Published:Updated:

''கேரளா மறுக்கிறது... தமிழகம் அழைக்கிறது!''

எரிவாயு திட்டத்தை எதிர்க்கும் கொங்கு விவசாயிகள்

##~##

தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டுமாம் என்ற பழமொழியைக்  கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது, கிண்டலுக்காகச் சொல்வது. ஆனால், நிஜத்தில் ஒரு சம்பவம் இதுமாதிரித்தான் நடந்துள்ளது! 

கேரளாவில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு எரிவாயு கொண்டு செல்வதற்காக மத்திய அரசு தீட்டியுள்ள திட்டம், தமிழக விவசாயி களைப் பாதித்து உள்ளது. எரிவாயு சுமந்து செல்லும் பைப் லைனை, தமிழக விவசாய நிலங்கள் வழியாகக் கொண்டு செல்வதுதான் காரணம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தத் திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கொந்தளித்த கொங்கு மண்டல விவசாயிகள், கடந்த வாரம் திருப்பூரில் அதிகாரிகளைத் தடுத்து தங்களது கடுமையான எதிர்ப்பைக் காட்டினார்கள். அடுத்து, 'விவசாயிகள் வாழ்வாதாரப் பாதுகாப்​புக் குழு’ என்ற அமைப்பை ஆரம்பித்து போராடத் தொடங்கி இருக்கிறார்கள்.

''கேரளா மறுக்கிறது... தமிழகம் அழைக்கிறது!''

கோவையைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்​ணனிடம் பேசினோம். ''கொச்சினில் இருந்து பெங்களூருவுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு கொண்டு செல்வதற்கு மத்திய அரசு 1996-ம் ஆண்டே திட்டம் தீட்டியது. ஆனால், என்ன காரணத்தாலோ அந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டனர். இப்போது, திடீரென்று எங்கள் நிலங்களில் குழாய் அமைக்கும் பணியைத் தொடங்கி உள்ளனர். இந்தத் திட்டத்துக்காக நிலம் கையகப்​படுத்தும் பணியை மத்திய அரசின் 'கெயில்’ நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவன அதிகாரிகள் எந்தத் தகவலும் சொல்லாமல் திடீ​ரென்று போலீஸ் பாதுகாப்புடன் எங்கள் நிலத்தில் புகுந்து மரங்களை வெட்டுகின்றனர்; நிலங்களை ஆர்ஜிதம் செய்கிறார்கள். எதிர்ப்புத் தெரிவித்தால், 'நீ புழல் சிறைக்குப் போய் இருக்கியா? திகார் சிறையைப் பார்க்கணுமா?’ என்று மிரட்டுகின்றனர். கடந்த வாரம் திருப்பூரில் இப்படி மிரட்டியதால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள், அதிகாரிகளை நிலத்துக்குள் அனுமதிக்காமல் பிரச்னை செய்தார்கள். அதன்பிறகு போலீஸ் வந்துதான் நிலைமை சரியானது.

''கேரளா மறுக்கிறது... தமிழகம் அழைக்கிறது!''

கோவையில் ஆரம்பித்து திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு வரை விவசாய நிலத்தில் 20 மீட்டர் அகலம் வரை கையகப்படுத்தி, இரண்டு அடி உள்ள குழாயைப் பதிக்​கின்றனர். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், யார் நிலத்தில் இந்தக் குழாய் பதிக்கப்படுகிறதோ, அந்த நபர்தான் குழாயின் பாதுகாப்புக்கு முழுப்பொறுப்பு. ஏதாவது காரணத்தால் பைப் லைனில் சேதம் ஏற்பட்டால் ஏழு ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை விதிக்கச் சட்டம் உள்ளது. எங்களை மறைமுகமாக 24 மணி நேரமும் காவல் பணி செய்ய வைப்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.

''கேரளா மறுக்கிறது... தமிழகம் அழைக்கிறது!''

இந்த பைப் லைன் செல்லும் பாதை முழுவதும் விவசாயம் செய்யக் கூடாது. மானாவாரி பயிர்களை தவிர, வேறு பயிர்கள் விளைவிக்கக் கூடாது. நீர் பாய்ச்சல் இருக்கக்கூடாது என்பதால் நிம்மதியாக விவசாயம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். நிலத்துக்குப் போதுமான அளவு நஷ்டஈடு கொடுத்​தாலாவது பரவாயில்லை, அதுவும் இல்லை. கைடு லைன் மதிப்பில் 10 சதவிகிதத்தைத்தான் நஷ்ட ஈடாகத் தருகிறார்கள். எங்கள் பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஒரு லட்ச ரூபாய் கைடு லைன் மதிப்பு என்றால், ஏக்கருக்கு 1,000 ரூபாய்தான் இழப்பீடாகக் கிடைக்கும்'' என்றார் வேதனையுடன்.

விவசாயிகள் வாழ்வாதாரப் பாதுகாப்புக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, ''இந்தத் திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், பைப் லைன் செல்லும் 310 கி.மீ. தூரத்தையும் விவசாய நிலங்களில் மட்டுமே கொண்டு செல்ல நினைக்கிறார்கள். இதனால் இந்தப் பகுதி விவசாயம் முற்றிலும் மடிந்து போகும். ஆற்றுப்படுகை, நெடுஞ்சாலை, ரயில்வே பாதை வழியாகவோ மாற்றுப் பாதையிலோ இந்தத் திட்டதைக் கொண்டு செல்ல வேண்டும். தமிழக அரசு எங்கள் தரப்பு நியாயத்தை உணர்ந்து மத்திய அரசிடம் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.

1962-ல் கொண்டுவரபட்ட பி.எம்.பி. (பெட்ரோலி யம் மினரல் பைப்லைன்) சட்டம் மூலம் நிலத்தைக் கையகப்படுத்துகிறது கெயில் நிறுவனம். அந்தக் காலத்து சட்டத்தை வைத்து நிலத்தைப் பறிப்பதை ஏற்கவே முடியாது. இதை எதிர்த்து நீதிமன்றம் செல்கிறோம். கேரளாவில் இந்தத் திட்டத்துக்கு அனுமதி மறுக்​கிறார்கள். தமிழகத்தில்தான் எந்தத் தடையும் போடாமல் நிறைவேற்றத் துடிக்கிறார்கள். எங்கள் நிலத்தில் ஓர் அடியைக் கூட விட்டுத் தரமாட்டோம்'' என்றார் காட்டமாக.

நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக தமிழக அரசால் நியமிக்கபட்ட துணை ஆட்சியர் (அதிகாரம்) சந்திரசேகரிடம் பேசினோம். ''இந்தப் பிரச்னை குறித்து கூடிய விரைவில் நடக்க இருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். மற்ற விவரங்களை கெயில் நிறுவத்தினரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்'' என்றார்.

கெயில் நிறுவன மேலாளர் அங்கமுத்து, ''விவசாயிகளுக்கு முறைப்படி தகவல் தெரிவித்து விட்டுத்தான் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. நாங்கள் மத்திய அரசு நிறுவனம். நாங்கள் ஏன் விவசாயிகளை மிரட்டப் போகிறோம்? நாங்கள் இது போன்று இந்தியாவில் பல மாநிலங்களில் வெற்றிகரமாக திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பைப் லைனுக்கு யாராவது சேதம் விளைவித்து, கையும் களவுமாக ஆயுதங்களோடு பிடிபட்டால்தான் கடுமையான தண்டனை கிடைக்கும். விபத்து அபாயங்கள் எதுவும் இல்லை. அதனால், விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை'' என்றார்.

விவசாயிகளைக் காப்பாற்றுமா தமிழக அரசு?

-  ம.சபரி, படங்கள்: க.ரமேஷ்