Published:Updated:

''குழந்தைகளைக் கொஞ்சவும் பயமா இருக்கு!''

வேதனையில் புதுச்சேரி பிரேதப் பரிசோதனையாளர்கள்!

பிரீமியம் ஸ்டோரி
##~##
''குழந்தைகளைக் கொஞ்சவும் பயமா இருக்கு!''

'அழுகிய உடலைப் பரிசோதனை செய்யும்போது தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. எங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கும் கத்திகூட துருப்பிடித்த நிலையில் இருக்கிறது. எங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வே கிடையாதா?’ என்று ஒரு குரல் ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) வேதனையைக் கொட்டி இருந்தது. 

குரல் வந்த, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்குப் போனோம்...

பிரேதப் பரிசோதனைப் பணியில் ஆறு ஊழியர்கள் வரை சுழற்சி முறையில் வேலை செய்ய வேண்டும். ஆனால் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பல வருடங்களாகப் பிரேதப் பரிசோதனையாளர்களாக மாயகிருஷ்ணன், மணி இளங்கோ என்ற இருவர் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள்.

முதலில் மாயகிருஷ்ணனிடம் பேசினோம். ''இந்தத் தொழில் எனக்குத் தெய்வம் மாதிரிங்க. இருந்தாலும் உண்மையைச் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கோம். முறைப்படி பார்த்தா மார்ச்சுவரி அட்டெண்டர்தான் போஸ்ட்மார்ட்டம் பணியைச் செய்யணும். ஆனா, இங்க மட்டும்தான் வார்டு அட்டெண்டர் பதவியில் இருக்கும் நாங்கள் இருவரும் போஸ்ட்மார்ட்டம் செய்கிறோம். என்ன காரணத்தாலோ, நீண்ட காலமாகவே மார்ச்சுவரி அட்டெண்டர் பதவி நிரப்பப்படாமலே இருக்கிறது.

''குழந்தைகளைக் கொஞ்சவும் பயமா இருக்கு!''

97-ல் வார்ட் அட்டெண்டராக மருத்துவமனையில் சேர்ந்தேன். 15 வருடங்களில் சுமார் 6,000 பிணங்களுக்கு மேல் போஸ்ட்மார்ட்டம் செய்து இருக்கிறேன். ஆனால், மருத்துவமனையில் நோயாளிகளுக்குச் சாப்பாடு செய்பவர்களைவிட எங்களுக்குச் சம்பளம் மிகவும் குறைவு. ஒரு வாரத்துக்குக் குறைந்தது 15 பிணங்களுக்குக் குறையாமல் வருகிறது. அதில் அழுகிய பிணங்களும் அடக்கம்.

இறந்து சில மணி நேரம் ஆனவர்களின் உடம்பைத் திறந்தாலே, அதில் இருந்து வரும் வாடை தாங்க முடியாத அளவுக்கு இருக்கும். அதிலும் நான்கு நாட்களுக்கு மேல் அழுகிய பிணம் என்றால்...

''குழந்தைகளைக் கொஞ்சவும் பயமா இருக்கு!''

தாங்கவே முடியாத அளவுக்கு இருக்கும். உடம்பின் கடினமான பகுதியே மண்டை ஓடுதான். சில நேரங்களில் அந்த மண்டை ஓட்டைத் திறக்கும்போது... கையில் குத்தி, பலமான காயங்கள் ஏற்பட்டுவிடும். வேலை முடிந்து வீட்டுக்குப் போன பிறகும்கூட, அந்த வாடை கூடவே இருக்கும். எய்ட்ஸ், டி.பி., மஞ்சக் காமாலை, டெங்கு, பால்வினை நோய் பாதிக்கப்பட்டு இறந்தவங்க பாடியைச் சுத்தப்படுத்தும்போது, ரொம்பவும் பயமா இருக்கும்.

முன்பு எய்ட்ஸ் நோயாளி ஒருவரின் உடம்பு பிரேதப் பரிசோதனைக்கு வந்தது. அப்போது டாக்டரிடம், 'எனக்கு பாதிப்பு வர வாய்ப்பு இருக்குதா?’னு கேட்டேன். 'ஆண்டவனை வேண்டிக்கோ’னு சாதாரணமா சொல்றார். டியூட்டியை முடிச்சுட்டு வீட்டுக்குப் போனா... குழந்தைகளைக் கொஞ்சவும் யோசனையா இருக்குது. நம்ம உடம்புல இருந்து கிருமிகள், குழந்தைகளைத் தாக்கிடுமோன்னு பயமா இருக்குது. இரண்டு பேர் மட்டும் இருப்பதால், தினமும் நரக வேதனை அனுபவிக்கிறோம்... எப்போது விடிவு வரும்னே தெரியலை'' என்றார் மாயகிருஷ்ணன் வருத்தத்துடன்!

அடுத்துப் பேசிய மணி இளங்கோ, ''தொடர்ந்து நாங்கள் இருவர் மட்டுமே போஸ்ட்மார்ட்டம் செய்து வருவதால், அடிக்கடி தொற்று நோய் ஏற்படுகிறது. இந்த வேலையை எளிதில் செய்வதற்குப் போதுமான கருவிகள் கிடையாது. மேலும் சில கருவிகள் துருப்பிடிச்ச நிலையில்தான் இருக்கிறது. மருத்துவமனை நிர்வாகம் இதைக் கண்டுகொள்வது இல்லை என்பதால், நாங்களே கடைக்கு எடுத்துச் சென்று வெல்டிங் வைத்துப் பயன்படுத்தி வருகிறோம். பிரெஞ்சு காலத்தில் கட்டப்பட்ட இந்த அறை, இன்னமும் கொடுமையாக இருக்கிறது. நாங்கள் பார்க்கும் வேலைக்குத் தகுந்த மார்ச்சுவரி அட்டெண்டர் போஸ்ட் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் சுழற்சி முறையில் இந்த வேலையைச் செய்வதற்குக் கூடுதல் ஆட்களைப் போடணும். பிரேதப் பரிசோதனை செய்ப வர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது மருத்துவப் பரிசோதனை செய்யணும்'' என்றார் அவர்.

இது குறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இயக்குநர் கே.வி.ராமனிடம் பேசியபோது, ''திடீர் என்று அவர்களுக்கு வேறு ஒரு பதவி தருவதற்கு, அரசு விதிகளில் இடம் இல்லை. அதற்கு சில காலம் ஆகும். அதுவரையிலும் சுழற்சி முறையில் பிரேதங்களைச் சுத்தப்படுத்துவதற்குத் திட்டமிட்டு உள்ளோம். அவர்களுக்குத் தேவையான புதிய உபகரணங்கள் வாங்கிக் கொடுக்கப்படும்'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.    

உயிரைக் காக்கும் தொழிலும்... உயிரற்ற உடலுக்குச் செய்யும் தொழிலும் ஒன்றுதானே. இவர்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கட்டும்!

   - நா.இள. அறவாழி, படங்கள்: ஆ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு