Published:Updated:

ப்யூட்டி பார்லர்... கட்டண உயர்வு...

கதற வைக்கும் புதுவைப் பல்கலைக்கழகம்

##~##
ப்யூட்டி பார்லர்... கட்டண உயர்வு...

பால், பஸ், பெட்ரோல், மின்சாரம், அரிசி என்று சகலமும் விலை உயர்த்தப்பட்டதைப் பார்த்தோ என்னமோ, கல்விக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தி மாணவர்களை புலம்ப வைத்து இருக்கிறது புதுச்சேரி பல்கலைக்கழகம். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் செயல்பாடுகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருப்பதாக குற்றம் சுமத்துகிறார், இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி செயலாளர் ஆனந்த். ''ஒரு பல்கலைக்கழகம் எப்படிச் செயல்படக்கூடாது என்பதற்கு உதாரணமாகத்தான் விளங்குகிறது, புதுச்சேரி பல்கலைக்கழகம். கடந்த 2008-ம் ஆண்டு இங்கு பணிபுரிந்த ஜெயராமன் என்ற ஊழியர், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். மாணவர்களின் மதிப்பெண்களை உயர்த்திப் போடுமாறு அதிகாரிகள் சிலர் தன்னைக் கட்டாயப்படுத்துவதாக அவர் அறிவித்து இருந்தார். இன்னமும் அவரது மரணத்துக்குக் காரணமான நபர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

ப்யூட்டி பார்லர்... கட்டண உயர்வு...

2009-ல் மதிப்பெண் திருத்தப்பட்ட மாணவரின் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதியை, முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மிரட்டியதாக ஒரு சர்ச்சை எழுந்தது. 2010-ம் ஆண்டு

ப்யூட்டி பார்லர்... கட்டண உயர்வு...

பல்கலைக்கழகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி அதிர வைத்தார்கள். கடந்த ஆண்டு 110 ஏக்கரில் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் தரமற்றவை என்று குற்றச்சாட்டு எழுந்தது. வழக்கமாக மத்திய பொதுப் பணித் துறையினர்தான் மத்தியப் பல்கலைக்கழகக் கட்டடங்களைக் கட்டுவார்கள். ஆனால், இந்த முறை தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கினார்கள். மழை பெய்தால் கூட, அந்தக் கட்டடம் இப்போது ஒழுகுகிறது.

இப்படி எத்தனையோ குற்றச்சாட்டுகள் வந்துகொண்டே இருக்கின்றன. இதற்கு எல்லாம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய துணைவேந்தர் ஜே.ஏ.கே.தரின், எதையும் கண்டுகொள்வது இல்லை. ஏனென்றால், கடந்த ஏப்ரல் மாதத்தோடு அவருடைய பதவிக் காலம் முடிந்து விட்டது. ஆனாலும் பதவி மோகத்தில் இன்னும் ஒட்டிக்கொண்டு இருக்கிறார். இப்படி பல்வேறு குழப்பம் நிகழும் சூழ்நிலையில்தான், கல்விக் கட்டணத்தைப் பலமடங்கு உயர்த்தி ஏழை மாணவர்களின் வாழ்க்கையில் மண் அள்ளிப் போட்டு உள்ளார்கள்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் இங்கே வந்து படிப்பதற்கு முக்கியக் காரணமே, மற்ற பல்கலைக்கழகத்தை விட கட்டணம் மிகவும் குறைவு என்பதால் தான். ஆனால் இந்த ஆண்டு கல்விக் கட்டணத்தைப் நான்கு மடங்காக உயர்த்தி விட்டார்கள். கடந்த காலங்களில் முனைவர் பட்டப் படிப்புக்கு மூன்று வருடங்களுக்கும் சேர்த்தே, 25 ஆயிரம் ரூபாய் என்று இருந்தது. ஆனால் இப்போது 65 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி இருக்கிறார்கள். மற்ற மத்தியப் பல்கலைக்கழகங்களான டில்லி ஜவஹர்லால் நேரு, ஹைதராபாத் ஜாமிய மில்லியா, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் படிப்பதற்குக் கட்டணம் இப்போதும் 17 ஆயிரம் ரூபாய்தான். அதனால் புதுச்சேரியில் உயர்த்தி இருக்கும் இந்தக் கட்டணம் மிகவும் அதிகம். குறிப்பாக இந்தக் கட்டண உயர்வு தமிழக மாணவர்களையும் பெற்றோர்களை கடுமையாகப் பாதிக்கும். அதனால் இந்தக் கட்டண உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும். அதே போல் புதிய கட்டடத்தின் தரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். இல்லை என்றால் வரும் 30-ம் தேதி புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா கட்டடத் திறப்பு விழாவுக்கு வரும் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கறுப்புக் கொடி காட்டிப் போராடத் தயங்க மாட்டோம்'' என்றார் உறுதியாக.

கட்டண உயர்வு குறித்து பல்கலைக்கழக மாணவர்களிடம் பேசினோம். ''இந்தக் கல்விக் கட்டண உயர்வால் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவார்கள். இங்கு மாணவர்களுக்கு பல அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டி உள்ளது. ஆனால் அதை எல்லாம் செய்யாமல், ப்யூட்டி பார்லர் அமைத்துக் கொடுக்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. கடந்த ஆண்டு 500 ரூபாயாக இருந்த லேப் கட்டணம் இப்போது 10 ஆயிரம் ரூபாயாக உயர்ந்து விட்டது. இப்படி ஒரே நேரத்தில் 20 மடங்கு உயர்த்துவது நியாயமே இல்லை'' என்று அதிர்ச்சி தெரிவித்தார்கள்.

மாணவர்களின் கோரிக்கை குறித்து பல்கலைக் கழகத்தின் பதிவாளர் லோகநாதனிடம் பேசினோம். ''எங்கள் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு உதவித் தொகை கொடுப்பதிலேயே பல லட்சங்கள் செலவு ஆகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக கல்விக் கட்டணம் உயர்த்தப்படவே இல்லை என்பதால் வேறு வழி இன்றி இப்போது உயர்த்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும் படிப்படியாக உயர்த்தி இருந்தால் இந்தப் பிரச்னை வந்து இருக்காது என்றாலும் இது நியாயமான கட்டண உயர்வுதான்.

துணைவேந்தருடையை பதவிக் காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்து விட்டது. வேறு ஒருவர் புதிய துணைவேந்தராக நியமிக்கப்படுவாரா அல்லது இவரே பணியைத் தொடர்வாரா என்பது விரைவில் முடிவு செய்யப்படும். புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களில் இருக்கும் ஒரு சில குறைகள் விரைவில் சரி செய்யப்படும்'' என்றார்.

தனியார் கல்வி நிறுவனங்கள் கொள்ளை அடிப்பது போதாது என்று மத்திய அரசும் தடாலடியாக இறங்குவது நியாயம்தானா?

- நா.இள அறவாழி

படங்கள்: ஆ.நந்தகுமார்