Published:Updated:

''நான் செய்த நான்கு தவறுகள்!''

செந்துறையில் ராசா ஒப்புதல் வாக்குமூலம்

பிரீமியம் ஸ்டோரி
##~##
''நான் செய்த நான்கு தவறுகள்!''

.ராசாவின் பெரம்பலூர் வருகையைக் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள் அவரது ஆதரவாளர்கள். ஒரு வருட சிறை வாசத்துக்குப் பிறகு ஜாமீனில் தமிழகம் வந்த ஆ.ராசா... சென்னை, நீலகிரி, திருவாரூர் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, 18-ம் தேதி தனது சொந்த ஊரான பெரம்பலூருக்கு வந்தார். 

சென்னை, நீலகிரியைவிடவும் பலமான வரவேற்பு. பெரம்பலூர், அரியலூர் நகரங்கள் முழுக்க கட் - அவுட்கள் பளபளத்தன. 'திகாரை வென்ற தீரனே!’, 'திராவிட இயக்கத்தின் ஐந்தாம் தலைமுறையே!’, 'அடக்கு முறைக்கு அஞ்சாத தலைவரின் தளகர்த்தரே!’, 'கழகத்தின் ஃபீனிக்ஸே!’ என்று பேனர்கள் வரவேற்பு அளித்தன. 'ஐந்தாம் தலைமுறையே’ என்பதற்கு என்ன அர்த்தம் என்றுதான் உடன்பிறப்புகள் மத்தியில் பலத்த விவாதம். ஸ்டாலினுக்கு அடுத்து ராசாதான் கட்சியின் முக்கியத் தலைவர் என்று பலரும் அர்த்தம் சொன்னார்கள்.

18-ம் தேதி மதியம் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்து சேர்ந்தார் ராசா. கே.என்.நேருவை அவரது வீட்டில் சந்தித்து ராம ஜெயத்தின் சாவுக்காகத் துக்கம் விசாரித்துவிட்டு, பாடாலூருக்கு வந்து சேர்ந்தபோது, இரவு 7.15. மணி. தொண்டர்களும் பொதுமக்களும் ராசாவின் காரை சூழ்ந்துகொள்ள, பாதுகாப்புக்காக வந்திருந்த போலீஸார் அவர்களைக் கட்டுப்படுத்துவதற்குள் திக்குமுக்காடிப்போனார்கள்.

''நான் செய்த நான்கு தவறுகள்!''

நாரணமங்கலம், சிறுவாச்சூர் வழியாக துறை மங்கலம் வந்தபோது, செண்டை மேளம் முழங்க, பெண்கள் கும்பம் எடுத்து வரவேற்பு கொடுத்தார்கள். அந்த நேரத்தில் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்துக்கு முன் சாலையில் இருந்த சோடியம் விளக்குகள் அணைக்கப்பட்டன. உடனே ஆத்திரம் அடைந்த தொண்டர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வளைவு அருகே சாலை மறியலில் இறங்கினார்கள் என்றாலும் பலன் இல்லை. இரவு 9.15 மணியளவில் ஆ.ராசா அலுவலகத்தில் நுழைந்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பத்திரிகையாளர்கள், ஆரத்தி தட்டுடன் இருந்த பெண்கள் உட்பட பலரும் மாட்டிக்கொண்டார்கள். காரில் இருந்து இறங்கிய ராசா சரசரவென அலுவலகத்தில் நுழைந்ததும் கதவுகள் அடைக்கப்பட்டன. மாவட்டச் செயலாளர் துரைசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் வெளியே பரிதாப மாகக் காத்திருந்தனர். 'நான் மாவட்டம்... என்னை உள்ளேவிடுங்கப்பா’ என்று துரைசாமி கெஞ்சிக் கூத்தாடிய பிறகே உள்ளே நுழைய முடிந்தது.

''நான் செய்த நான்கு தவறுகள்!''

மறுநாள் 19-ம் தேதி அரியலூர் சுற்றுப்பயணம். குன்னம் வழியாக அரியலூர் சென்று ரயில்வே கேட், பஸ் ஸ்டாண்ட், கடை வீதி ஆகிய இடங்களில் மக்களைச் சந்தித்தார். ''2ஜி பிரச்னையில் 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என சொன்னார்கள்; 35 ஆயிரம் கோடி இழப்பு என்று சொன்னர்கள். ஆனால், நீதிமன்றத்தில் சார்ஜ் சீட் போடும்போது, முறைகேடு நடந்திருப்பதை நீதிபதி ஒப்புக்கொள்ளவில்லை. உரிமம் வழங்கியதில் குளறுபடி நடந்து இருக்கலாமே தவிர, நாட்டுக்கு இழப்பு என்றோ நஷ்டம் என்றோ நீதிபதிகள் சொல்லவில்லை.

நான் தவறு செய்யவில்லை என்று பேசுவதாக பத்திரிகைகள் எழுதுகின்றன. நான் கடந்த காலங்களில் நான்கு தவறுகள் செய்துவிட்டேன். முதல் தவறு, இந்தியக் குடிமகன் சராசரியாக மாதம் 310 ரூபாய் செல்போன் கட்டணமாகச் செலுத்தி வந்ததை, 100 ரூபாயாகக் குறைத்தேன். இரண்டாவது தவறு, நிமிடத்துக்கு ஒரு ரூபாயாக இருந்த செல்போன் கட்டணத்தை 30 பைசாவாகக் குறைத்தது. நான் பதவி ஏற்றபோது 100 கோடி மக்கள் தொகைகொண்ட இந்தியாவில், 30 கோடி பேரே செல்போன் வைத்திருந்தார்கள். ஆனால், நான் ராஜினாமா செய்யும்போது 90 கோடி பேர் பயன்படுத்தினார்கள். இதுதான் நான் செய்த மூன்றாவது தவறு. சிலரின் ஆதிக்கத்தில் இருந்த ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கும் முறையை மாற்றி, புதிய கம்பெனிகளைக் கொண்டுவந்ததுதான் நான் செய்த நான்காவது தவறு'' என்றதும் கூட்டத்தில் பலத்த ஆரவாரம்!

- சி.ஆனந்தகுமார்

படங்கள்: எம்.ராமசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு