Published:Updated:

''நான் டாக்டர் பேசுறேன்... சீக்கிரமாக் கொடுத்துவிடுப்பா!''

நெல்லையில் அதிகமாகும் 'போதை' போன்!

##~##
''நான் டாக்டர் பேசுறேன்... சீக்கிரமாக் கொடுத்துவிடுப்பா!''

'நெல்லையில் போதை ஊசிக்கு அடிமையாகும் கல்லூரி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்தக் கும்பலில் சிக்கி மாணவிகளும் கெட்டுப்போகிறார்கள். உடனே நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பள்ளி மாணவர்களுக்கும் இந்தப் போதைக் கலாசாரம் பரவிவிடும்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்குத் (044-66808002) தகவல் கொடுத்து இருந்தார், சமூக ஆர்வலரான உஸ்மான் கான். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முதலில் அவரைச் சந்தித்தோம். ''எனது உறவினர் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லாததால் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து இருந்தோம். அங்குள்ள மருந்துக் கடைக்குப் போனபோது, இளைஞர்கள் சிலர் குறிப்பிட்ட ஒரு மருந்தைக் கேட்டு தகராறு செய்தார்கள். ஆட்கள் கூடியதும் கலைந்து போய்விட்டார்கள். விசாரித்தபோது, போதை ஊசி போட்டுக்கொள்வதற்காக குறிப்பிட்ட ஒரு மருந்தைக் கேட்டு அவர்கள் அடம்பிடித்தது தெரியவந்தது. 'இவர்களைப் போல் நிறைய இளைஞர்களும் பெண்களும் குறிப்பிட்ட மருந்தைக் கேட்டு வருகிறார்கள்’ என்று கவலையுடன் தெரிவித்தார்கள். இந்த இளைஞர்கள் மகாராஜ நகர் பகுதியில்தான் கூடி நின்று, போதை ஊசி மருந்துகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்'' என்றும் தெரிவித்தார்.

''நான் டாக்டர் பேசுறேன்... சீக்கிரமாக் கொடுத்துவிடுப்பா!''

அவர் கூறிய பகுதியில் இருந்த குறிப்பிட்ட ஒரு டீக்கடையில் இளைஞர்கள் நடமாட்டம் அதிகமாக தெரிந்தது.  தங்களுக்குள் ஏதோ ரகசியம் பேசினார்கள். எதையோ கொடுத்து, எதையோ வாங்கினார்கள். அவசரமாக வருவதும் அவசரமாகப் போவதுமாக இருந்தார்கள். ஆனால், அவர்கள் யாரும் டீ மட்டும் குடிக்கவே இல்லை.

இந்த போதை மருந்து கலாசாரம் பற்றி இந்திய மருத்துவச் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவரான டாக்டர் அன்புராஜனிடம் கேட்டோம். ''அறுவைச் சிகிச்சை முடிந்தவுடன் வலியில் இருந்து

''நான் டாக்டர் பேசுறேன்... சீக்கிரமாக் கொடுத்துவிடுப்பா!''

விடுதலை கிடைப்பதற்காக சில நோயாளி களுக்கு ஊசி போடப்படும். அந்த ஊசி மருந்தைத்தான் (synthetic opioids) போதைக்காகப் பயன்படுத்துகிறார்கள். அந்த ஊசி மருந்தை டாக்டரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் கொடுக் கவே மாட்டார்கள். அதனால் சில இளைஞர்கள் டாக்டரின் மருந்துச் சீட்டு மற்றும் சில மருத்துவமனைகளின் லெட்டர் பேட் ஆகியவற்றை போலியாக அச்சடித்து உள்ளார்கள். அந்தச் சீட்டில், போன் நம்பரைத் தவிர அனைத்து விவரங்களும் சரியாகத்தான் இருக்கும்.

அந்தச் சீட்டைக் கொண்டுவருபவர் மீது சந்தேகம் வந்தால், உடனடியாக அதில் இருக்கும் நம்பருக்குப் போன் செய்து விசாரிப்பார்கள். எதிர் முனையில் பேசும் நபர், 'நான் டாக்டர் பேசுறேன். ஒரு முக்கியமான ஆபரேஷனுக்காக தியேட்டரில் இருக்கேன். உடனே குடுத்து விடுப்பா...’ என்று நிஜ டாக்டர் போலவே பேசு வார். அதை நம்பி ஊசி மருந்தைக் கொடுத்து விடுவார்கள்.

சமீபத்தில்தான் எங்களுக்கு இந்த விவகாரம் முழுமையாகத் தெரியவந்தது. அதனால் எல்லா மருத்துவமனைகளையும், மெடிக்கல் ஷாப்களையும் உஷார்படுத்தி, காவல் துறையிடமும் தகவல் தெரிவித்து இருக்கிறோம்.

அந்த ஊசி மருந்தைத் தொடர்ந்து பயன்படுத்தினால் போதை அதிகமாக இருக்கும். விலை குறைவு என்பதாலும் கூடுதல் நேரம் போதை இருக்கிறது என்பதாலும் பயன்படுத்துகிறார்கள். மது போன்று வாடை தெரியாது என்பதால், கல்லூரி மாணவர்களும் மாணவிகளும் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. இந்த மருந்தைத் தொடர்ந்து பயன்படுத்தினால், படபடப்பு, ஞாபக மறதி, குழப்பம், வன்முறைச் சிந்தனை போன்றவை ஏற்படும், மேலும் மன நலமும் பாதிக்கப்படும். பெண்களுக்கு குழந்தை பெறுவதில் சிக்கல் ஏற்படும். இந்த ஊசி மருந்துக்கு அடிமை ஆனவர்களால், அதன் பிறகு போட்டுக்கொள்ளாமல் இருக்கவே முடியாது. அந்த மருந்துக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள்.

ஊசி மருந்தைத் தொடர்ந்து பயன் படுத்துபவர்களின் கைகளைப் பார்த்தாலே எளிதில் கண்டுபிடித்து விடலாம். அதில் ஊசி குத்திய தழும்புகள் அதிகமாக இருக்கும். அப்படி இருந்தால் உடனடியாக டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். கவுன்சிலிங் மற்றும் சிகிச்சை எடுத்துக்கொண்டால்தான் இந்த போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட முடியும். தனிமையை அதிகமாக விரும்பும் இளைஞர்களைக் கூடுதல் கவனத்துடன் கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. பெற்றோரால் மட்டும்தான் இந்தப் பழக்கம் பெருகாமல் தடுக்க முடியும்'' என்றார் அக்கறையுடன்.

இந்த விவகாரத்தை நெல்லை மாநகரப் போலீஸ் கமிஷனர் கருணா சாகர் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். குறிப்பிட்ட டீக்கடை பற்றியும் சொன்னோம். அங்கே ரெய்டு செய்த பிறகு நம்மிடம் பேசினார். ''ரெய்டு வருவதை அறிந்து உஷாராகி அனைவரும் தப்பித்து விட்டனர். ஏற்கெனவே சில டாக்டர்கள் இந்த போதை விவகாரம் குறித்துத் தகவல் கொடுத்து இருக்கிறார்கள். சமூகத்தைப் பாழ் படுத்தும் இதுபோன்ற செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதனால் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி இருக்கிறோம். ஆனால், இளைஞர்களைக் கண்காணிக்கும் கடமையை பெற்றோர்கள்தான் பொறுப்புடன் செய்யவேண்டும்'' என்றார்.

நெல்லையில் ரெய்டு நடப்பதும் மருத்துவமனைகளில் ஊசி மருந்து விற்பனைக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் நிலவுவதும் போதை இளைஞர்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்தவில்லை. இப்போது பக்கத்து ஊர்களில்  மருந்து வாங்குகிறார்களாம். இந்த போதைக் கலாசாரம் தமிழகம் முழுவதும் பரவி இருக்கலாம். அரசு, காவல்துறையை முடுக்கிவிட்டு, இதற்கு அழுத்தமான முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்