Published:Updated:

'பணம் வாங்கியது உண்மையா?'

சிவகங்கையில் சிக்கிய அ.தி.மு.க. யூனியன் சேர்மன்

பிரீமியம் ஸ்டோரி
##~##
'பணம் வாங்கியது உண்மையா?'

'ஏழைகளுக்குத் தரமான வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்காக, 'பசுமை வீடுகள்’ திட்டத்தை அம்மா அறிவிச்சிருக்காங்க. ஆனால், '10,000 ரூபாய் கொடுத்தால்தான் பசுமை வீடு தருவேன்’னு அடம்பிடிக்கிறார் எங்க யூனியன் சேர்மன்’ என்று, ஆளும் கட்சியினரே சிவகங்கையில் ஆவேசப்படுகிறார்கள்! 

சிங்கம்புணரியை அடுத்துள்ள எஸ்.புதூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக, தொடர்ந்து 18 வருடங்களாக இருக்கிறார் ராஜ மாணிக்கம். இரண்டாவது முறையாக யூனியன் சேர்மனாக இருக்கும் இவர் மீதுதான் பசுமைப் புகார்.

''எங்க ஒன்றியத்தில் மொத்தம் 21 பஞ்சாயத்துகள் இருக்கின்றன. இதில் பாதிக்கு மேல் அ.தி.மு.க.வினர்தான் பஞ்சாயத்துத் தலைவர்களாக இருக்கோம். பசுமை வீடுகள் கட்டுவதற்கு அரசாங்கத்தில் ஒரு வீட்டுக்கு 1.80 லட்ச ரூபாய் கொடுக்கிறாங்க. வறுமைக் கோட்டுக்குக் கீழ்

'பணம் வாங்கியது உண்மையா?'

உள்ளவர்களின் பெயர்களை கிராம சபா கூட்டத்தில் தேர்வு செஞ்சு, பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றிக் கொடுத்தால்... வீடு கிடைக்கும். இதுதான் விதிமுறை. இதில், யூனியன் சேர்மன்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. ஆனால், எங்கள் யூனியன் சேர்மன் ராஜமாணிக்கம் இந்த விஷயத்தில் தேவை இல்லாமல் தலையிடுகிறார். என்னோட பஞ்சாயத்துக்கு மூன்று வீடுகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. யாருக்குக்

'பணம் வாங்கியது உண்மையா?'

கொடுக்கணும்னு மூணு பேரைக் குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய பிறகு, தனக்கு வேண்டப்பட்ட மூன்று பேரை சேர்க்கச் சொன்னார் சேர்மன். தட்ட முடியாமல், அவர் சொன்ன ஒருவரை லிஸ்ட்டில் சேர்த்தோம். ஆனா கடைசியில, அவர் சொன்ன ரெண்டு பேருக்கும் நாங்க சொன்ன ஒருத்தருக்குமா தீர்மானத்தைத் திருத்திட்டாங்க. மூணு பேரிடமும் தலா 10,000 ரூபாய் வாங்கிருக்கார் சேர்மன்'' என்றார் அ.தி.மு.க-வைச் சேர்ந்த கணபதிபட்டி பஞ்சாயத்துத் தலைவரான ஜமால் முகமது.

குன்னத்தூர் பஞ்சாயத்துத் தலைவர் கணேசனோ, ''எங்க பஞ்சாயத்துக்கு ரெண்டு வீடு. அதுக்கு நாங்களே பயனாளிகளைத் தேர்வு செஞ்சுட்டோம். ஆனா, வேற ரெண்டு பேருகிட்ட தலா 10,000 ரூபாய் வாங்கிக்கிட்டு அவங்களுக்கு வீடு கொடுக்கணும்னு சேர்மன் மல்லுக்கட்டுனார். வேற வழி இல்லாம, ஆளுக்கு ஒண்ணுன்னு பிரிச்சுக்கிட்டோம். இதனால, சேர்மன் காசு வாங்கின இன்னொருத்தருக்கு அடுத்த அலாட்மென்ட்ல நாங்க வீடு கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம். இதே மாதிரிதான் எல்லா பஞ்சாயத்திலேயும் நடந்திருக்கு. இந்த பட்ஜெட்டுல அறிவிச்சிருக்கிற வீடுகளுக்கு 20 ஆயிரம்னு ரேட்டை உயர்த்தி இருக்கார் சேர்மன். அதனால, 'யாரும் சேர்மன்கிட்ட காசு கொடுத்தா, அதுக்கு நாங்க பொறுப்பு இல்லை’ன்னு கிரா மத்துல ஓப்பனாவே அறிவிச்சுட்டோம். சேர்மனைப் பத்தி சி.எம். வரைக்கும் கிராம மக்கள் புகார் மனுக்களை அனுப்பி இருக்காங்க'' என்றார்.

'பணம் வாங்கியது உண்மையா?'

அடுத்துப் பேசிய ஜெ. பேரவை ஒன்றியச் செயலாளர் வள்ளியப்பன், ''பசுமை வீடுகள் திட்டத்தில் கட்சிக்காரங்ககிட்டயே காசு வாங்கினா, நாளைக்கு எப்படி அவன் நம்ம பின்னாடி நிப்பான்? அ.தி.மு.க. கோட்டையா இருந்த எஸ்.புதூர் யூனியனில் தி.மு.க. கை ஓங்கினதுக்குக் காரணம் இவர்தான். கட்சிக்காரனுக்கு சிங்கிள் டீ வாங்கித் தராதவர் இவர். இவரைப் பிடிக்காத எம்.ஜி.ஆர். விசுவாசிகள் பலர், தே.மு.தி.க-வில் சேர்ந்துட்டாங்க. இவரைப்பற்றி தலைமைக்கு நாங்கள் புகார் அனுப்பினால், அது இவர் கைக்கே எப்படியோ வந்துடுது. சாதி பலம் இருப்பதாகச் சொல்லித்தான் காரியத்தை சாதிச்சிட்டு இருக்கார். நாங்க யாரும் பதவி கேட்கலை. அவரோட சாதியைச் சேர்ந்த வேற யாருக்காச்சும் ஒன்றியச் செயலாளர் பதவியைக் கொடுக்கணும். இல்லாட்டி, கட்சியைக் காப்பாத்துறது கஷ்டம்'' என்றார்.

'பணம் வாங்கியது உண்மையா?'

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு சேர்மன் ராஜமாணிக்கத்தைச் சந்தித்தோம். ''பசுமை வீடுகள் திட்டத்துக்கு யூனியன் சேர்மன்களும், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்துக்கு பஞ்சாயத்துத் தலைவர்களும் பயனாளிகளைத் தேர்வு செய்யலாம்னு ஏற்கெனவே பேசினோம். அதை சிலர் ஏத்துக்கலை. அதனால், பசுமை வீடுகளை ஆளுக்குப் பாதியாப் பிரிச்சுக்குறதுனு முடிவாச்சு. நான் பணம் வாங்கியதாக பயனாளிகள் யாராவது குற்றம் சொல்கிறார்களா? என்னுடைய வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள்தான் சொல்கிறார்கள். அவர்கள் ஒரு பெண் அமைச்சரின் விசுவாசிகள். அவர்தான் இவங்களைத் தூண்டிவிடுறார். பயனாளிகள் யாரும் குறை சொல்லவே இல்லை. அதனால், இவங்க குறை சொல்றதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. ஏன்னா, என் மேல் குறை சொல்ற வள்ளியப்பன் போன ஆட்சியில தி.மு.க. அமைச்சரைக் கைக்குள் போட்டு என்னென்ன செஞ்சார்னு எங்க கட்சிக்காரங்களுக்குத் தெரியும். என்னைப்பற்றி அம்மாவுக்கு நல்லாத் தெரியும் என்பதால், இவர்களைப்பற்றி எனக்குக் கவலை இல்லை'' என்றார்.

இனி 'அம்மா’தான் முடிவு எடுக்க வேண்டும்!

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு