வடிவேலு கணக்காப் பேசிச் சிரிக்கவைக்கிறார். அதே நேரம், தப்பு செய்ற அதிகாரிகளையும், பொதுமக்களை மதிக்காத அரசு ஊழியர்களையும் விஜயகாந்த் கணக்கா விளாசித் தள்றார்...'' - சேலம் மாவட்ட டீக் கடைகளில் நான்கு பேர் ஒன்றாகக் கூடினால் இதுதான் பேச்சு. சேலம் கலெக்டர் மகரபூஷணத்துக்குத்தான் மக்கள் மத்தியில் இப்படி ஒரு ஹீரோ இமேஜ்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கலகல 1:  சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம். ஆத்தூரில் இருந்து வந்திருந்த விவசாயி ஒருவர் எழுந்து மைக் பிடித்தார். ''ஐயா வணக்கம். நான் காலகாலமா விவசாயம் செஞ்சுட்டு இருக்கேன். என்னோட குலத்தொழிலே விவசாயம்தானுங்க. ஆனா, எனக்கு இன்னைக்கு வரை உழவர் அட்டை கொடுக்கலை. நான் பல தடவை கேட்டுப் பார்த்துட்டேன். எனக்கு உழவர் அட்டை வருமா வராதா?'' என்று கடுப்போடு கேட்டார்.

அதிகாரிகள் பேந்தப் பேந்த முழிக்க, கலெக்டர் மகரபூஷணம், ''உழவர் அட்டைதானே? வரும்ம்ம்ம்...

'கதவை சாத்திக்கிட்டு என்ன பண்ணுவாங்க?'

ஆனா வராது..!'' என்று ஜாலியாகச் சொல்லவே, கேள்வி கேட்ட விவசாயி உட்பட அத்தனை பேரும்  சிரித்து விட்டார்கள். ஆனால், அடுத்த கணம் சின்சியராக மாறிய கலெக்டர், ''ஏன் இன்னும் உழவர் அட்டை வழங்காம இருக்கீங்க..?'' என்று வேளாண்மைத் துறை அதிகாரியைப் பார்த்து கேட்டார். வேளாண்மைத் துறை அதிகாரி திருதிருவென முழித்தார். ''இன்னைக்கு சாயந்திரம் அஞ்சு மணிக்குள்ள இவருக்கு உழவர் அடையாள அட்டை கொடுக்கணும். இன்றைக்கு அதை எடுத்துக்கிட்டுத்தான் இவரு ஊருக்குப் போகணும். சாயந்திரத்துக்குள்ள உங்களுக்கு அடையாள அட்டை கொடுக்கலைன்னா, எனக்குப் போன் பண்ணுங்க.. அதுக்குப் பிறகு நான் பார்த்துக்குறேன்'' என்று சொன்னார் கறாராக. அந்த விவசாயி முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.

கலகல 2: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பி.காம். (சி.ஏ.), பி.ஏ., ஆங்கிலம் வித் கம்யூட்டர் கோர்ஸ் படித்தவர்கள், ஆசிரியர் பணிக்குத் தகுதி இல்லாதவர்கள் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்தது. அந்த கோர்ஸ் படித்த மாணவ, மாணவிகள் சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் மறியலில் அமர்ந்தார்கள். போலீஸார் எவ்வளவோ பேசிப் பார்த்தும் மாணவ, மாணவியர் சாலை மறியலை கைவிடவில்லை.

கலெக்டருக்குத் தகவல் போகவே ஸ்பாட்டுக்கு வந்து சேர்ந்தார். நேராக மாணவிகளிடம் போனவர், ''காலையில சாப்பிட்டீங்களா? அடிக்கிற வெயில்ல இப்படியா ரோட்டுல வந்து உட்காருவது? பாருங்க எவ்வளவு பேரு உங்களை வேடிக்கைப் பார்த்துட்டு இருக்காங்க. நம்ம போராட்டம் மத்தவங்களைப் பாதிக்கக் கூடாது. உங்க கோரிக்கையை மனுவா எழுதிக் கொடுங்க. நிச்சயமா நான் பரிசீலனை செய்றேன்...'' என்று நிதானமாகப் பேசினார். கலெக்டர் சொன்னதும், சீரியஸாகத் தொடங்கிய மறியல் போராட்டம், சிரித்தபடியே கைவிடப்பட்டது.

கலகல 3: சில தினங்களுக்கு முன், கலெக்டரின் செல்போன் அலறியிருக்கிறது. அதை எடுத்துப் பேசியவர், ''விஷயத்தை எல்லாம் சொன்னியா? சொல்லியுமா உள்ளே விடல. யாரு அவன்? அங்கே வேலை பார்க்குறானா? கலெக்டர் பேசுறேன்னு அவன்கிட்ட போனைக் கொடு...'' என்று டென்ஷன் ஆனார். சற்று நேரத்துக்குப் பிறகு, ''சரி.. அவன் வாங்கலைன்னா பரவாயில்ல. நீ நேரா உள்ளே போய் தாசில்தார்கிட்ட போனைக் கொடு...'' என்று சொன்னார்.

''என்னது கதவு சாத்தி இருக்கா... டவாலியும் விட மாட்டேன்னு சொல்றானா?'' என்று டென்ஷன் ஆனவர், ''நீ லைன்லயே இரு...'' என்று சொல்லிவிட்டு, இன்னொரு போனை எடுத்து, ''மேட்டூர் தாசில்தாரை உடனே என் லைனுக்கு வரச் சொல்லுங்க..'' என்று உத்தரவு போட்டிருக்கிறார். அடுத்த நிமிடம் மேட்டூர் தாசில்தாரிடம் இருந்து போன். ''நான் கலெக்டர் பேசுறேன். கதவை சாத்திவெச்சுக்கிட்டு நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கே? வெளியே என்ன நடக்குதுன்னு உனக்குத் தெரியாதா? உன் ரூமுக்கு வெளியே ஒரு பையன் நிற்கிறான். அவனை உள்ளே கூப்பிட்டு அவன் கேட்கிற இடத்துல கையெழுத்துப் போட்டுக் கொடு. அந்தப் பையனை உள்ளே விட மாட்டேன்னு சொன்ன ரெண்டு பேரையும் சஸ்பெண்ட் பண்ணிட்டு என்னை வந்து பாரு...'' என்று சொல்லிவிட்டு போனை வைத்திருக்கிறார்.

நடந்த விஷயத்தை அவரே சொல்கிறார்... ''ஆறுமுகம்னு இளைஞர்  ராணுவத்துக்குத் தேர்வாகி இருக்கார். நாளைக்கு டியூட்டியில ஜாயின் பண்ணனும். அதற்கான குடியிருப்புச் சான்றிதழும், நன்னடத்தைச் சான்றிதழும் வாங்க மேட்டூர் தாசில்தார் ஆபீஸுக்குப் போயிருக்கார். தாலுக்கா ஆபீஸுக்குள்ள விடாம அவரை டார்ச்சர் பண்ணி இருக்காங்க. மக்களுக்கு சேவை பண்ணத்தானே இப்படி ஊருக்கு ஒருத்தரை அரசாங்கத்துல உட்கார வெச்சு இருக்காங்க. கதவைச் சாத்திக்கிட்டு என்ன பண்ணுவாங்களோ தெரியலை. இவங்களை எல்லாம் சும்மா விடக் கூடாதுங்க'' என்று சொன்னார்.

ஜமாய்ங்க சாரே!

- வீ.கே.ரமேஷ், படம்: எம்.விஜயகுமார்