Published:Updated:

''ஆகம விதிகளை மீறும் பார்த்தசாரதி கோயில்!''

கொந்தளிக்கும் திருவல்லிக்கேணி பக்தர்கள்

பிரீமியம் ஸ்டோரி
##~##

யிரம் ஆண்டு காலப் பழைமையும் பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று என்ற பெருமையும்கொண்டது சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில்!

 இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தக் கோயிலின் உள்புறத்தில் செய்யப் பட்ட  சீரமைப்புப் பணிகள், தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பார்த்தசாரதி

''ஆகம விதிகளை மீறும் பார்த்தசாரதி கோயில்!''

பெருமாள் பக்தர்கள் பேரவையைச் சேர்ந்த ராக வேந்தரை முதலில் நாம் சந்தித்தோம். ''கோயில் தரைத்தளம் கீழ் இறங்கிவிட்டால், ஸ்தபதியின் உதவியுடன் அந்தக் கற்களைப் பெயர்த்துவிட்டு, தரையை உயர்த்தி, பின் அதன் மேல் அதே கற்களைப் பதிக்க வேண்டும். ஆனால், இவர்கள், அப்படிச் செய்யாமல், பழைய கற்களின் மேலேயே கறுப்பு நிற பளிங்குக் கற்களைப் பதித்து உள்ளனர். பழைய கற்களுக்கு மேல் பளிங்குக் கற்களைப் பதிப்பதால், தரைத்தளம் பலப்பட்டுவிடுமா?

தற்போது பதிக்கப்பட்டுள்ள பளிங்குக் கற்கள், வெயில் பட்டவுடன் சூடு தகிக்கிறது. இதனால், பக்தர்கள் யாரும் அதில் நடக்கவே முடியாமல் சிரமப்படுகின்றனர். மழைக்காலம் வந்துவிட்டால், நிலைமை இன்னும் மோசமாகும். கறுப்பு நிற பளிங்குத் தரையில் தண்ணீர் கிடப்பது எப்படித் தெரியும்? மக்கள் வழுக்கி விழுவார்கள். இதைக் கேட்டால், பளிங்குத் தரைக்கு மேல், பிளாஸ்டிக் பந்தல் அமைப்பதாகக் கூறி  தற்போது, 12 பில்லர்களை அமைத்து உள்ளனர். கோயிலில் உள்ள ஒரே வெற்றிடம் இந்தப் பகுதிதான். இத்தனை பெரிய கோயிலுக்குத் தேவையான காற்றோட்டம் இந்தப் பகுதியில் இருந்துதான் கிடைக்கிறது. மேலும், இதன் காரணமாக கோயில் கோபுரம் முற்றிலும் மறைக்கப்படும். கோபுர தரிசனமும் விமான தரிசனமும் யாருக்கும் கிடைக்காது. இப்படி எதையும் கருத்தில்கொள்ளாமல், யாராவது நன்கொடை கொடுத்தால் போதும் என்ற ரீதியில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செயல்படுகின்றனர். இதனால், இந்தப் பகுதி மக்கள் அனைவரும் மிகுந்த வேதனையில் கொந்தளிப்பில் உள்ளனர்!'' என்றார் ஆவேமாக.

''ஆகம விதிகளை மீறும் பார்த்தசாரதி கோயில்!''

இந்தப் பிரச்னையில் மற்ற இந்து அமைப்பு களையும் ஒன்றுதிரட்டி போராட்டங்களில் குதித்துள்ளது இந்து முன்னணி. போராட்டக் குழு அமைப்பாளர் முருகன், ''கோயில் என்பது மற்ற கட்டுமானங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. பாரம்பரியம், பக்தர்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. முழுக்க முழுக்க ஆகம விதிகளுக்கு உட்பட்டது. ஆனால், இவற்றைக் கருத்தில்கொள்ளாமல் அதிகாரிகள் செயல்படுகின்றனர். யாராவது ஒருவர் நன்கொடை கொடுத்தால் போதும், அதில் ஏதாவது ஒரு வேலையைச் செய்துவிட்டு, அதற்கு ஒரு பொய்க் கணக்கைத் தயாரித்து, பணம் சம்பாதிப்பதில்தான் குறியாக உள்ளனர். போய்க் கேட்டால், நன்கொடை கொடுத்தவர்கள் மேலிடம் என்றும் போயஸ் தோட்டத்தில் இருந்து உத்தரவு என்றும் பொது மக்களையும் பக்தர்களையும் மிரட்டுகிறார்கள். அப்படித்தான் இப்போது பிளாஸ்டிக் பந்தலை அமைக்கின்றனர். நாளைக்கு இன்னொருவர் பணம் கொடுத்தால், கோயிலுக்குள் அறைகளைக் கட்டிக் கொடுப்பார்களா?'' என்றார்.

''ஆகம விதிகளை மீறும் பார்த்தசாரதி கோயில்!''

கோயில் துணை ஆணையர் வான்மதியிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டோம். ''கோயிலின் பாரம்பரியத்துக்கும் பெருமைக்கும் எந்த பாதிப்பும் நேராத வகையில்தான் தற் போதைய பணிகள் நடைபெறுகின்றன. பல நூறு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட கோயில் கல் தரை உள்வாங்கிக்கொண்டே செல்கிறது. இப்படியேவிட்டால், கோயில் சுற்றுச் சுவரும் மற்ற தூண்களும் விழும் அபாயம் உள்ளது. அதனால்தான் அதைச் சமப்படுத்தி, அதற்கு மேல் பளிங்குத் தரை அமைத்து இருக்கிறோம். அதை மெஷின் மூலம் கடினப்படுத்திய பின், அதுவும் பழங்காலக் கல் தரையைப் போல் தான் தோற்றம் அளிக்கும். வெயில் காலங்களில் சூடேறாது. இதற்கு முன்பு கோயில் கொடி மரத்தைச் சுற்றிலும் அதுபோன்ற தரையை ஏற்கெனவே அமைத்துள்ளோம். அதைப் புரிந்துகொள்ளாமல், வெயில்

''ஆகம விதிகளை மீறும் பார்த்தசாரதி கோயில்!''

காலத்தில் கால் சுடும் என்றும் மழைக் காலத்தில் வழுக்கிவிழுவோம் என்றும் குற்றம் சொல்கிறார்கள். அதேபோல், கோபுரத்தை மறைக்காத வகையிலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அமர்ந்து செல்வதற்கு வசதியாகவும்தான் பிளாஸ்டிக் பந்தல் அமைக்கிறோம்.  

பளிங்குத் தரைக்குப் பதிலாகக் கற்களைப் பெயர்த்துவிட்டு தரையைப் பலப்படுத்தி, அதன்மேல் பழைய கற்களையே பதிக்கலாமே என்கிறார்கள். அப்படிச் செய்ய முடியாது. ஏனென்றால் இந்தக் கோயில், அஸ்திவாரமே இல்லாமல் முழுக்க முழுக்க கற்களின் எடையிலேயே ஒன்றை ஒன்று தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கற்களைப் பெயர்த்தால், அதனுடன் இணைந்துள்ள, ஏதாவது ஒரு தூணோ, அல்லது மண்டபமோ சேதமடையும் வாய்ப்பு உள்ளது!'' என்றார்.

காலம் காலமாகக் காப்பாற்றப் பட்ட கோயிலை அதன் பாரம்பர்யம், விதிமுறைகள் கெடாமல் பாதுகாக்க வேண்டியது அரசு, பக்தர்கள் இருவரது கடமை!  

- ஜோ.ஸ்டாலின்
படங்கள்: என்.விவேக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு