Published:Updated:

வீட்டைக் காலி செய்ய கூலிப்படை!

காஞ்சிபுரம்

பிரீமியம் ஸ்டோரி
##~##
வீட்டைக் காலி செய்ய கூலிப்படை!

சாதிச் சண்டையில் கூலிப் படையைப் பயன்படுத்தி, தீண்டாமையின் அடுத்த கட்ட வளர்ச்சியை எட்டி இருக்கிறது தென்னேரி கிராமம். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் அருகே உள்ளது தென்னேரி. இங்கே சுமார் 500 தலித் குடும்பங்களும் 10 இருளர் குடும்பங்களும் 10 முதலியார் குடும்பங்களும் வசிக்கின்றன. யாதவா தெருவில் ஏகாம்பரம் என்பவருக்கு டிராக்டர் ஷெட் இருக்கிறது. அதன் அருகே குடி இருந்த இரண்டு குடும்பங்களைக் காலி செய்வதற்கு கூலிப் படை களம் இறங்கியுள்ளது. வீட்டை புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கியதுடன் நில்லாமல், அந்தக் குடும்பங்களுக்கு உதவி செய்ய வந்தவர்களையும் அடித்து உதைத்து காயப்படுத்தி விட்டார்கள். பலரும் காஞ்சிபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

என்னதான் நடந்தது?

வீட்டைக் காலி செய்ய கூலிப்படை!

''ஏகாம்பரம் வீட்டில் வேறு சாதியைச் சேர்ந்த இந்த இரண்டு குடும்பங்களும் கடந்த 10 ஆண்டு களுக்கும் மேலாக மாதம் 100 ரூபாய் சம்பளத்தில் கொத்தடிமையாக வேலை பார்த்தார்கள். அதனால் டிராக்டர் ஷெட் அருகே குடிசை போட்டுக்கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு அங்கே வந்த ஆர்.டி.ஓ. வீரப்பன், 'இது புறம்போக்கு நிலம். நான் உங்களுக்குப் பட்டா வாங்கித் தருகிறேன்’ என்று சொல்ல, அப்போதுதான் இந்த இடம் ஏகாம்பரத்துக்குச் சொந்தமானது அல்ல என்று தெரிந்திருக்கிறது. அவர்கள் பட்டா பெறுவதற்கான முயற்சியில் இறங்கவே, முளைத்தது பிரச்னை. வீடுகளை காலி செய்யச் சொல்லி அவர்களை மிரட்டத் தொடங்கினார் ஏகாம்பரம். மிரட்டலுக்குக் கீழ்ப்படியாமல் போகவே கூலிப்படையை ஏவி, நினைத்ததை சாதித்துக் கொண்டார்'' என்று ஊர் மக்கள் இருண்ட முகத்துடன் பேசினார்கள்.

வீட்டைக் காலி செய்ய கூலிப்படை!

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அடைக்கலம் கொடுத்து வைத்திருக்கும் கார்த்தி, ''எங்க சனங்க யாருமே இந்த ஊர்ல இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறாங்க. அன்னைக்கு நாங்க பட்ட வேதனை உலகத்துல யாருக்கும் வரக்கூடாது. பொருளையெல்லாம் அள்ளிக்கிட்டு வரலாம்னு குனிஞ்சா அடி, நிமிர்ந்தா அடி, நடந்தா அடின்னு சின்னப் பசங்களைக்கூட விடலை. யாருக்கும் தகவல் சொல்லகூடாதுன்னு எங்க செல்போனை எல்லாம் பிடுங்கிட்டாங்க. இன்னிக்கு வரைக்கும் திருப்பித் தரலை!'' என்றார்.

வீட்டைக் காலி செய்ய கூலிப்படை!

தி.மு.க-வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் வினோபாஜி, ''எனக்கு எதுவுமே தெரியாது. எல்லாம் முடிஞ்ச பின்னால்தான் எனக்கு விவரம் தெரியும். நான் ஊரில் இல்லை'' என்று முடித்துக் கொண்டார்.

''அன்னைக்குக் காலைல கும்பலா வந்தாங்க. என்ன ஏதுன்னு சுதாரிக்கிறதுக்குள்ள அடிக்க ஆரம் பிச்சாங்க. என்னை அடிச்சு சித்ரவதை செஞ்சு என் வீட்டுக் கூரை மேல கட்டாயப்படுத்தி ஏற வச்சு நானே கூரையைப் பிய்க்கிற மாதிரி போட்டோ எடுத்தாங்க. அப்புறம் அவங்களே எல்லாத்தையும் பிச்சுப்போட்டாங்க. எங்க கண்ணெதுக்கவே என் வீட்டை நாசமாக்கிட்டாங்க!'' என்று குமுறினார் பாதிக்கப்பட்ட தேவராஜன்.

காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த ஜெஸி, ''தகவல் கிடைச்சு நாங்க பேச்சுவார்த்தைக்குப் போனோம். அப்போ கார்த்தியை 'இவன்தான் எல்லாத்துக்கும் காரணம்’னு சொல்லி அடிச்சிக்கிட்டு இருந்தாங்க. போலீஸ் இருந்தும் அதைத் தடுக்கலை. மன்றத்தைச் சேர்ந்த மஹா அதை போட்டோ எடுத்தாங்க. அவங்க கேமராவைப் பிடுங்கினாங்க. மேகலாவை விரட்டி அடிச்சாங்க. நிலைமை ரொம்ப மோசமா இருந்தது. காரை எடுக்கலாம்னு பார்த்தா முடியலை. நாங்க தப்பிச்சதே பெரிய விஷயம்'' என்றார் ஜெஸி.

''காவல்துறையில் புகார் கொடுத்தோம். சாதாரண செக்ஷன்லதான் வழக்குப் போட்டாங்க.  விடாம டி.எஸ்.பி., கலெக்டர்னு எல்லார்கிட்டயும் முறையிட்டோம். நிறைய பேருக்கு மெயில் அனுப்பினோம். எல்லாரும் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவே, வேற வழியில்லாம இப்போ எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின்படி வழக்குப் போட்டிருக்காங்க!'' என்கிறார் காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த கீதா.

ஏகாம்பரம் வீட்டுக்குச் சென்று விளக்கம் கேட்க முயன்றோம். அவரது மனைவி சுசீலா, ''என் வீட்டுக்காரர் வெளியூருக்குப் போயிருக்கார். அது எங்க நிலம். என் பேர்லதான் இருக்கு. நாங்க பட்டா வாங்கியிருக்கோம். நாங்க யாரும் அவங்க மேல கையை வைக்கலை. நாங்க கூரையைப் பிய்க்கலை. அவங்களேதான் வீட்டை காலி பண்றதுக்காகக் கூரையைப் பிச்சாங்க. அப்போ எடுத்த போட்டோ கூட இருக்கு. அவங்க பொய் சொல்றாங்க'' என்றார்.

பட்டா வாங்கித் தருகிறேன் என்று சொன்ன ஆர்.டி.ஓ. வீரப்பன், ''அந்த நிலத்துக்கு அருகில் கோயில் இருப்பதால் அது தொல்பொருள் துறை யின் கீழ் வருகிறது. அங்கே பட்டா கொடுக்க முடியாது. அதற்கு பதிலாக ஊருக்குள்ளேயே அந்த இரண்டு குடும்பங்களுக்கும் நிலம் வழங்க முடிவாகி இருக்கிறது'' என்றார்.

காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சந்திரசேகரன், ''அனுபவப் பாத்தியதை இருக்கிறதால ஏகாம்பரம்  அந்த இடத்துக்குக் கிரையம் வாங்கியிருக்கார். பட்டா வாங்கலை. ஏகாம்பரமும் ஆபெலும் தலைமறைவாக இருக்கிறார்கள். இன்றைக்குத்தான் கோர்ட்டில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களைப் பிடித்தால்தான் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த விவரங்கள் தெரியவரும்!'' என்றார்.

எளியோரை வலியோர் தாக்கினால், சட்டம்தான் உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

- கவின் மலர்

படங்கள்: பொன்.காசிராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு