Published:Updated:

அமைச்சர் வந்தும் பிரச்னை தீரவில்லை...

போராட்டத்தில் சாத்தனூர் அணை மீனவர்கள்

பிரீமியம் ஸ்டோரி
##~##
அமைச்சர் வந்தும் பிரச்னை தீரவில்லை...

'திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் உள்ள மீன் வளர்ச்சிக் கழகத்தில் ஏராளமான முறைகேடுகள் நடக்கின்றன என்று, தமிழக அரசுக்குப் புகார் மேல் புகார் போய்க்கொண்டே இருந்தன. அதனால், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால் திடீர் விசிட் அடித்து, ஆய்வு நடத்தி இருக்கிறார்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-66808002) தகவல் வந்தது. 

தமிழ்நாடு மீனவர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் அண்ணாதுரை, பர்வத ராஜகுல மீனவர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணி இருவரும் நம்மிடம் இதுபற்றிப் பேசினார்கள். ''மீனவர்களான நாங்கள் காலம் காலமாக சாத்தனூர் அணையில் மீன் பிடித்து, மீன் வளர்ச்சிக் கழகத்திடம் கொடுத்து வருகிறோம். ஆனால், நாங்கள் பிடித்துத் தரும் மீன்களுக்குச் சரியான கூலி கொடுப்பது இல்லை. ஒரு கிலோ மீன் பிடித்துக் கொடுத்தால் ஐந்து அல்லது 10 ரூபாய்தான் கொடுப்பார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்கள் நடத்தினோம். அதையடுத்து, இப்போது கிலோவுக்கு 20 ரூபாய் என்று உயர்த்தி இருக்கிறார்கள். ஆனால், இந்தக் கூலியும் போதாது. தினமும் நாங்கள் பிடித்து வரும் மீன்களுக்கான கூலியைக் கணக்கிட்டு, அடுத்த மாதத் துவக்கத்தில் தரவேண்டும். ஒன்றாம் தேதி தரவேண்டிய கூலியை, 10-ம் தேதிக்குப் பிறகுதான் கொடுக்கிறார்கள். நாங்கள் பிடிக்கும் மீன்களில் மூன்றில் ஒரு பங்கை எங் களுக்குத் தர வேண்டும் என்று ஆரம்ப த்தில் பேசப்பட்டது. அதையும் தர மறுக்கிறார்கள். இத்தனைக்கும் மீன் பிடிக்க பயன்படுத்தும் வலை, போட் எல்லாம் எங்களுடையதுதான்.

அமைச்சர் வந்தும் பிரச்னை தீரவில்லை...
அமைச்சர் வந்தும் பிரச்னை தீரவில்லை...

இரண்டு வருடங்களுக்கு முன், அணையில் மீன் பிடிக்க டெண்டர் விடுவதற்கான முயற்சிகளில் மீன் வளர்ச்சிக் கழகம் இறங்கியது. 'எங்களுக்குச் சரியான கூலிதான் கொடுப்பதில்லை. அந்த டெண்டரையாவது எங்களுக்குக் கொடுங்கள்’ என்று கேட்டோம். அதையும் தர மறுத்தார்கள். அதனால், நாங்கள் கோர்ட்டுக்குச் சென்றோம். அங்கே மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காதவாறு டெண்டர்விட முயற்சி எடுப்பதாகச் சொன்னார்கள். அரசு நிர்ணயிக்கும் தொகையைவிட 10 சதவிகிதம் அதிகம் தருகிறோம்; எங்களுக்கு டெண்டர் கொடுங்கள் என்று கேட்டோம். அதையும் கண்டுகொள்ளவில்லை. மீன் வளர்ச்சிக் கழக மேலாளர் சாமிநாதனே, பினாமி பெயரில் அந்த டெண்டரை எடுக்க முயற்சி செய்து வருகிறார். ஒரு கிலோ மீனை 100 ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற் பனை செய்தாலும், குறைந்த விலைக்கு விற்பனை செய்ததாகத்தான் கணக்கு எழுதுகிறார். அதுபோல, அணையில் விடுவதற்காக அரசு இலவசமாகக் கொடுக்கும் மீன் குஞ்சுகளை, வெளியில் விற்று லாபம் சம்பாதிக்கிறார். இங்கு அதிகாரிகள் யாராவது ஆய்வுக்கு வந்தால், அவர்களை எப்படியாவது சரிக்கட்டி அனுப்பி விடுவார்.

அமைச்சர் வந்தும் பிரச்னை தீரவில்லை...

நாங்கள் எங்கள் பிரச்னைகள் அனைத்தையும் மீன்வளத் துறை அமைச்சரிடம் தெரிவித்து விட்டோம். ஆனாலும், இன்னமும் பிரச்னை தீரவில்லை. இனியும் நாங்கள் வஞ்சிக்கப் படும் நிலை தொடர்ந்தால், கண்டிப்பாக போராட்டங்கள் நடத்த வேண்டி இருக்கும்'' என்கின்றனர் காட்டமாக.

அமைச்சர் வந்தும் பிரச்னை தீரவில்லை...

புகார்கள் குறித்து, மீன் வளர்ச்சிக் கழக மேலாளர் சாமிநாதனிடம் கேட்டோம். ''நாங்கள் முறைப்படிதான் விற்பனை செய்து வருகிறோம். இங்கே மட்டும் கடந்த ஆண்டு 78 லட்சம் ரூபாய்க்கு மீன் விற்பனை செய்து இருக்கிறோம். அதில் சுமார் 12 லட்சம் ரூபாய் அளவுக்கு லாபம். கடந்த நான்கு ஆண்டுகளாகவே லாபத்தில்தான் இயங்கி வருகிறது. மீனவர்களுக்கு கூலி நிர்ணயம் செய்வது அரசாங்கம்தான், நான் இல்லை. அவர்களுக்கு எவ்வளவு கொடுக்கச் சொல்லி இருக்கிறார்களோ, அதைக் கொடுத்து கொண்டுதான் இருக்கிறோம்.

இங்கே இருக்கும் மீனவர்களில் ஒரு சிலர் எங்களுக்குத் தெரியாமல் மீன் பிடித்து வெளியில் விற்பனை செய்கிறார்கள். அதைக் கண்டுபிடித்து சிலர் மீது நடவடிக்கை எடுத்தோம். இப்போது அவர்களால் மீன்களை திருட்டுத்தனமாகப் பிடித்து விற்க முடியவில்லை என்ற கோபத்தில்தான் என் மீது பழி சுமத்துகிறார்கள்'' என்றார்.

அமைச்சர் ஜெயபாலிடம் பேசியபோது, ''மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் மீனில் மூன்றில் ஒரு பங்கு தங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அதைக் கொடுக்கச் சொல்லி இருக்கிறேன். தங்களுக்கே டெண்டர் கொடுக்க வேண்டும் என்று கேட்டார்கள். டெண்டர் என்று வந்து விட்டாலே, யார் அதிகமாகக் கேட்கிறார்களோ அவர்களுக்குத்தான் தரப்படும். மீனவர்கள் அதிகமாக கோரினால், கண்டிப்பாக அவர்களுக்குக் கிடைக்க வாய்ப்பு உள்ளது'' என்றார்.

உழைப்பவர்களுக்கு உரிய பலன் கிடைக்கட்டும்!

- கோ.செந்தில்குமார்

படங்கள்: பா.கந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு