Published:Updated:

கோவையும் இனி வறண்டுபோகும்?

அட்டப்பாடி அணை ஆபத்து

பிரீமியம் ஸ்டோரி
##~##

முல்லை பெரியாறு அணை விவ காரத்தில் மூக்குடை பட்ட கேரள அரசு, அடுத்து அட்டப்பாடி அருகே வாலாட்டுகிறது. 

மேற்குத் தொடர்ச்சி மலையில் கோவை அருகே தமிழக வனப் பகுதியில் உருவாகும் பவானி ஆறு, கேரளா நோக்கிப் பாய்ந்து பின் தமிழகத்துக்கு வருகிறது. இந்த நீரினால் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட் டங்கள் பயன் பெறுகின்றன. இந்த நிலையில் அட்டப்பாடி பகுதியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை ஒன்றைக் கட்ட முடிவு செய்துள்ளது கேரள அரசு. கடந்த வாரத்தில் திருவனந்தபுரத்தில் இந்தத் திட்டத்துக்கான முதற்கட்ட ஆலோசனைகள் முடிந்திருக்கும் தகவல் தமிழகத்தில் பரவவே, கொந்தளிக்கிறது மேற்குத் தமிழகம்.

கோவையும் இனி வறண்டுபோகும்?

கேரள அரசுக்கு எதிராக பல அமைப்புகள் பரபர முஸ்தீபுகளில் இறங்கியிருக்கும் நிலையில், கோவை மாவட்ட ம.தி.மு.க. மேட்டுப் பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.  கட்சியின் கோவை

கோவையும் இனி வறண்டுபோகும்?

புறநகர் மாவட்டச் செயலாளர் ஈஸ்வரன் பேசும்போது, ''கேரளாவில் ஆண்டுக்கு 2,000 டி.எம்.சி. தண்ணீர் வரத்து உள்ளது. தமிழகத்தின் பரப்பளவில் பாதி அளவு மட்டுமே இருக்கிற கேரளத்துக்கு அவ்வளவு நீர் தேவை இல்லாதது. மேலும் பெருமளவு நீர் கடலில் சென்று வீணாகத்தான் கலக்கிறது. ஆனால், தண்ணீர் தேவை இருக்கும் தமிழகத்தின் நீர் ஆதாரங்களை முடக்கும் வேலைகளை மட்டும் தொடர்ந்து செய்கிறது கேரளா. புதிய தடுப்பு அணை கட்டினால், பில்லூர் அணைக்கு வரும் நீரில் நான்கில் ஒரு பங்கு குறையும். இதனால் கோவை மாநகராட்சிக்கும் சுற்றுப்பட்டுக் கிராமங்களுக்கும் குடிநீர்த் தேவை கேள்விக்குறியாகும்.. பவானிசாகர் அணை மூலம் பாசனம் செய்துவரும் லட்சக்கணக்கான விவசாயிகள் வாழ்விழந்துபோகும் அபாயம் இருக்கிறது. சிறுவாணியில் இருந்து கிடைக்கும் குடிநீரின் அளவும் குறைந்துபோகும். மொத்தத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டு வறட்சிக்கு ஆளாவார்கள்.

1980-ல் வெங்ககடவு, 2002-ல் முக்காலி ஆகிய பகுதிகளில் அணை கட்டும் முயற்சியில் இறங்கித் தோற்றவர்கள், இப்போது அடுத்த அணையை ஆரம்பிக்க நினைக்கிறார்கள். இந்திய இறையாண்மைக்கும் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் தொடர்ந்து ஊறு விளைவிக்கும் கேரளாவை மத்திய அரசு கண்டிப்பதாக இல்லை. எனவே தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு கேரள அரசைத் தடுத்து நிறுத்த வேண்டும்!'' என்றார் திருத்தமாக.

கேரளப் பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் பேசியபோது, ''அட்டப்பாடியில் அணை கட்டும் திட்டம் தொடர்பாக இப்போதைக்கு வெளிப்படையாகப் பேச முடியாது. எங்கள் மாநில வளர்ச்சிக்காகத் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைகள் செய்வதை, தமிழகக் கட்சிகள் எங்களை எதிர்ப்பது கண்டனத்துக்கு உரியது'' என்கிறார்கள்.

தமிழக அரசு இப்போதே உஷாராவது நல்லது!

- எஸ்.ஷக்தி, படங்கள்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு