பிரீமியம் ஸ்டோரி
##~##
உயிர் குடித்ததா டி.வி.?

'அப்பா வேணுமா இல்லைன்னா டி.வி. வேணு மா?’ என்று கேட்டால் இன்றைய சிறுசுகள் கண்டிப்பாக டி.வி-யைத்தான் தேர்வு செய்வார்கள். சிறியவர்கள் மட்டுமல்ல, வேலை முடித்து வீட்டுக்கு வந்து 'ஸ்ஸப்பா..’ என்று சாயும் பெரியவர்களையும் காமெடியைக் காட்டி சிரிக்க வைப்பதும், உலகத்து செய்திகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்துவதும் டி.வி-தான்.

 அந்த டி.வி-யே வெடித்துச் சிதறி எமனாக மாறும் என்றால்..? தலைநகரிலேயே நடந்துள்ளது இந்தச் சம்பவம்!

சென்னை, கொண்டித்தோப்பு ஏரியாவைச் சேர்ந் தவர் நாகலிங்கம். தனியார் நிறுவன மேலாளர். மனைவி உஷாவோடு அபார்ட்மென்ட் ஒன்றில் வசித்தார். அவரைத்தான் பலி வாங்கிவிட்டது டி.வி.

கணவரின் போட்டோவைப் பார்த்து அழுத படி இருந்த உஷாவுக்கு ஆறுதல் சொல்லி பேச்சுக் கொடுத்தோம். ''எங்களுக்குக் கல்யாணமாகி 20 வருஷங்களாச்சு. எங்களுக்குக் குழந்தைங்க கிடையாது.

உயிர் குடித்ததா டி.வி.?

என்னை ஒரு குழந்தை மாதிரிதான் அவர் இத்தனை நாளும் பார்த்துகிட்டாருங்க. போன புதன்கிழமை ஆபீஸ்ல இருந்து மதியமே வந்துட்டார். ரொம்ப டயர்டா இருக்குன்னு படுத்துட்டு இருந்தார். எங்க ஏரியாவுல 4 மணியில இருந்து 6 மணி வரைக்கும் கரன்ட் கட். அன்னைக்கும் அப்படித்தான் கரன்ட் இல்லை. 'நீங்க தூங்குங்க.. நான் கோயிலுக்குப் போயிட்டு வரேன்’னு 4.30 மணிக்கு நான் கிள ம்பிட்டேன். 'பார்த்துப் பத்திரமா போயிட்டு வாம்மா’னு சொல்லிட்டு அவருதான் எழுந்துவந்து கதவைப் பூட்டிக்கிட்டார்.

அதுக்குப் பிறகு என்ன நடந்துச்சுன்னு தெரியலை. நான் கோயிலுக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, தெரு முழுக்கக் கூட்டமா இருந் துச்சு. பதறி அடிச்சிட்டு போய்ப் பார்த்தா எங்க வீட்டு டி.வி. வெடிச்சி அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரைத் தூக்கி மடியில வச்சி, எழுப்பிப் பார்த்தேன். எந்த அசைவும் இல்ல. வண்டி பிடிச்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனோம். டாக்டருங்க பார்த்துட்டு, இறந்துட்டாருன்னு சொல்லிட்டாங்க'' என்று பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தார்.

நாகலிங்கத்தின் மாமா சங்கர் நம்மிடம், ''அந்த டி.வி. ஒன்பது வருஷங்களுக்கு முன் வாங்கினதுங்க.

உயிர் குடித்ததா டி.வி.?

போன வாரம்தான்  இன்வெர்ட்டர் போட்டிருக்காங்க. அதனால, இன்வெர்ட்டர்ல டி.வி. பார்க்கலாம்னு நினைச்சிருப்பார் போல. அது, லோடு தாங்க முடியாம வெடிச்சிருச்சுன்னு சொல்றாங்க. டி.வி-க்கு மேல நிறைய பொம்மைகள் வச்சிருந்தாங்க. அதனால வெடிச்சதும் ஈஸியா தீ பரவிடுச்சி. 'நான் வாங்கிய முதல் டி.வி., ரொம்பவும் ராசியான டி.வி.’னு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பார். அந்த டி.வி-யே அவரோட உசுருக்கு எமனாகிடுச்சி'' என்று வேதனைப்பட்டார்.

இதுதொடர்பாக, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவரும் ஏழுகிணறு காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரத்திடம் பேசினோம். ''இன்வெர்ட்டருக்கு அதிக லோடு கொடுத்த காரணத் தால்தான் டி.வி. வெடிச்சதுன்னு எங்க முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கு. இன்வெர்ட்டர்ல இருந்து ஏ.சி-க்கு போகும் லைனுக்கும் கனெக்ஷன் கொடுத்திருக்காங்க. இது எல்லாமா சேர்ந்து ஓவர்லோடு ஆகி இருக்கலாம். தொடர்ந்து விசாரிச்சிக்கிட்டு இருக்கோம்'' என்று சொன்னார்.

டி.வி. வெடிக்க என்ன காரணம்? டி.வி. மெக் கானிக் முருகனிடம் கேட் டோம். ''பொதுவாக டி.வி.

உயிர் குடித்ததா டி.வி.?

வெடிக்க வாய்ப்பு குறைவு. ஏனென்றால், இப்போது தயாரிக்கப்படும் டி.வி-கள் அனைத்துமே, அதிநவீன தொழில்நுட்பத்தோடுதான் தயாரிக்கப்படுகிறது. இது, பழைய டி.வி. என் பதால் அதிகமாக  மின்சாரம் பாய்ந்து வெடித் திருக்கலாம்.'' என்றார்.

டி.வி. வெடிக்க இன்வெர்ட்டர் காரணமாக இருக்குமா? சென்னையைச் சேர்ந்த இன்வெர்ட்டர் மெக்கானிக் கணேஷ்குமாரிடம் பேசினோம். ''விலை குறைவாக கிடைக்கிறது என்று, தரமில்லாத இன் வெர்ட்டரைப் பயன் படுத்தினால், இதுபோன்ற பிரச்னை ஏற்படலாம். டி.வி-க்குத் தேவையான மின் சாரத்தைவிட அதிகமாக, அந்த இன்வெர்ட்டரில் இருந்து பாய்ந்திருக்க வேண்டும். அதனால், டி.வி. வெடித்திருக்கலாம். மிகவும் அத்தியாவசியமாகத் தேவைப் படும் ஃபேன், லைட்டுக்கு மட்டுமே இன்வெர்ட்டரில் இருந்து கனெக்ஷன் கொடுக்க வேண்டும். ஒட்டு மொத்தமாக வீட்டில் உள்ள எல்லா லைன்களுக்கும் இன்வெர்ட்டரில் இருந்து இணைப்பு கொடுத்தால், ஓவர்லோடு ஏற்பட்டு இன் வெர்ட்டர் ஆஃப் ஆகி விடும். டி.வி., பிரிட்ஜுக்கு இன்வெர்ட்டர் இணைப்பு அவசியம் தேவை என்று நினைத்தால் அதற்கு தகுந்த அளவு கெப்பாசிட்டி உள்ள இன்வெர்ட்டரைத்தான் பொருத்த வேண்டும்'' என்று எச்சரித்தார்.

இன்று, எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்களின் விளையாட்டுப் பிள்ளையாகத்தான் மனிதன் மாறிவிட்டான். அவற்றை முறையாகப் பயன்படுத்தினால் இன்பமும், தவறினால் துன்பமும் கொடுக்கும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.

- சா.வடிவரசு

படங்கள்: அ.ரஞ்சித்                                                             

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு