Published:Updated:

அரசுக்குப் பணம் அம்போ!

லோக்கல் சேனலைக் கைப்பற்றிய அ.தி.மு.க.!

##~##
அரசுக்குப் பணம் அம்போ!

'கேபிள் டி.வி-யில் நிலவும் தனியார் ஆதிக்​கத்தை அகற்றி அரசே கேபிள் டி.வி-யை நடத்தும்’ என்று தேர்தல் சமயத்தில் ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்தார். அவர் கொடுத்த வாக்குறுதிக்கு, அ.தி.மு.க-வினரே ஆப்பு வைக்கிறார்கள் என்பதுதான் ஈரோட்டுப் புலம்பல். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அம்பேத்கர் கேபிள் நெட்வொர்க் உரிமையாளர் மின்னல் முருகேஷ் நம்மிடம் பேசினார். ''ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய ஏரியாக்களில் உள்ளூர் தொலைக்காட்சி நடத்துவதற்கு ஏப்ரல் மாதம் 17-ம் தேதி ஏலம் நடைபெறும் என்றும், அதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனிலோ, அரசு கேபிள் தாசில்தாரிடமோ பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்து இருந்தார்கள். ஆனால், சொன்னபடி எங்குமே விண்ணப்பம் கிடைக்கவில்லை. நானும் விண்ணப்பத்தை வாங்க தாசில்தார் வாசுதேவனை சந்திக்க பல முறை

அரசுக்குப் பணம் அம்போ!

சென்றேன். அவர் அலுவலகத்திலேயே இல்லை. அதன் பிறகு ஆன்லைன் விண்ணப்பத்தை வேறு ஒருவர் மூலம் பெற்று அனுப்பி வைத்தேன்.

முறையாக யாருக்குமே விண்ணப்பங்களைக் கொடுக்க முடியவில்லை. ஆனாலும், கடந்த மாதம் 16-ம் தேதி அனைத்து விண்ணப்பங்களும் வந்து விட்டன என்று சீல் வைத்து விட்டார்கள். அதற்குப் பின்னும் எப்படியோ பல விண்ணப்​பங்கள் அதில் சேர்க்கப்பட்டிருந்தன. ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த ஏலத்தில்

அரசுக்குப் பணம் அம்போ!

என்னைப் போல பலரும் கலந்து கொண்டார்கள். ஆனால் அ.தி.மு.க-வினர் ஆரம்பத்தில் இருந்தே பிரச்னை செய்ய ஆரம்பித்தனர். அதனால் அதிகாரிகள் மனுக்களை முறையாக ஆய்வு செய்யவே இல்லை. சேலத்தைச் சேர்ந்த பாலிமர் சேனல் நிறுவனம், 3.56 லட்ச ரூபாய்க்கு ஏலம் கேட்டிருந்தார்கள். ஆனால் மண்டலத் தலைவரும், நகர அ.தி.மு.க. செயலாளருமான பெரியார்நகர் மனோகரன், காவல் துறையினர் முன்னிலையிலேயே பாலிமர் சேனலில் இருந்து வந்திருந்தவர்களை மிரட்டி வெளியேற்றி விட்டார். அதைத் தட்டிக் கேட்டதற்கு மேயர், துணை மேயர், நகரச் செயலாளர், லோக்கல் மினிஸ்டர் என்று ஆளுக்கு ஒரு சேனல் கொடுத்தாகணும், மிச்சம் இருந்தாப் பார்க்கலாம்னு சொல்லிட்​டாங்க. கடைசியாக ஈரோட்டில் உள்ள ஏழு லோக்கல் சேனல்களுக்கான அனுமதி​யையும் அ.தி.மு.க-வினருக்கு மட்டுமே கொடுத்​திருக்கிறார்கள்.

பெருந்துறை, பவானி பகுதிகளுக்கு நான் உரிமம் கேட்டு விண்ணப்பித்து இருந்தேன். என்

அரசுக்குப் பணம் அம்போ!

விண்ணப்பத்தை நிராகரிச்சிட்டாங்க. என்னை விட குறைவான தொகைக்குக் கேட்டவருக்குக் கொடுத்திருக்காங்க. என்ன கேட்டாலும், 'அமைச்சர் சொல்லித்தான் கொடுக்குறோம்’னு பதில் பேசுறாங்க. இதெல்லாம் முதல்வரின் கவனத்துக்குப் போனதா என்று தெரியவில்லை. ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை முறைப்படி ஏலத்தை நடத்தாமல், முழுக்க முழுக்க ஆளும்கட்சியினருக்கு மட்டுமே சேனல் உரிமத்தை கொடுத்து, அரசுக்கு வருவாய் இழப்பை உண்டாக்கி இருக்கிறார்கள். தமிழக முதல்வர் இந்தப் பிரச்னையில் உடனே தலையிட்டு மறுஏலம் நடத்தி அரசுக்கு வர வேண்டிய உண்மையான தொகை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்று கொந்தளித்தார்.

ஈரோடு மாவட்ட அரசு கேபிள் நிறுவனத்தின் தாசில்தார் வாசுதேவனிடம் பேசினோம். ''ஏலம் முறைப்படிதான் நடந்தது. ஏலத்தில் ஆளும் கட்சியினர் கலந்து கொண்டார்களா என்பது எனக்குத் தெரியாது. பொதுமக்கள் முன்னிலையில்தான் ஏலம் நடந்தது. ஏலத்தின் முடிவுகள் சென்னையில்தான் இறுதி செய்யப்படும். எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை'' என்று கூலாகச் சொன்னார்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான கே.வி.ராமலிங்கத்திடம் கேபிள் விவகாரம் பற்றி விசாரித்தோம். ''கேபிள் விவகாரத்தில் நான் எப்போதுமே தலை இடுவது கிடையாது. அதற்கு என்று தனியாக ஒரு துறை இருக்கிறது. மற்றபடி லோக்கல் சேனல் இவருக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று யாரிடமும் நான் சொல்லவில்லை. முறைப்படி ஏலம் நடந்திருக்கிறது. அதில் யார் அதிகத் தொகைக்குக் கேட்டிருந்தார்களோ, அவர்களுக்குக் கண்டிப்பாக உரிமம் கொடுத்திருப்பார்கள்'' என்று நழுவினார்.

தி.மு.க.வினர் கையில் இருந்து அ.தி.மு.க. கையில் கொடுப்பதுதான் ஜெயலலிதா சொன்ன வாக்குறுதியோ?

- ம.சபரி 

வேலூர் சோகம்!

 வேலூர் மாவட்டத்திலும் உள்ளூர் சேனலில் ஆளும் கட்சித் தலையீடு அதிகம்தான். ''வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆளும் கட்சியின் இரண்டு முக்கியப் புள்ளிகளின் கட்டுப்பாட்டில்தான் ஒட்டு மொத்த லோக்கல் சேனல்களும் இருக்கின்றன. அந்த முக்கியப் புள்ளிகளின் மகன்கள்தான் லோக்கல் சேனலைக் கையில் வைத்திருக்கிறார்கள். வேறு யாரும் ஏலத்தில் கலந்து கொள்ளாத வகையில் மிரட்டி உருட்டி லோக்கல் சேனல்களைக் கைப்பற்றி இருக்கிறார்கள். அவர்கள் ஒரு சில சேனலை எடுத்துக்கொண்டு மிச்சம் இருப்பதையாவது எங்களைப் போன்று காலம் காலமாக கேபிள் தொழில் நடத்துபவர்களுக்குக் கொடுக்கலாம். அவர்களைத் தவிர வேறு யாருமே லோக்கல் சேனல் நடத்தக்கூடாது என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?'' என்று  கேட்கிறார்கள் நடுநிலைமையான கேபிள் ஆபரேட்டர்கள்.

- கே.ஏ.சசிகுமார்