Published:Updated:

மீண்டும் ரத்தம் தெறிக்கும் அமெரிக்கன் கல்லூரி!

மதுரை பரபர

##~##
மீண்டும் ரத்தம் தெறிக்கும் அமெரிக்கன் கல்லூரி!

மெரிக்கன் கல்லூரி என்றாலே அடிதடி என்ற அளவுக்குக் கடந்த வருடம் ஏகப்பட்ட களேபரம். இப்போதும் அதுவே தொடர்கிறது! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவரும் எம்.ஏ. மாணவர் செந்திலைச் சந்தித்தோம். 'காலேஜ்ல நடக்கிற எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம், இங்கே படிக்கிற ஒரு சில ரௌடிங்கதான் சார். ஒரு மாசத்துக்கு முன்னாடி என்னை ராகிங் பண்ணினாங்க. நான் எதிர்த்துக் கேட்டேன். உடனே ஒருத்தன் ஓங்கி என்னை மூஞ்சியில அடிச்சான். இன்னும் மூணு பேர் சேர்ந்து என்னைக் கீழே தள்ளி அடிக்கப் பார்த்தாங்க. நல்லவேளை, ஒரு பேராசிரியர் வந்து விலக்கிவிட்டார். அவங்க ரௌடிங்கன்னு தெரிஞ்சதும், விலகிப் போக ஆரம்பிச்சேன். கடந்த 30-ம் தேதி, கேன்டீன்ல டீ ஆர்டர் பண்ணுனேன். அப்போ, ஜேம்ஸ், பழனிவேல்ராஜன், ராஜா, குகன், கார்த்திக்னு அஞ்சு பேரும் என் பணத்தைப் பறிச்சிட்டாங்க. அவங்களுக்கு வடை ஆர்டர் கொடுத்தாங்க. நான் திட்டியதும், எல்லோருமா சேர்ந்து என்னை அடிச்சாங்க. முகம், உச்சந்தலை, பின்னந்தலைன்னு மூணு இடத்துல ரத்தம் வந்துடுச்சு. ஒருத்தன் சோடா பாட்டிலை உடைச்சி, என் கையைக் கீறிட்டான். மொத்தம் ஏழு தையல், நாலைஞ்சு கட்டோட தல்லாகுளம் போலீஸ்ல புகார் கொடுத்தேன். இது வரைக்கும் யாரையும் போலீஸ் கைது பண்ணலை' என்றார் வருத்தத்தோடு.

மீண்டும் ரத்தம் தெறிக்கும் அமெரிக்கன் கல்லூரி!
மீண்டும் ரத்தம் தெறிக்கும் அமெரிக்கன் கல்லூரி!

வணிகவியல் துறைத் தலைவர் டேவிட் அமிர்தராஜன், தத்துவத் துறை பேராசிரியர் அருளரசு இஸ்ரேல் ஆகியோரின் தூண்டுதலால், முனியசாமி என்ற மாணவர் கத்தியால் குத்தப்பட்டார் என்று ஒரு செய்தி சொல்லப்படுகிறது. அதை விசாரித்தோம். அது  கல்லூரி முதல்வரால் நடத்தப்பட்ட திட்டமிட்ட நாடகம் என்று ஒரு குழு சொல்கிறது. 'ஏற்கெனவே முதல்வர் பதவிக்கு முழு அங்கீகாரம் கிடைக்காமல் தவமணி கிறிஸ்டோபர் தவிக்கும் வேளையில், அவர் தேர்வு செய்யப்பட்டதே தவறு என்று, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்து இருக்கிறார் பேராசிரியர் டேவிட் அமிர்தராஜன். அதில், 'முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் 2 தேர்வில் கணிதப் பாடத்தில் தோற்றவர். பி.எஸ்சி

மீண்டும் ரத்தம் தெறிக்கும் அமெரிக்கன் கல்லூரி!

டிகிரியும் அரியர் வைத்துத்தான் பாஸ் ஆனார். எம்.எஸ்ஸி-யில் ஏழு முறை அட்டெம்ட். அவர் பி.எச்டி. பட்டம் பெற்றதும் குறுக்கு வழியில்தான். யு.ஜி.சி. வழிகாட்டுதல், கல்லூரி சட்ட திட்டம் இரண்டுக்கும் மாறாக குறுக்கு வழியில் முதல்வர் ஆக்கப்பட்டு இருக்கிறார்’ என்று கூறப்பட்டு இருந்ததால், கோபமடைந்த தவமணி இந்த நாடகத்தை நடத்தி இருக்கிறார். கத்திக்குத்து வாங்கியதாக புகார் கொடுத்த மாணவர், முனியசாமிக்கு 26 வயது. அவரை மைக்ரோ பயாலஜி முதல் ஆண்டு மாணவராகச் சேர்த்ததே, இந்த மாதிரி வேலைக்குத்தான்'' என்று சொல்கிறார்கள்.

தமிழ்த் துறையைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தேடிவந்து பேசினார்கள். 'கல்லூரி மீதுள்ள அக்கறையில்தான் பேராசிரியர்களோடு சேர்ந்து நாங்களும் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராடினோம். இந்தப் போராட்டத்தால், நிர்வாகப் பிரிவு ஊழியர்கள் 82 பேர் வேலை இழந்துவிட்டனர். 10 மாதங்களாகப் போராட்டத்தை முன்னின்று நடத்திய பேராசிரியர்கள், சம்பளத்தை மொத்தமாகப் பெற்றதும் எங்களை 'அம்போ’வென விட்டுவிட்டு வகுப்புக்குப் போய்விட்டார்கள்.

போராடிய மாணவர்கள் என்கிற ஒரே காரணத்தால் எங்களைத் தீண்டத்தகாதவர்கள் போல் நடத்துகிறார்கள். பழிவாங்கும் நடவடிக்கைகளும் தொடர்கின்றன. கடைசி வரை போராடிய 188 மாணவர்களால் தேர்வு எழுத முடியவில்லை. எங்களுக்குத் தனியாக தேர்வு நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையைப் புறக்கணித்துவிட்டனர். எங்களுக்கு வகுப்புகள் முடிய இன்னும் 10 நாட்கள்தான்

மீண்டும் ரத்தம் தெறிக்கும் அமெரிக்கன் கல்லூரி!

இருக்கின்றன. நாங்கள் எப்படி டிகிரி முடிக்கப்போகிறோம் என்றே தெரியவில்லை. இந்த லட்சணத்தில் போராட்டக் காலத்தில் போடப்பட்ட பொய் வழக்குகளுக்காக கோர்ட்டிலும் ஆஜராக வேண்டியது இருக்கிறது' என்று கண் கலங்கினர்.

மொத்தப் புகார்களையும் சுமந்துகொண்டு முதல்வர் தவமணி கிறிஸ்டோபரிடம் போனோம். 'முதல்வர் பதவிக்கான நேர்காணலில் கலந்துகொண்ட எட்டுப் பேராசிரியர்களில், முதுகலைப் படிப்பில் மிக அதிகமான (67.8) மதிப்பெண் சதவிகிதம் பெற்றிருந்தவன் நான்தான். முதல்வர் பதவிக்கு பி.ஜி. மதிப்பெண் சதவிகிதம்தான் கேட்கிறார்களே ஒழிய... எல்.கே.ஜி., யு.கே.ஜி. மதிப்பெண்ணையோ, அங்கே ஃபெயில் ஆனதையோ யாரும் கேட்பது இல்லை. என்னோடு போட்டியிட்டுத் தோற்றவர்கள் எல்லாம் என்னைவிடத் தகுதி குறைந்தவர்கள்தான் என்பதை ஆதாரத்தோடு கோர்ட்டில் நிரூபிப்பேன்.

கல்லூரி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரைப்படி, செந்திலைத் தாக்கிய ஐந்து மாணவர்களையும் டிஸ்மிஸ் செய்து உத்தரவு இட்டிருக்கிறேன். நாங்கள் தேர்வு நடத்தியபோது, 188 மாணவர்களும் தேர்வு எழுதவில்லை. இப்போதும் அவர்கள் என்னிடம் வந்து குறைகளைச் சொன்னால், ஓரிரு நாட்களில் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்துதரத் தயாராக இருக்கிறேன். அதே போல, வேலைஇழந்த ஆசிரியர்கள், பணியாளர்கள் எங்களை அணுகினால்... தகுதியின் அடிப்படையில் மீண்டும் வேலை வழங்கப்படும்'' என்றார்.

மதுரையில் உள்ள கல்லூரிக் கல்வித் துணை இயக்குனர் அலுவலகத்தில் பேசியபோது, 'அமெரிக்கன் கல்லூரி முதல்வராக தவமணி கிறிஸ்டோபர் இருந்தாலும், பேராசிரியர்களுக்குச் சம்பளம் போடுவது, விடுமுறை கொடுப்பது போன்ற பணிகளைச் செய்வது எங்களின் துணை இயக்குனர்தான். கோர்ட்டில் நிறைய வழக்குகள் இருப்பதால், அதில் ஒரு தீர்வு கிட்டும் வரை தடாலடியாக எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது தமிழக அரசு' என்றார்கள்.

அடிதடிக் கல்லூரி என்ற பெயர் எப்பத்தான் மாறுமோ?

- கே.கே.மகேஷ்

படங்கள்: பா.காளிமுத்து