Published:Updated:

காதலனுக்குத் திருட்டுப் பட்டம்!

போலீஸ் விபரீத விளையாட்டு

பிரீமியம் ஸ்டோரி
##~##
காதலனுக்குத் திருட்டுப் பட்டம்!

'வேற சாதிப் பையனை ஆசைப்பட்டு கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். ஆனா, வாழப்பாடி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் என் புருஷன்மேல பொய் கேஸ் போட்டு எங்களைப் பிரிக்கப்பார்க்கிறார். நீங்கதான் காப்பாத்தணும்’ - ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்குப் (044- 66808002) போன் செய்த ஒரு பெண், தேம்பித் தேம்பி அழுதிருந்தார். 

உடனடியாக அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டு பேசினோம். ''என் பேரு பிரியா. சேலம் மாவட்டம் வாழப்பாடி பக்கத்துல இருக்கும் குறிச்சி அணைமேடு கிராமம்தான் என்னோட ஊரு. நான் ஸ்கூல் படிக்கிற காலத்துல இருந்தே எனக்கு ரமேஷ் பழக்கம். அவரை லவ் பண்ணினேன். ரமேஷ் வேற சமுதாயத்தைச் சேர்ந்தவர். அதனால பார்த்துப் பேசினா பிரச்னையாகிடும்னு, கண்களால் மட்டும்தான் பேசிக்குவோம்.

ஸ்கூல் முடிச்ச பிறகு சேலத்துல ஒரு காலேஜ்ல  சேர்ந்தேன். அதே காலேஜ்ல ரமேஷ§ம் பஸ் டிரைவரா  சேர்ந்தார். அதுக்குப் பிறகு எங்களுக்குப் பேசுறதுக்கும் பழகுற துக்கும் பிரச்னை இல்லை. எங்க காதல் நாலு வருஷங்களாவே நல்லா போயிட்டு இருந்துச்சு. நான் காலேஜ் முடிச்சதும் எங்க வீட்டுல விஷயத்தைச் சொன்னேன். 'ஒரு பிச்சைக்காரனுக்குக் கட்டிக் கொடுத் தாலும் கொடுப்போமே

காதலனுக்குத் திருட்டுப் பட்டம்!

தவிர... அந்த சாதிப் பயலுக்கு உன்னைக் கட்டிக் கொடுக்க மாட்டோம். நீ அடம் பிடிச்சா உன்னை வெட்டிப் போடவும் நான் தயங்க மாட்டேன்’னு எங்க அப்பா சத்தம் போட்டார்.

ரமேஷ் இல்லாம வாழ முடியாதுன்னு முடிவு பண்ணி, ஒரு நாள் வீட்டைவிட்டு வந்துட்டேன். ரமேஷ§ம் நானும் மேஜர். கோயில்ல கல்யாணம் பண்ணிக்கிட்டு, வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷன்ல பாதுகாப்பு கேட்டுப் போனோம்.

ஸ்டேஷன்ல இருந்த இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமாரும், எஸ்.ஐ. வேதபிறவியும் எங்க வீட்டு ஆளுங்களுக்கு சாதகமாப் பேசி எங்களை அசிங்கமாத் திட்டினாங்க. நான் ரமேஷ்கூடத்தான் போவேன்னு உறுதியாச் சொன்னதும், எழுதி வாங்கிட்டு அனுப்பிட்டாங்க. எங்க பெரியப்பா பையன் பாலமுருகனும் அதே ஸ்டே ஷன்ல ஏட்டா இருக்கார். ஒரு வாரத்துக்குப் பிறகு திடீர்னு ரமேஷ் மேல, எங்க வீட்டுல இருந்து பணமும் நகையும் திருடிட்டதாக பொய்யான ஒரு புகாரைக் கொடுக்கவெச்சு, வழக்குப் பதிவு பண்ணிட் டாங்க.  போலீஸ் கையில சிக்கினா ரமேஷைக் கண்டிப்பா ஏதாவது பண்ணிடுவாங்கன்னு பயந்து, நாங்க ஒரு வாரமா தலைமறைவா இருக்கோம். லவ் பண்ணியது மட்டும்தாங்க நாங்க செஞ்ச ஒரே தப்பு. அதுக்கு எப்படி எல்லாம் பிரச்னை பண்றாங்க பாருங்க...'' என்று அழ ஆரம்பித்தார்.

அருகில் இருந்த ரமேஷ், ''இந்தப் புள்ளைய பணத்துக்காகவோ, சொத்துக்காகவோ நான் காதலிக் கலைங்க. எனக்குப் பிடிச்சிருந்தது. கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எங்களுக்கு எதுவுமே

காதலனுக்குத் திருட்டுப் பட்டம்!

வேணாம். நிம்மதியா வாழவிட்டா போதும். அவங்க வீட்ல பணம் வாங்கிட்டு... அந்த இன்ஸ்பெக்டர் என்னை இப்படி விரட்டுறார்!'' என்றார் விரக்தியாக.

பிரியாவின் அப்பா அர்ஜுனனிடம் பேசினோம். ''21 வயசு வரைக்கும் நான் பொத்திப் பொத்தி வளர்த்த பிள்ளைங்க. எங்க சாதியில ஒரு பையனை இழுத்துட்டுப் போயிருந்தாலாவது சரின்னு விட்டிருப்பேன். இப்போ என்னால ஊருக்குள்ள தலை காட்ட முடியலை. நாங்க வீட்டுல இல்லாத நேரமாப் பார்த்து, எல்லாத்தையும் சுருட்டிட்டுப் போயிட் டாங்க. அதான் புகார் கொடுத்தேன். பெத்த வனா இருந்து யோசிச்சுப் பாருங்க... என் வலி புரியும்'' என்கிறார்.  

வாழப்பாடி காவல் நிலையத்துக்குப் போனோம். இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமாரிடம் கேட்டபோது, ''கல்யாணம் நடந்ததையும், திருட்டு சம்பவத்தையும் எதுக்கு முடிச்சுப் போட்டுப் பேசுறீங்க? அது வேற... இது வேற...'' என்றார் அவசரமாக. அவர் சொல்வதை நாம் பதிவுசெய்ய ஆரம்பித்ததும், ''யோவ்.. எதுக்குய்யா ரெக்கார்டு பண்ற? நான் பேசுறதை ரெக்கார்டு பண்ற அதிகாரத்தை உனக்கு யாரு கொடுத்தது? முதல்ல ஸ்டேஷனைவிட்டு வெளியே போய்யா...'' என்று  டென்ஷன் ஆனார். ''இதெல்லாம் சின்ன விஷயம் நாங்க பார்த்துக்குறோம்.  எழுதுறதுக்கு உங்களுக்கு வேற மேட்டரா இல்லை?'' என்று வம்படியாக நம்மை அனுப்புவதில்தான் குறியாக இருந்தார்.

காதலனுக்குத் திருட்டுப் பட்டம்!

இப்போது ரமேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வாங்கி இருக்கிறார். இனியாவது காதல் ஜோடியை காவல் துறை பிரிக்காமல் இருக்கட்டும்!

- வீ.கே.ரமேஷ், படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு